நல்வரவு_()_


Saturday, 6 February 2010

" பாட்டி" (ஆரம்பப் பகுதி)



கேட்டவை, அறிந்தவற்றையும் என் கற்பனையையும் சேர்த்து நானே, கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன் எழுதிய ஒரு சிறுகதை...

"பாட்டி"

பாட்டியை நினைக்கும்போதே நெஞ்சுக்குள் ஏதோ செய்கிறது. தொண்டைக்குள் ஏதோ வந்து அடைப்பதுபோல் இருக்கிறது.என் பாட்டியைப்பற்றிச் சொல்வதானால் ஒரு புத்தகமே எழுதலாம்.

நான் எந்தளவிற்கு என் அப்பா, அம்மாவை நேசிக்கிறேனோ அந்தளவிற்கு என் பாட்டியையும் நேசித்தேன். என்னைப் பொறுத்தவரை, எல்லாமே எனக்குப் பாட்டிதான். ஒரு நல்ல தோழியாக, நல்ல ஆசானாக, நல்ல அறிவுரை கூறுபவராக, அதைவிட சிறந்த பாதுகாவலராக இருந்தார். அந்தப் பாட்டியை இன்று நான் இழந்துவிட்டேன்.

ஆமாம்!! பாட்டி இறந்து இன்றுடன் முப்பத்தைந்து நாட்கள் முடிந்துவிட்டன. எனக்கு எல்லாமே கனவாகத்தான் தெரிகிறது. அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் போகத் தொடங்கிவிட்டான். தம்பியும், மனம் தேறி பள்ளிக்கூடம் செல்ல ஆயத்தமாகிறான். அப்பா, அம்மா கவலைகளை மனதில் புதைத்தபடி, மெதுவாக பழைய நிலைமைக்குத் திரும்ப முயல்கின்றனர். எங்கள் அம்மா மனதில் இருக்கும் கவலைகளை முகத்தில் காட்டிக்கொள்ள மாட்டார். வீட்டுத்தலைவி சோர்ந்துவிட்டால் வீடே சோர்ந்துவிடுமல்லவா?அதனாலோ என்னவோ.

அப்பா, முகத்தில் சிரிப்பை உண்டாக்க நினைத்து தோல்வியுற்றவராக இருக்கிறார்.

என்னால் மட்டும் மனதைத் தேற்றவே முடியவில்லை. பாட்டி இல்லாமல் பாடசாலைக்குப் போவதை என்னால் நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. பாட்டி எனக்குச் சொல்வார், எக்காரணம் கொண்டும் கல்வியை நிறுத்தக்கூடாது என்று. வாழ்க்கையில் எதை இழந்தாலும், கல்வியை மட்டும் இழக்கக்கூடாது என்பார்.

பாட்டி ஒருநாள் சொன்னார், `நான் எவ்வளவு காலம் உன்னுடன் இருப்பேனோ தெரியவில்லை, ஆனால் நீ நன்றாகப் படித்து, அண்ணாவைப்போல் பல்கலைக்கழகம் செல்லவேண்டும்` என்று. பாட்டி இருந்தபோது அது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை, எதுவுமே எம்மோடு கூட இருக்கும்வரை, அதன் அருமை எமக்குத் தெரிவதில்லைத்தானே. இழந்தபின்னரே தெரிகிறது. இப்போது என் மனம் சொல்கிறது, பாட்டிக்காக நிட்சயம் நான் நன்றாகப் படிக்க வேண்டும், பல்கலைக்கழகம் செல்லவேண்டும் என்று.

காலையில் பாடசாலை செல்லும்போது, பாட்டிதான் எனக்குத் தலைவாரிப் பின்னிவிடுவார். எனக்கு அடர்த்தியான நீண்ட கூந்தல். அம்மாவிற்கு என்னால் எந்த வேலைக் கஸ்டமும் வந்ததில்லை, ஏனெனில், பாட்டியே எல்லாம் செய்துவிடுவார். பாட்டிக்கு இலவம் பஞ்சுமாதிரி நல்ல வெள்ளைமுடி, நீளமாக இருக்கும், எந்நேரமும் வாரிக் கொண்டை முடிந்திருப்பார். நான் பின்னேரங்களில் அவவுக்குத் தலை பின்னுவேன், உடனேயே கலைத்து கொண்டை போட்டுக்கொள்வார். வயதிற்கேற்ப தோற்றம் இருக்க வேண்டும் என்பார்.

ஒருபோதும், பாட்டி வருத்தமென்று படுத்து நான் கண்டதில்லை. கடைசியாக நான்கு நாட்கள்தான் படுக்கையாக இருந்தார். பின்னர் எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார். பாட்டி, வீட்டால் வெளிக்கிட்டது, ஏதோ பத்துப்பேர் குறைந்துவிட்டதுபோல இருக்கிறது. வீட்டில் பம்பரம்போல சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று, காற்றாய்ப் பறந்துவிட்டார்.

பாட்டி சொல்லியிருக்கிறார், ஏதாவது தாங்கமுடியாத துக்கம் ஏறட்டால், அதை மனதில் அடக்கி வைக்காமல், அதைப்பற்றி மீண்டும் மீண்டும் யாருடனாவது கதைத்துப் பகிர்ந்துகொண்டால் கொஞ்சம் பாரம் குறையுமென்று.

பின்னேரம் அண்ணனைக் கூப்பிட்டேன் “அண்ணன்!! கொஞ்ச நேரம் வந்து இப்படி இரேன்”. அண்ணன் அம்மாக்குச் சொன்னான் “அம்மா! பாட்டியை நினைத்து நினைத்து இவளுக்குப் பைத்தியமே பிடிக்கப்போகிறது, கெதியில் பள்ளிக்கு அனுப்புங்கோ” என்று. கூடவே, தன் நண்பனுக்கு நடந்த ஒரு கதையையும் சொன்னான்.

தன் நண்பனின் தந்தை திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டாராம். இதையறிந்த நண்பர்கள், அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்களாம். தனியே விட்டால் நண்பன் அதிகம் கவலைப்படுவான் என்று, தந்தையின் இறுதிக்கிரியைகள் முடியும்வரை கூடவே இருந்து, மறுநாள் பல்கலைக்கழக விடுதிக்குக் கூட்டிச் சென்றார்களாம்.

அப்போ நண்பனால் பேச முடியவில்லையாம், வாயசைக்க முடியாமல் போய்விட்டதாம். அதனால் வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்களாம், டாக்டர் செக்பண்ணிவிட்டுச் சொன்னாராம், தந்தை இறந்தபின் நண்பன் வாய் திறந்து அழவில்லையாம், நண்பர்களும் இருப்பதனாலோ அல்லது கூச்ச சுபாவத்தாலோ துக்கத்தை மனதிலேயே புதைத்திருக்கிறார், அதனால் அவரால் பேசமுடியாமல் போய்விட்டதாம் எனச் சொல்லி, குணமாக்கிவிட்டாராம்.

இந்தக் கதையையும் கேட்டதே, அம்மாவுக்கு இன்னும் கவலை அதிகமாகிவிட்டது, இவளுக்கும் ஏதும் வருத்தம் வந்துவிடப்போகிறது என்று அப்பாவுக்குச் சொல்லிக்கொண்டிருந்தா... தொடரும்.

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

மெழுகுவர்த்தி
-----------------------


தன்னை அழித்துப்
பிறர்க்குதவுவது
மெழுகுவர்த்தி
~ ~ ~ ~ ~ ~ ~ ~



புகைப்பிடித்தல்
------------------------


தன்னையும் அழித்துப்
பிறரையும் அழிப்பது
புகைப்பிடித்தல்
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

பின் இணைப்பு..
அன்பு இலா, செல்லமாக தன் "சூஸ்" இல் "பூஸ்" வைத்து அனுப்பியது... பூஸாவுக்காக..






"LIFE IS MILK AND THE LOVE IS SUGAR"

32 comments :

  1. முதல் சிறுகதைக்கு வாழ்த்துகள். உறவுகளும், நட்புகளும் மனத்தில் நினைவுகளாக வாழ்வன அவைகள் என்றும் அழிவதில்லை. என் அம்மா 1984, அப்பா 1996 இல இறந்து விட்டனர். நானும் அழுததில்லை, இன்னும் அவர்கள் என்னுடன் தான் வாழ்கிறார்கள். இழந்தால்தானே அழுவதற்கு...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. ஹாய்ய்ய் அதிரா நானும் வந்துட்டேன்.இன்னிக்குதான் உங்க வலைப்பூ கண்ணில் பட்டது.முதல் சிறுகதைக்கு வாழ்த்துக்கள்!!

    எனக்கு உங்களைமாதிரி பாட்டி அனுபவம் இல்லை ஏன்னா நான் பிறப்பதற்க்கு முன்பே காலமாயிட்டாங்க.உங்க கதையை படிக்கும்போது நம்ம பாட்டியும் நான் பிறக்கும்போது இருந்திருந்தால் எப்படியிருக்கும்னு நினைக்க தோனுது...
    என் பக்கமும் வாங்க அதிரா..

    ReplyDelete
  3. அதிரா,முதல் சிறு கதைக்கு வாழ்த்துக்கள்.டச்சிங் ஆன கதை.யாழ்பாண மக்களின் பேச்சு வழக்கம்.நடை முறையுடன் கூடிய ஒரு கதையை கதைங்களேன்.

    ReplyDelete
  4. Nice Story athiraa!!! I dont remember many things about my ammamma except the paruppu thuvaiyal and her big ear ring with red stones...

    ReplyDelete
  5. ஹைஷ் அண்ணன் மிக்க நன்றி. இது என் முதல் சிறுகதை இல்லை. நான் முதன்முதலில் ஸ்கூலில் நடந்த கதை கவிதைக் கண்காட்சியில் எழுதினேன், அதுவும் இரு நண்பர்களின் சோகக்கதை, அதைப்பார்த்திட்டு எங்கட ரீச்சர் கேட்டா... அதிரா உண்மையில் நீங்கள்தான் எழுதினனீங்களோ அல்லது எங்காவது பார்த்து எழுதினனீங்களோ என...(அவ்வளவு நன்றாக இருந்தது அக்கதை, 9 ம் வகுப்பில் எழுதினேன்) அத்தோடு என் கதை எழுதும் ஆர்வமே முளையில் கிள்ளுப்பட்டதுபோல விட்டுவிட்டேன். ஒரு ஆசிரியர் என்றால் ஊக்கம் கொடுக்கவேண்டுமல்லோ.

    இது 2ம் கதை, இதுவும் வேறு ஒரு பெயரில் வேறு ஒருவரின் தளத்தில் வெளியாக்கினேன்.. இப்போ தளம் இல்லாமல் போய்விட்டது... அதுதான் என் தளமே எனக்குதவி என இங்கு போட்டுவிட்டேன். 3வது கதை எழுதி இன்னொரிடம் அனுப்பினேன்.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இனி அதுவும் இங்கு வரும்.
    நான்காவது கதை பாதியில் நிற்கிறது, முடிக்க வேண்டும்.

    //இன்னும் அவர்கள் என்னுடன் தான் வாழ்கிறார்கள். இழந்தால்தானே அழுவதற்கு.../// இதயத்தைத் தொடும் வாக்கியம். உண்மைதான்.. இதில் பல அர்த்தம் இருக்கிறது, ஒன்று, அவர்கள் இல்லாமல் போய்விட்டதாக நாம் நினைக்கக்கூடாது, இன்னொன்று, எம் துணை வடிவில்.. நட்பு வடிவில் அவர்களைக் காணலாம்.. சரிதானே ஹைஷ் அண்ணன்.

    ReplyDelete
  6. மேனகா வாங்கோ நல்வரவு. தெரிந்தவர்கள் தேடி வரும்போது சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை. நீங்கள் உங்கள் புளொக் நேம் சொல்லவில்லை. விசாரித்து உங்கள் பெரிய மாளிகைக்கு வந்து கால் பதித்துவிட்டேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  7. ஸாதிகா அக்கா மிக்க நன்றி. இது அடுத்த பகுதியோடு முடியும், சிறுகதைதான். அதற்கடுத்தது அதிகம் யாழ்ப்பாணப்பாஷை கலந்திருக்கு. நான் கதைக்கும்போது யாழ்ப்பாணப்பாஷையில்தான் கதைப்பேன், ஆனால் எழுதும்போது அப்படி எழுத வராது, பழகிவிட்டது. ஆனால் அப்படியே எழுதினால் நிறையபேருக்குப் புரியாது.

    வீடு கிட்டடியாகவோ இருக்கு? என ஒருவரைக் கேட்டேன் போனில், அவர் திருப்பிக்கேட்டார்.. கிட்டடி என்றால் என்ன என்று:).

    ஆரெனச் சொல்லுங்கோ? என ஒருவரைக் கேட்டேன்... புரியவில்லை என்னது என்கிறார்:)...

    சத்தி பிரட்டாக இருக்கோ என்றால் அப்படியென்றால் என்னவாம்?

    வண்டி எப்படியிருக்கு என்று கேட்டேன்... காரைத்தானே கேட்டீங்கள் என்றார் ஒருவர்...

    அப்போ நான் எப்படி யாழ் தமிழ் கதைப்பது சொல்லுங்கோ:):).. உங்களுக்கு விளங்குதோ?

    ReplyDelete
  8. மிக்க நன்றி இலா. அம்மம்மாவின் சிவப்புக்கல்லுத் தோட்டில் ஒரு கண் வைத்திருக்கிறீங்கள்போல:) அதுதான் மறக்காமல் இருக்கிறீங்கள்.

    ReplyDelete
  9. கதை நன்றாக இருக்கிறது. சொல்லும் விதம் காட்சியை கண்ணில் கொண்டுவருகிறது.

    அதிரா! உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வருகிறீர்கள். சந்தோஷத்தைத் தருகிறது.

    அண்ணன் சொல்வது உண்மைதான். இழந்தால்தானே அழுவதற்கு.

    மறந்தால்தானே நினைப்பதற்கு.

    உறவுகள் தொடர்கதை
    உணர்வுகள் சிறுகதை
    ஒரு கதை என்றும் முடியலாம்
    முடிவிலும் ஒன்று தொடரலாம்.......

    தொடரட்டும் உங்கள் திறமைகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அதிரா,
    தாரளமாக யாழ் பாஷையில் எழுதுங்கோ.தவிர யாழ் உணவுகளான இடியாப்பம்,கிதிள்கருப்பாட்டி,தொதல் போன்ற பல உணவு வகைகளையும் கதையின் ஓட்டத்தில் அறிமுகப்படுத்துங்கள்.

    ஆரம்பத்தில் குமுதத்தில் இப்படிப்பட்ட சிறுகதைகள் என்னை வெகுவாக கவர்ந்தவை.அந்த ஈழ எழுத்தாள்ர் யார் என்பது ஞாபகம் இல்லை.

    கதையின் இறுதியில்
    கதிரை=நாற்காலி
    கிட்டடி=பக்கத்தில்
    ஆரு=யார்
    சத்திபிரட்டு=வாந்தி(சரியோ)
    கதைப்பது=பேசுவது

    இப்படி டிஸ்கி போட்டு விடுங்க.புரியாதவர்களும் புரிந்து கொள்வார்கள்.இந்த அக்காகிட்டே நிறைய இப்படி ஐடியா இருக்கு.அப்பப்ப கேட்டு வாங்கி யூஸ் பண்ணிக்கோங்கோ.வரட்டா..?

    ReplyDelete
  11. அதிரா நல்ல கதை அதிலும் பாஷை ரொம்ப அழகா இருக்கு அதிரா. எங்கள ஊரிலும் கிட்டடி என்று கதைப்போம். கிட்டடி என்றால் எங்கட பாசை, எங்கட பலகாரம் எல்லாம் நிங்களும் செய்யறிங்க.

    ReplyDelete
  12. இளமதி மிக்க நன்றி.

    அழகாகச் சொல்லிட்டீங்கள்...//மறந்தால்தானே நினைப்பதற்கு///

    ReplyDelete
  13. //வண்டி எப்படியிருக்கு என்று கேட்டேன்...//
    ஜீனோவின் வண்டி கெல்லாக்ஸா தின்று காஞ்சு போய்கிடக்கு அதிராக்கா! :(
    ;) :D X5

    இங்கெல்லாரும் யாழ் தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்! தைரியமாய்க் கதையுங்கோ..புரியலைஎன்றால் கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்!

    கதாசிரியருக்கு ஜீனோவின் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. ஸாதிகா அக்கா!! பெரிய பதிவு போட்டுவிட்டு ஓடினேன்.. வந்து பார்த்தால் காணவில்லை, கடவுளே பட்டப்பகலில் பதிவைக்கூட கொள்ளை அடிக்கிறார்களே!! இது திரும்பவும் ஒவ்வொரு எழுத்தாக் குத்துகிறேன்..

    தவிர யாழ் உணவுகளான இடியாப்பம்,கிதிள்கருப்பாட்டி,தொதல் போன்ற பல உணவு வகைகளையும் கதையின் ஓட்டத்தில் அறிமுகப்படுத்துங்கள்./// என்ன இப்படிச் சொல்லிப் புளியைக் கரைக்கிறீங்க. நான் இப்போ கொஞ்ச நாட்களாகத்தான் குறிப்பே செய்யாமல் இருக்கிறேன்.

    எனக்கு சமையல் குறிப்புக் கொடுப்பது பெரிதாக விருப்பமில்லை ஸாதிகா அக்கா, காரணம் அது சரியான கஸ்டம். அளந்து அளந்து எடுத்து, அழகாக அடுக்கி, படமெடுத்து, குறிப்பெழுதி, பின் ரைப்பண்ணி, படங்கள் இணைத்து... எவ்ளோ கஸ்டம் தெரியுமோ? நான் ”அங்கு”, என்னால் முடிந்த பங்களிப்பையும் செய்யவேண்டும், அரட்டைபண்ணினால் மட்டும் போதாது என்றுதான்.. கொடுத்தனான்... எனக்கு இப்படியான கவிதை, கதை... பொதுவிஷயங்கள், நகைச்சுவை இவற்றில்தான் நாட்டம் அதிகமாக்கும்.பின்னர் மனம் வந்தால் பார்க்கலாம்????.

    உங்கள் ஐடியாக்களுக்கு மிக்க நன்றி. ஆனால் நாமே கருத்தையும் சொல்லப்படாது, அது வாழைப்பழத்தை உரித்துக்கொடுத்தது போலாகிவிடும். முன்பு என் குறிப்புக்களில் ஒருவராவது வந்து கேட்பினம். தேசிக்காய் என்றால் என்ன? என. பின்னர் எல்லோருக்கும் பழகிவிட்டது. ஏன் ஓடுறீங்க ஸாதிகா அக்கா. வண்டி என்றால் என்ன சொல்லிட்டுப்போங்கோ:).

    ReplyDelete
  15. விஜி வாங்கோ மிக்க நன்றி. கிட்டடி என நீங்களும் கதைப்பீங்களோ? திருமதி ஹூசைனும் ஒரு சொல் சொன்னா, அதுவும் ஒறிஜினல் யாழ் தமிழ்தான்.. சொல்லை இப்போ மறந்திட்டேன். எல்லா இடமும் யாழ் தமிழ் பரவிக்கிடக்குதுபோல.

    ReplyDelete
  16. ஜீனோ வாங்கோ!! வாழ்த்துக்கு மிக்க நன்றி. இப்படி அடிக்கடி காணாமல் போகக்கூடாது ஜீனோ!! அக்கா பாவமெல்லோ.

    ஆங் கரெக்ட்.. வண்டி அதேதான். நீங்கதான் தசாவதாரமாச்சே... நிறையப் பாஷை தெரிந்திருக்குமே...

    முடிஞ்சால் இதைக் கண்டுபிடியுங்கோ... ///இண்டைக்கு வெள்ளெண விடிஞ்சுபோச்சு...///

    ReplyDelete
  17. அதிரா கதை நன்றாக எழுதியிருக்கிறீர்கள். எல்லோரும் எவ்வலவு திறமையை உள்ளுக்குள் ஒளித்து வைத்திருக்கிறீர்கள். அடுத்த பாகத்தையும் வாசிக்க ஆவலாக இருக்கிறது.

    நீங்கள் பாட்டியைப் பற்றி கதைத்ததும் எனக்கும் என் பாட்டி நினைவு வந்து விட்டது. இன்று எங்களோடு இல்லையென்றாலும் என்றும் எங்கள் மனதோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்று மனதை தேற்றிக் கொள்கிறோம்.

    ReplyDelete
  18. ///இண்டைக்கு வெள்ளெண விடிஞ்சுபோச்சு.../// ஓம்..ஓம்..நேத்து வெள்ளென விடிஞ்சதாலேதானே அதிராக்காவின் பதிவுகளைப் பல இடங்களில் பாக்க முடியுது!:D :D

    சீக்கிரம் விடிந்துவிட்டது என்பது தானே நீங்க சொன்னது? இப்பூடி எல்.கே.ஜி. லெவல்:) கொஸ்டின் எல்லாம் ஜீனோவிடம் கேக்கலாமோ அதிராக்கா? கொஞ்சம் மேலே வாங்கோ..ஓ..!!

    அதுக்காக பல்கலைக்கழகம் லெவலுக்கு போயிடகூடாது..ஜீனோ இஸ் இன் 'டீன்ஸ்', யூ நோ?? அதுக்கேத்த மாதிரி கேள்விகள் கேளுங்கோ..நன்றி,வணக்கம்!
    :D x5

    ReplyDelete
  19. கவிசிவா மிக்க நன்றி. நான் முன்பு save பண்ணி வைக்கவில்லை, அதனால் இப்போ ஒன்றொன்றாக குத்துகிறேன்... எழுத்துக்களைத்தான்...

    புதிதாக கற்பனை பண்ணி எழுதுவதென்பது கொஞ்சம் கஸ்டம்... குடும்ப நிகழ்வோடு சம்பந்தப்படுத்தப்பட்ட கதைகள் என்றால் ... கற்பனை பண்ணிப்பண்ணி எழுதிக்கொண்டே போகலாம்.

    ReplyDelete
  20. கிக் கிக் கிக்.. ஜீனோ த கிரேட் தான்... நான் பப்பி என நினைத்தேன்:), அதுதான் எல்கேஜி லெவல்... இனிமேல்..மேல தான்... ஒன்லி அடல்ஸ் குவெஸ்ஹன்ஸ் தான் கேட்பேன்.

    ReplyDelete
  21. எனக்கும் என் பாட்டி நினைவு வந்து விட்டது!!

    ReplyDelete
  22. சுஸ்ரீ மிக்க நன்றி. எல்லோருக்குமே பாட்டியின் நினைவு வந்திருக்கும்.

    ReplyDelete
  23. //அவ்வளவு நன்றாக இருந்தது அக்கதை//

    அத படிச்சுப் பாத்தவங்கல்லோ சொல்லனும்..

    அதிரா.. தென் தமிழ்னாட்டு (தின்னெவேலி, நா கோ) பாஷை யாழ் பாஷை மாதிரி இருக்கும்.. ஏன்னா முன்ன இது ரெண்டும் கனெக்ட் ஆயிருந்தது தானே.. நாங்களும் கேரளா பார்டர்.. அதனால எங்களோடதும் இத்துனூண்டு ஒத்திருக்கும்.. புரிஞ்சுக்கறோம்.. எழுதுங்க.. என்ன இந்த ட ற ர மட்டும் தமிழ்னாட்டு பாஷைல போட்டிருங்க :)))

    ReplyDelete
  24. அதிரா நீங்க பாட்டி பற்றி எழுதியதும் எனக்கு என் பாட்டி ஞாபகம் வந்து விட்டது, எனக்கு ஒரு தோழி போல்
    என் சுக துகக்ம் எல்லாத்துகும் என் பாட்டியின் பேச்சு தான் மருந்து.

    தோழி போல இருந்தோம். அப்படி 15 வருடம் முன் போய் விட்டேன்

    ReplyDelete
  25. சந்தனா... ஜீனோ..

    அத படிச்சுப் பாத்தவங்கல்லோ சொல்லனும்../// சந்து.. அதை எழுதும்போதே நினைத்துச் சிரித்துக்கொண்டே எழுதினேன்... யார் வந்து குறுக்கு விசாரணை நடத்தப்போகினமோ என்று:)... என்னைப் புழுக விடுங்கப்பா...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:). இங்கே புழுகாமல் வேறு எங்குபோய்த்தான் நான் என் பெருமை பேச முடியும்?:):).

    எனக்கும் பிரச்சனையே... இந்த ட, ற, ர... தானே.... பயப்படாதீங்க தொடர்ந்து அதிராவோட கதைத்தால்... உங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டுப்பாஷை மறந்திடும் எங்கட.... ப் போல:).

    ஜீனோ... எங்கே உங்கட நியூ ஆன்டியைக் கனநாட்களாகக் காணவில்லை... நலம்தானே...???

    ReplyDelete
  26. மிக்க நன்றி ஜலீலாக்கா... பாட்டி என்றதும் எல்லோரும்..
    வசந்தகால நதியினிலே.. வைரமணி நீரலைகள்...
    நீரலைகள் நீரினிலே... நெஞ்சிரண்டில் நினைவலைகள்... என.. பழைய ஞாபகங்களுக்குப் போயிட்டீங்கள்... தாத்தாவும் பிடிக்கும்தானே? அடுத்து தாத்தா வருவார்... வெயிட்.

    என் அண்ணன் தங்கள் வகுப்பினரோடு, ஸ்கூல் சுற்றுலாவுக்காக இயற்றிய பாடல் ஒன்று நினைவுக்கு வந்துவிட்டது...
    “ஆச்சிக்கு இங்கிலீசு தெரியும்....
    அப்புவுக்கு இங்கிலீசு தெரியாது....”

    ReplyDelete
  27. //"LIFE IS MILK AND THE LOVE IS SUGAR"//
    அப்ப 'பூட்ஸ்'!!! ;))))

    நலம், நலமறிய ஆவல். ;)

    ReplyDelete
  28. ////"LIFE IS MILK AND THE LOVE IS SUGAR"//// நல்லா இருக்கே..

    But Geno's life is already in the form of "ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா"

    What to do??

    ReplyDelete
  29. அப்ப 'பூட்ஸ்'!!! ;))))/// இமா அது காலுக்கு:):) . நான் இங்கு நலமே...

    நல்லா இருக்கே..// மாமி பார்த்தபின் தான் மருமகனும் பார்த்திருக்கிறார்:).

    "ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா" /// ஜீனோ !! பால் + கோவா= பால்கோவா... milk இருக்கே... that is life kik..kik..kiiiiiiiiiii

    ReplyDelete
  30. இமா said...
    ஒண்டில் பயங்கரச் சிரிப்பா எழுதுவீங்கள். இல்லாட்டி ஒரேயடியாக் கண்ணில தண்ணி வாற மாதிரி எழுதுறீங்கள். எப்பிடி எழுதினாலும் நல்லா எழுதுறீங்கள் அதிரா. அடுத்த பாகம் எப்ப?

    ReplyDelete
  31. இமா, நான் ஸ்பிரிங் வருகுதெல்லோ, அதுதான் புளொக் கிளீனிங் செய்த இடத்தில, ஏதோ மாறுப்பட்டுப்போச்சு, நீங்களும் படிச்சத மறந்து புதுக் கொமெண்ட் தந்திட்டீங்கள்... நான் அதை இதில் இஐத்திருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  32. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.