என்னவோ மனதுக்குள் ஒரு பல்லி சொல்லிக்கொண்டே இருக்குது.... 2012 இல ஏதோ நடக்கப்போகுதென:))) (ஆரும் சிரிக்கப்புடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), அதுக்குள் மனதில் இருப்பதை எல்லாம் எழுதிடோணும் என ஒரு தவிப்பு இருந்தாலும்... அவசரமாக பதிவுகள் போட நேரம் இடங்கொடுப்பதில்லை.
ஒரு குழந்தையை எவ்வளவு கஸ்டப்பட்டுப் பெறுகிறோமோ... அந்தளவுக்கு அவர்களை வளர்த்து ஆளாக்குவதும் பெரும் பொறுப்புத்தான். ஒவ்வொரு குழந்தை ஒவ்வொருவிதமாக இருக்கும்.
பிள்ளைகளின் குறும்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
எங்கள் மூத்தமகனில் ஒரு பழக்கம், கீழே என்ன இருந்தாலும் உடனே எடுத்து ஒரு செக்கனும் தாமதமில்லாமல் வாயில் வைப்பார். இதனால் அவரின் பின்னால் எப்பவுமே நாம் ஒருவர் திரிவது வழக்கம். 10 மாதத்திலேயே குடுகுடு என ஓடத் தொடங்கிட்டார். எங்கள் அப்பா அம்மாவும் அந்நேரம் எம்மோடு இருந்தமையால், சரியான செல்லம்.
ஒரு தடவை என் கணவரும் நானும் மகனுமாக ரெயினில் போய்க்கொண்டிருந்தோம். அப்போ மகனுக்கு 12,13 மாதங்கள் என நினைக்கிறேன். நான் கோனர் சீட்டில் இருந்து, மகனை மடியில் இருபக்கமும் கால்களைப் போட்டபடி, என்னைப்பார்கும்பக்கமாக, என் நெஞ்சிலே சாய்ந்து வைத்திருந்தேன். நான் நெஞ்சில் பட்டன்கள் போட்ட ரீ ஷேட் போட்டிருந்தேன். துடினமாக இருக்கும் மகன், மிகவும் அமைதியாக படுத்திருந்தார். அப்போ நான் குழப்பினால் பிழை என பேசாமல் விட்டிருந்தேன்.
ஏனெனில் என்னில் ஒரு பழக்கம், மகனை நித்திரையாக்கிப்போட்டு, பின்பு பக்கத்தில் இருந்து... காலைத்தொட்டு கையைத்தொட்டு பார்த்துக்கொண்டிருப்பேன், அப்போ என் கணவர் சொல்வார், கஸ்டப்பட்டு நித்திரையாக்கிப்போட்டு, உடனேயே தட்டி எழுப்பிடாமல், நீங்களும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்கோ என:)).
அதை எண்ணியே, அமைதியாக இருக்கிறார் என விட்டிருந்தேன். திடீரென ஒருவிதமாக மூச்சுத் திணறி, விக்கல் எடுத்து அவதிப்பட்டார். எனக்கு என்ன என்றே புரியவில்லை, பக்கத்தில் இருந்த கணவருக்குப் புரிந்துவிட்டது, உடனே சரித்துப் பிடித்துக்கொண்டு முதுகிலே ஒரு தட்டுத்தட்டினார், என் ரீ ஷேட்டில் இருந்த பட்டின், தொண்டையிலிருந்து கீழே விழுந்தது. இப்போ நினைத்தாலும் கைகால் எல்லாம் கூசுது எனக்கு. அந்நேரம் நான் தனியே என்றால் என்ன செய்திருப்பேனோ தெரியாது.
உடனே அழ மட்டும்தான் தெரியுமெனக்கு, கையும் ஓடாது காலும் ஓடாது.
எப்பவுமே, துடினமாக இருக்கும் குழந்தைகள், அமைதியாக இருக்கிறார்கள் எனில் கவனிக்க வேண்டும்.... எனும் பாடத்தைக் கற்றுக் கொண்டேன்.
பின்பொருநாள், ஒரு திருமணவீட்டுக்குப் போய் வந்து, எம்மை வீட்டிலே விட்டுவிட்டு கணவர் டியூட்டிக்குப் போய்விட்டார். திருமணத்தில் இருந்து ஒரு அம்மம்மாக்குழல் கொண்டு வந்திருந்தார் மகன். அவருக்கு 1 1/2 வயதிருக்கலாம். அதை பலூனைக் கழட்டிப்போட்டு விழுங்கிவிட்டார் குழலை. அம்மா நின்றமையால் ஓடிவந்து கைவிட்டு இழுத்தெடுத்திட்டா.
ஒரு இரண்டரை வயதானபோது, ஒருநாள். கணவர் ஹோலில் இருந்து பேப்பர் வேர்க்ஸ் செய்துகொண்டிருந்தார். நானும் அதிலிருந்து ரீவி பார்த்துக்கொண்டிருந்தேன், மகன் விளையாடிக்கொண்டிருந்தார். நாம் கவனிக்கவில்லை, தானே சொன்னார்... “அப்பா கிளிப் வச்சிட்டேன்” என.... ஏதோ பெரிய சாதனையாளர்போல:)). எமக்குப் புரியவில்லை. பின் தானே மூக்கைக் காட்டினார், உள்ளே வெள்ளைக்கப்பி தெரிந்தது. பேப்பர் கிளிப். ஒருமாதிரி எடுத்துவிட்டார் கணவர்.
உடனே தான் ஏதோ சாதனையை நிலைநாட்டிவிட்டேன் என்பதுபோல, அப்பப்பாவுக்கு ஃபோன் பண்ணுங்கோ, அம்மப்பாவுக்கு ஃபோன் பண்ணுங்கோ.. மாமாவுக்கு... என இப்படி ஒவ்வொருவராக கேட்க கேட்க நாமும் ஃபோன் பண்ணிக் கொடுத்தோம். உடனே.. “நான் கிளிப் வச்சேன், அப்பா எடுத்திட்டார்” என எல்லோருக்கும் தன் சாதனையைச் சொன்னார். ஒரு வயதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக நன்கு கதைக்கத் தொடங்கிட்டார்.
இப்படி அவரை வளர்க்க சரியான கஸ்டப்பட்டோம். ஆனா இப்போ அதற்கு எதிர்... அமைதியான பிள்ளையாக மாறியிருக்கிறார்:)))(என்னைப்போலவே ஹா..ஹா..ஹா..:)).
சின்னவர் அதுக்கு எதிர்.. குழப்படி குறைவு. வாயில் எதுவும் வைக்கமாட்டார். நம்பி எதையும் கொடுக்கலாம் விளையாடுவார். ஆனால் மூத்தவரால் பயந்திருந்தமையால், நாம் மிகவும் கவனம்.
நான் ஏதும் கொண்டுபோய் வாயில் தீத்தினால், என் கணவரும் மூத்தவரும் என்ன ஏதெனக் கேட்காமல் ஆஆஆ...வென வாங்கிச் சாப்பிடுவார்கள் (அவ்ளோ நம்பிக்கை என்னில்:))), ஆனா சின்னன் மட்டும் கடசிவரை வாய் திறக்க மாட்டார்... வட் இஸ் தட்? ஷோ மீ.... எனக் கேட்டு, காட்டிய பின்பே வாய் திறப்பார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).
ஒரு தடவை கனடா போயிருந்தபோது, ஒரு வேலைநாளில், எங்கட ஆன்ரி லஞ்க்கு வரும்படி சொல்லியிருந்தா. வேலை நாள் என்பதால் காரில் ஏற்றிப்போக யாரும் இருக்கவில்லை. ஆனால் அங்கு நல்ல பஸ், ரெயின் வசதி இருக்கிறது... வீட்டு முன்னாலே ஏறி, வீட்டு வாசலிலே இறங்கிடலாம். ஆனால் என் கணவருக்கு பொது வாகனங்களில் ஏறப் பிடிக்காது. எவ்வளவு செலவானாலும் ரக்ஷி பிடிப்பாரே தவிர. லோக்கல் பஸ், ரெயினில் ஏறியதே கிடையாது.
ஆன்ரி வீடு ஒரு மணிநேரம் ஹைவேயில் ஓட வேண்டும். ரக்ஷி பிடித்து ஏறிவிட்டோம். பின்னால் நான், பக்கத்திலே மூத்தவர், (பக்கத்தில்)அடுத்த கோனரிலே... எங்கட அப்பா மடியிலே சின்னவரை இருத்தி, பெல்ட்டும் போட்டபடி வைத்திருந்தார். சின்னவர் அப்பாவின் நெஞ்சிலே சாய்ந்து படுத்திருந்துகொண்டு, கதவின் லொக்கிலே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.
ஹைவேயில் ஓடிக்கொண்டிருக்கும்போது படார் என கார் டோர் திறந்துவிட்டது.... எனக்கு ஒருகணம் என்ன நடந்ததென்றே தெரியாது.... நல்லவேளை, ரைவர் காரை நிறுத்திவிட்டார்.
அன்று தப்பியது என்னவோ புண்ணியம்தான், இல்லையெனில் வெளியே தூக்கி வீசியிருக்கும் அந்த வேகம்.
இதுக்காகத்தான் நாம் நெடுகவும் காருக்கு child lock என இருக்கிறது அதை எப்பவுமே போட்டிருப்போம். மூத்தவருக்கு 8 வயதானபோதுகூட சொன்னார், நான் வளர்ந்துவிட்டேன், என்பக்க லொக்கை எடுத்துவிடுங்கோ என:)). ஆனால் பல பேருக்கு இப்படி ஒரு லொக் இருப்பதே தெரியாது. இந்த லொக் அனைத்து வாகனங்களுக்கும் உண்டு, இதன் கொன்ரோல் ரைவரிடம் இருக்கும். இதை எப்பவுமே போட்டிருந்தால் பயம் குறைவு.
இதைப் படிக்கும் உங்களுக்கும்... பழைய ஞாபகங்கள் வருமே?:).
***********************************************************************
பின் இணைப்பு:
ஆருமே எனக்குப் பயப்புடுறமாதிரித் தெரியேல்லை.... கலவீன் வேஷம் போட்டுப் பார்ப்பம்:)))...
***********************************************************************
************************************************************************
மீனின்றி நீர் வாழும், ஆனால் நீரின்றி மீன் வாழாது
************************************************************************
|
Tweet |
|
|||