நல்வரவு_()_


Thursday, 18 February 2010

பாட்டி.. (நிறைவுப்பகுதி)


பாட்டி.. தொடர்கிறது...
பாட்டி அந்த நாளில் ஆசிரியராக இருந்தவர். தாத்தா சிங்கப்பூரில் தொழில் புரிந்த சமயம், பாட்டியைத் திருமணம் முடித்தார். பின்னர் பாட்டியும் சிங்கப்பூரிலேயே வசதியாக வாழ்ந்தவர். அவர்களின் ஒரே பிள்ளைதான் எங்கள் அப்பா. தாத்தா மாரடைப்பால் இறந்துவிட, பாட்டி அப்பாவுடன் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார்.

பாட்டியின் விருப்பத்தின்படியும், அப்பாவின் விருப்பத்துடனும், அப்பா, அம்மாவை மணம் முடித்தார். அம்மாவுக்கு அம்மா இல்லை. பாட்டியையே தாயாக நினைத்தார். பாட்டி, அம்மாவை என்றைக்குமே மருமகளாக எண்ணியதை நான் காணவேயில்லை. தன் மகளாகவே நடத்தினார்.

எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தைகள் குறைவென்பதால், நான் அம்மாவின் வயிற்றிலிருந்தபோதே பெண் குழந்தை வேண்டுமென்று நேர்த்தி வைத்தார்களாம். அம்மா சொன்னா, ஒருநாள் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவின்போது, வெளிவீதியில் நின்று சுவாமி வெளிவீதி சுற்றுவதை பார்த்துக் கும்பிட்டாவாம் “கந்தா!! உனக்கு இரு மனைவிமார், அதில் ஒருவரை எனக்கு மகளாகத் தந்துவிடு” என்று.ம், அக்குழந்தைக்கு உன் மனைவியின் பெயரையே வைப்பேன் என.

நான் பெண்குழந்தையாகப் பிறந்தபோது, எல்லோருமே ஆனந்தப்பட்டார்களாம். பாட்டி எண்ணியிருந்தாவாம், பெண்குழந்தை எனில் “தாரணி” எனப் பெயர் வைப்பதென்று.. எனவே அம்மாவின் நேர்த்திக்கடனையும் பாட்டியின் விருப்பத்தையும் ஏற்று, எனக்கு “வளதாரணி” எனப் பெயர் வைத்தார்கள்(வள்ளி + தாரணி). பாட்டி என்னைச் செல்லமாக “தாரா” தாரா” எனக் கூபிடுவா, அதற்கேற்றபடி நானும் தாராமாதிரி நடப்பேனாம்.



பாட்டி ஒவ்வொரு கதையாகச் சொல்லச் சொல்ல நானும் ரசித்துக் கேட்பேன். அவ தன்னால் முடிந்தவரை என்னைப் பண்படுத்தி வளர்த்துவிட்டா. பாட்டி சொல்லுவா, பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட வயதுவரைஒழுங்கான பாதையில் வழிநடத்திக்கொண்டு வந்துவிட்டால், பின்னர் அவர்கள் குறுக்குப் பாதையில் செல்ல மாட்டார்கள். அதுபோல் உன்னை நான் நேர் வழியில் கொண்டுவந்துவிட்டேன், இனிமேல் நான் இல்லாதுபோனாலும், நீ நேர் பாதையில்தான் போவாய் என்பது எனக்குத் தெரியும் என்று.

ஆமாம், நான் பாட்டியை நினைத்து நினைத்தே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன் ”ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ?” எனக்கும் புரிகிறது, இருப்பினும், சிலபேரின் சிலநாள் பிரிவையே தாங்க முடியாத மனம், நிரந்தரப் பிரிவை எப்படித்தான் தாங்கிக்கொள்ளும். ஒரு மாதத்துக்கு முன்பு, என்னோடு சிரித்து மகிழ்ந்த பாட்டி, இன்று பூமாலையுடன் சுவரில் படமாகத் தொங்கியபடி புன்னகைத்துக்கொண்டிருக்கிறார் எம்மைப் பார்த்து.

நானும் பாட்டியை உற்றுப் பார்க்கிறேன். என் மனதில் ஒரு புதுத்தென்பு வருகிறது. ஆம், நான் பாட்டியின் கனவை நனவாக்க வேண்டும். அறைக்குள் சென்று புத்தகங்களை எடுத்து அடுக்குகிறேன். என்னில் ஏற்பட்ட இந்த திடீர்மாற்றத்தைக் கண்ட அனைவரும் திகைத்து நிற்கின்றனர்.

நான் பழைய தாராவாக மாறவேண்டும் என்ற பிரார்த்தனையில் இருந்த அம்மா, என்னைக் கட்டித் தழுவுகிறார் ஆனந்தத்தில். நான் பாட்டியை மனதில் நினைத்தபடி புறப்படுகிறேன் பாடசாலையை நோக்கி.

இது என் கற்பனையில் உதித்த கதையே... முற்றுப்பெற்றது.

ஊசி இணைப்பு:
இப்பத்தான் நாங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய நேரம்... உடன்பிறப்புக்களைப் பிரிக்க உள்ளுக்குள்ளால சதி:) நடக்குது. அன்பு இலா அக்கா(ஜீனோவின் முறையில்), அன்பாக எனக்கு அனுப்பிய “நீ... கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்..” என ஒரு காட்சி...




ஆனாலும் பூஸாரும் பப்பியும் எப்பவும் இப்படித்தான்.... பூஷாரை உண்ணவிட்டு பப்பி.. பசியிருக்குமாம்....கிக்...கிக்...கிக்... என்னே பாசம்.

கண்படுத்திடாதீங்கோ பிளீஸ்!!!

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

Thursday, 11 February 2010

இது!!! நீங்களும் நானு....ம் (2)

ஒற்றை ரோஜாவே...
எங்கே நீ எங்கே...
ஸ்நோ தாங்க முடியாமல்
தவிக்கிறாயோ?..





ஸ்நோவில் நடந்தபோது, இந்த ஒற்றை ரோஜா, தனியே, ஸ்நோ சுமையோடு இருப்பதைப் பார்த்தேன்... உடனே ஒரு “கிளிக்” செய்தேன்..
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

முந்தைய தொடர்க் கேள்விகளும் பதிலும்...


கேள்வி:
எதிலும் நம்பிக்கை வைக்க வேண்டும், என்பதற்காக முடியாத காரியங்களிலும் நம்பிக்கை வைப்பது சரியா?

பதில்:
அறிவு கலந்த நம்பிக்கைதான் ஆரோக்கியம். ஒரு மாணவனிடம் ஆசிரியர் கேட்டார்: “கடவுள் ஒரு பானைக்குள் ஒரு யானையை நுழைய வச்சார், என்று சொன்னால் அதை நீ நம்புவாயோ?"

"நம்புவேன் சேர்"!! என்றான் மாணவன்.

"எப்படி நீ நம்புவாய்?" என்றார் ஆசிரியர்.

"அந்தப் பானை, அந்த யானையை விடப் பெரிதாக இருந்திருக்கும்".. என்றான் மாணவன்.



கேள்வி:
காதல் நோய்க்கு மருந்தென்ன?

பதில்:
ஒஷோ சொன்ன ஒரு குட்டிக்கதை ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்.
இளைஞன் ஒருவன் அனுபவ முதிர்ச்சியடைந்த ஒரு பெரியவரைச் சந்தித்தான். அவரிடம் கேட்டான்: “நான் காதல் வியாதியால் பீடிக்கப்பட்டுள்ளேன், தங்களால் எனக்கு உதவ முடியுமா?"

பெரியவர் சிறிது நேரம் யோசித்தார், பிறகு கூறினார், "காதல் நோயைக் குணப்படுத்த ஒரே ஒரு மருந்துதான் உள்ளது, அதுதான் திருமணம். ஒரு திருமணம் அதைக் குணப்படுத்த முடியவில்லையென்றால், வேறு எதனாலும் அதைக் குணப்படுத்த முடியாது. எனவே நீ மணம் புரிந்துகொள். பின்னர் என்றுமே நீ காதலிக்க விரும்ப மாட்டாய்".



கேள்வி:
வயதானவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை ஏற்படுவதுதான், அவர்கள் கோபப்படுவதற்குக் காரணமோ?

பதில்:
சிலர் விஷயத்தில் ஆம்!, சிலர் விஷயத்தில் இல்லை!!.

ஒரு தாத்தாவுக்கு நூறாவது பிறந்த நாள். அவருடைய பேரப்பிள்ளைகள் எல்லாம் வந்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். காலில் விழுந்து எழுந்ததும்:

“தாத்தா! ஆண்டவன் புண்ணியத்தில், அடுத்த வருஷமும் உங்கள் பிறந்த நாளில், உங்கள் ஆசீர்வாதம் பெறும் பாக்கியம் எமக்குக் கிடைக்க வேண்டும்” எனப் பணிவாகச் சொன்னார்கள்.

அதுக்கு அந்தத் தாத்தா என்ன சொன்னார் தெரியுமோ?

“கவலைப்படாதீங்கோ, நிட்சயமாக அது நடக்கும். ஏனென்றால், நீங்களெல்லாம் சின்னப்பிள்ளைகள்தானே... அதுக்குள்ளே உங்களுக்கு ஒண்ணும் ஆயிடாது” என்றார்.




கேள்வி:
பொய் சொல்வதும் ஒரு கலைதானே?

பதில்:
பின்னே என்னவாம்? இல்லாவிட்டால் மாட்டுத்தான்:).

தான் வேலை செய்யும் அலுவலகத்தில் விடுமுறை கேட்டார் ஒருத்தர். “சேர், என் தாத்தா அறிவுநினைவில்லாமல் கிடக்கிறாராம், ஒரு நாலு நாள் விடுமுறை வேணும்”

“அய்யோ பாவம் போயிட்டு வாங்க, அடடே எதுக்கு அழுகுகிறீங்க? உங்க தத்தாவுக்கு ஒண்ணும் ஆகாது”.

“நான் அழுவது தாத்தாவுக்காக அல்ல, இந்த அலுவலகத்துக்காக, கடமைதான் எனக்கு முக்கியம், செய்வதை திருந்தச் செய் என்று கீதையில் சொல்லியிருக்கு”!!

“அடடே!!! உங்களுக்குத் தத்துவமெல்லாம் தெரியுதே..., உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளணும் என எனக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை”?.

“கேளுங்க சேர்!! ஏதோ அடியேனுக்குத் தெரிந்ததைச் சொல்லித்தருகிறேன்”.
“மரணத்தின் பின்பு, மனிதனுக்கு வாழ்வு உண்டோ?”.

“உண்டுதான் என நினைக்கிறேன்”.

“நீங்களே சந்தேகப்படுறீங்க, எனக்குச் சந்தேகமே கிடையாது. மரணத்தின் பின் வாழ்வு உண்டு! உண்டு!! உண்டு!!!”.

“எப்படி உறுதியாகச் சொல்றீங்க?”.

“போனவாரம் உங்க பாட்டி செத்திட்டதா லீவு எடுத்திட்டுப் போனீங்களே!! ஞாபகம் இருக்கா? நீங்க போன பின்னாடி, அவங்களே உங்களைத் தேடி இங்கே வந்தாங்களே!”.


இக்கதையை ரைப் பண்ணும்போது, ஹைஷ் அண்ணன் தான், இந்த ஞானி... என நினைத்தேன்.. என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை... சிரித்து சிரித்து.. கண்ணால் நீர் வடிய... கஸ்டப்பட்டு ரைப்பண்ணி முடித்தேன்....



கேள்வி:
பொறுமை வேண்டும், பொறுத்தார் அரசாள்வார் என அடிக்கடி சொல்கிறார்களே. .. பொறுமையின் எல்லை எது?

பதில்:
ஒரு துறவியும் சீடனும் அமர்ந்திருந்தார்கள். சீடனுக்கு துறவியைப் பரிசோதித்துப் பார்க்க ஆசை வந்தது.

துறவியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.

உண்மையான அந்தத்துறவி மறு கன்னத்தையும் காட்டினார்.

சீடன், தன் பலம் அனைத்தையும் திரட்டி, மறு கன்னத்திலும் அறைந்தான். உடனே துறவி, அவனைப் பாய்ந்து பிடித்துப் புரட்டி எடுக்கத் தொடங்கிவிட்டார்..

அலறியபடி அவன் கேட்டான்: நீங்கள் என்ன செய்கிறீங்கள் குருவே? காலையில்தானே ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டு என உபதேசம் செய்தீர்கள் என்றான்.

துறவி சொன்னார்: "ஆம், ஆனால் எனக்கு மூன்றாவது கன்னம் இல்லையே! ஏசு, மறு கன்னத்தைக் காட்டு என்பதோடு நிறுத்திவிட்டார். அதுக்குப் பிறகு நான் விரும்புவதைச் செய்துகொள்ளலாம்".


------------------------- * * * * * * * * * * * * * * * -----------------------------

இலவச இணைப்பு:
அன்பு ஜலீலாக்கா அன்பாக அனுப்பிய Cat Washing Machine




”பழம் வேண்டுமெனில் பூவைப் பாதுகாக்க வேண்டும்”

............................................................

Saturday, 6 February 2010

" பாட்டி" (ஆரம்பப் பகுதி)



கேட்டவை, அறிந்தவற்றையும் என் கற்பனையையும் சேர்த்து நானே, கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன் எழுதிய ஒரு சிறுகதை...

"பாட்டி"

பாட்டியை நினைக்கும்போதே நெஞ்சுக்குள் ஏதோ செய்கிறது. தொண்டைக்குள் ஏதோ வந்து அடைப்பதுபோல் இருக்கிறது.என் பாட்டியைப்பற்றிச் சொல்வதானால் ஒரு புத்தகமே எழுதலாம்.

நான் எந்தளவிற்கு என் அப்பா, அம்மாவை நேசிக்கிறேனோ அந்தளவிற்கு என் பாட்டியையும் நேசித்தேன். என்னைப் பொறுத்தவரை, எல்லாமே எனக்குப் பாட்டிதான். ஒரு நல்ல தோழியாக, நல்ல ஆசானாக, நல்ல அறிவுரை கூறுபவராக, அதைவிட சிறந்த பாதுகாவலராக இருந்தார். அந்தப் பாட்டியை இன்று நான் இழந்துவிட்டேன்.

ஆமாம்!! பாட்டி இறந்து இன்றுடன் முப்பத்தைந்து நாட்கள் முடிந்துவிட்டன. எனக்கு எல்லாமே கனவாகத்தான் தெரிகிறது. அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் போகத் தொடங்கிவிட்டான். தம்பியும், மனம் தேறி பள்ளிக்கூடம் செல்ல ஆயத்தமாகிறான். அப்பா, அம்மா கவலைகளை மனதில் புதைத்தபடி, மெதுவாக பழைய நிலைமைக்குத் திரும்ப முயல்கின்றனர். எங்கள் அம்மா மனதில் இருக்கும் கவலைகளை முகத்தில் காட்டிக்கொள்ள மாட்டார். வீட்டுத்தலைவி சோர்ந்துவிட்டால் வீடே சோர்ந்துவிடுமல்லவா?அதனாலோ என்னவோ.

அப்பா, முகத்தில் சிரிப்பை உண்டாக்க நினைத்து தோல்வியுற்றவராக இருக்கிறார்.

என்னால் மட்டும் மனதைத் தேற்றவே முடியவில்லை. பாட்டி இல்லாமல் பாடசாலைக்குப் போவதை என்னால் நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. பாட்டி எனக்குச் சொல்வார், எக்காரணம் கொண்டும் கல்வியை நிறுத்தக்கூடாது என்று. வாழ்க்கையில் எதை இழந்தாலும், கல்வியை மட்டும் இழக்கக்கூடாது என்பார்.

பாட்டி ஒருநாள் சொன்னார், `நான் எவ்வளவு காலம் உன்னுடன் இருப்பேனோ தெரியவில்லை, ஆனால் நீ நன்றாகப் படித்து, அண்ணாவைப்போல் பல்கலைக்கழகம் செல்லவேண்டும்` என்று. பாட்டி இருந்தபோது அது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை, எதுவுமே எம்மோடு கூட இருக்கும்வரை, அதன் அருமை எமக்குத் தெரிவதில்லைத்தானே. இழந்தபின்னரே தெரிகிறது. இப்போது என் மனம் சொல்கிறது, பாட்டிக்காக நிட்சயம் நான் நன்றாகப் படிக்க வேண்டும், பல்கலைக்கழகம் செல்லவேண்டும் என்று.

காலையில் பாடசாலை செல்லும்போது, பாட்டிதான் எனக்குத் தலைவாரிப் பின்னிவிடுவார். எனக்கு அடர்த்தியான நீண்ட கூந்தல். அம்மாவிற்கு என்னால் எந்த வேலைக் கஸ்டமும் வந்ததில்லை, ஏனெனில், பாட்டியே எல்லாம் செய்துவிடுவார். பாட்டிக்கு இலவம் பஞ்சுமாதிரி நல்ல வெள்ளைமுடி, நீளமாக இருக்கும், எந்நேரமும் வாரிக் கொண்டை முடிந்திருப்பார். நான் பின்னேரங்களில் அவவுக்குத் தலை பின்னுவேன், உடனேயே கலைத்து கொண்டை போட்டுக்கொள்வார். வயதிற்கேற்ப தோற்றம் இருக்க வேண்டும் என்பார்.

ஒருபோதும், பாட்டி வருத்தமென்று படுத்து நான் கண்டதில்லை. கடைசியாக நான்கு நாட்கள்தான் படுக்கையாக இருந்தார். பின்னர் எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார். பாட்டி, வீட்டால் வெளிக்கிட்டது, ஏதோ பத்துப்பேர் குறைந்துவிட்டதுபோல இருக்கிறது. வீட்டில் பம்பரம்போல சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று, காற்றாய்ப் பறந்துவிட்டார்.

பாட்டி சொல்லியிருக்கிறார், ஏதாவது தாங்கமுடியாத துக்கம் ஏறட்டால், அதை மனதில் அடக்கி வைக்காமல், அதைப்பற்றி மீண்டும் மீண்டும் யாருடனாவது கதைத்துப் பகிர்ந்துகொண்டால் கொஞ்சம் பாரம் குறையுமென்று.

பின்னேரம் அண்ணனைக் கூப்பிட்டேன் “அண்ணன்!! கொஞ்ச நேரம் வந்து இப்படி இரேன்”. அண்ணன் அம்மாக்குச் சொன்னான் “அம்மா! பாட்டியை நினைத்து நினைத்து இவளுக்குப் பைத்தியமே பிடிக்கப்போகிறது, கெதியில் பள்ளிக்கு அனுப்புங்கோ” என்று. கூடவே, தன் நண்பனுக்கு நடந்த ஒரு கதையையும் சொன்னான்.

தன் நண்பனின் தந்தை திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டாராம். இதையறிந்த நண்பர்கள், அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்களாம். தனியே விட்டால் நண்பன் அதிகம் கவலைப்படுவான் என்று, தந்தையின் இறுதிக்கிரியைகள் முடியும்வரை கூடவே இருந்து, மறுநாள் பல்கலைக்கழக விடுதிக்குக் கூட்டிச் சென்றார்களாம்.

அப்போ நண்பனால் பேச முடியவில்லையாம், வாயசைக்க முடியாமல் போய்விட்டதாம். அதனால் வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்களாம், டாக்டர் செக்பண்ணிவிட்டுச் சொன்னாராம், தந்தை இறந்தபின் நண்பன் வாய் திறந்து அழவில்லையாம், நண்பர்களும் இருப்பதனாலோ அல்லது கூச்ச சுபாவத்தாலோ துக்கத்தை மனதிலேயே புதைத்திருக்கிறார், அதனால் அவரால் பேசமுடியாமல் போய்விட்டதாம் எனச் சொல்லி, குணமாக்கிவிட்டாராம்.

இந்தக் கதையையும் கேட்டதே, அம்மாவுக்கு இன்னும் கவலை அதிகமாகிவிட்டது, இவளுக்கும் ஏதும் வருத்தம் வந்துவிடப்போகிறது என்று அப்பாவுக்குச் சொல்லிக்கொண்டிருந்தா... தொடரும்.

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

மெழுகுவர்த்தி
-----------------------


தன்னை அழித்துப்
பிறர்க்குதவுவது
மெழுகுவர்த்தி
~ ~ ~ ~ ~ ~ ~ ~



புகைப்பிடித்தல்
------------------------


தன்னையும் அழித்துப்
பிறரையும் அழிப்பது
புகைப்பிடித்தல்
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

பின் இணைப்பு..
அன்பு இலா, செல்லமாக தன் "சூஸ்" இல் "பூஸ்" வைத்து அனுப்பியது... பூஸாவுக்காக..






"LIFE IS MILK AND THE LOVE IS SUGAR"