இலங்கையில் இருந்த காலத்தில் எப்பவும் வீட்டில் ஒரு நாயும், பூனையும் நம்மிடம் இருக்கும். பின்னர் நாட்டுப்பிரச்சனைகள் அதிகமாக, கொஞ்சக்காலம் சொந்த ஊரில் போய் இருந்தோம். அப்போ இனி எந்தப் பிராணியும் வளர்ப்பதில்லை, என மனதில் நினைத்தாயிற்று. எங்கள் ஊரில் ஒரு வழக்கம் இருந்தது [இப்ப குறைந்துவிட்டது, இல்லாமல் போய் விட்டதென்றும் சொல்லலாம்:(].
ஒருவர் வீட்டிலிருந்து, அடுத்தவர் வீட்டுக்குப் போவதாயின், முன் கேற் வழியாகப் போகத் தேவையில்லை. ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் இடையேயுள்ள வேலியிலே "பொட்டு" என்று சொல்வார்கள். அது எப்படி என்றால், ஒரு 3 அடி உயரத்தில் "n" வடிவத்திலே அழகாக நிலத்திலிருந்து வெட்டிவிடுவார்கள் வேலியை. சின்னப் பிள்ளைகள் நாய் பூனை எல்லாம் போய் வரலாம். பெரியவர்கள் இருந்து/ குனிந்து போக வேண்டும். இப்பாதையைப் பெண்களும் குழந்தைகளுமே பாவிப்பார்கள். ஆண்களெல்லாம் கேற்றைத்தான் பாவிப்பார்கள்.
ஊர் என்பதால் பெரும்பாலும் அந்த ஏரியா முழுவதும் ரத்த பந்தமாகவே இருப்பதால், இப்படி ஒரு முறை வந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட வீடுகளுக்கு மாத்திரம் இப்படித் தொடர்பு இருக்கும். பக்கத்துக் கோயிலுக்கு/ கடைக்கு போவதானால்கூட, இந்த உள் பாதையாலே போவார்கள். அப்போ, போக வர ஒவ்வொரு வீட்டுக்காரரோடும் கதைத்துக் கதைத்துப் போவார்கள். பிள்ளைகளும் இதேபோல் அடுத்த வீடுகளுக்குப் போய் விழையாடி வருவார்கள், அதனால் பாதுகாப்பும் அதிகம். பின்னர் மதில் வந்த போதும் பெரும்பாலும் மதில் கட்டியவர்களும் பழக்கத்தை மாற்றாமல், ஒரு சிறிய கேற் போட்டார்கள்.
இதேபோல் எங்கள் வீட்டுக்கு பின்னாலே இருந்த வீட்டுக்காரர்கள், தம் மகளுக்காக, எங்கள் பின் மதிலோடு, புதிதாக வீடு கட்டி, மகளுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தார்கள். எங்கள் வழக்கப்படி, மாப்பிள்ளைதானே பெண் வீட்டுக்கு வந்திருப்பார். அதேபோல் இப்புது மாப்பிள்ளையும் அப் புதுவீட்டுக்கு வந்து, மனைவியுடன் குடியேறினார். அவர் வேறு ஊர்க்காரர் என்பதால், அவருக்கு தன் வளவால் மற்றவர்கள் போய்வருவது பிடிக்கவில்லை:). எங்கள் மதிலில் கேற் இருந்தபடியால் அதை அவர் ஒன்றும் செய்ய முடியாது போயிற்று.
அதனால் தன் வீட்டுக்கு அடுத்தவர்கள் வந்துபோகும் அந்த "பொட்டுப் பாதையை" மறிக்க நினைத்தார்:). அவரும் நல்லவர்தான், பயந்த சுபாவமுடையவர், பெரிதாக யாரோடும் கதைக்க மாட்டார், கொஞ்சம் கூச்ச சுபாவமுடையவர். அதனால் அவரால், யாருக்கும் வாயால் சொல்ல முடியவில்லை, இப்பாதையைப் பாவிக்க வேண்டாம் என்று. அவர் மனைவியும் எதையும் பொருட்படுத்தமாட்டார், நீங்கள் சொல்வதைச் சொல்லுங்கள் என்பதுபோல், தான் முன்பு பழகியபடியே அப்பாதையை பாவித்தார்.
இதனால் புது மாப்பிள்ளை, பாதைக்கு கல்லு வைத்து தடுத்தார். போய் வருபவர்கள் கல்லை எடுத்துப் போட்டுவிட்டுப் போனார்கள். தடிகள் வைத்து மறித்தார், அதையும் இழுத்து எறிந்துவிட்டுப் பாதையைத் தொடர்ந்து பாவித்தார்கள்[ஹா ஹா ஹா ஏனெனில் இரு பரம்பரை பரம்பரையாக இருந்து வருகிறது].
எதுவுமே சரிவராததால், புது மாப்பிள்ளை யோசித்தார், இனி நல்ல சாதி நாய் ஒன்று வளர்த்தால் ஆட்களைத் தடுக்கலாம் என்று. தன் நண்பன் ஒருவரிடம் "அல்ஷேஷன் குறொஸ்" ஒன்று இருந்தது, அதன் குட்டியைக் கேட்டு வைத்தார். அது குட்டி போட்டு கிட்டத்தட்ட நான்கு மாதக் குட்டியாக ஒரு குட்டியை வாங்கி வந்தார். அல்ஷேஷன் சாதி என்பதால், நான்கு மாதத்திலேயே நல்ல உயரம்கு, பளபள எனும் சுத்தக் கறுப்பு நிறம். குரலும் ஒரு கம்பீரம். குலைத்தால் அதிரும். அக்குட்டியை அவரது நண்பரோடு கொண்டுவந்து இவர் தன் முற்றத்து சண்ஷெட் தூண் ஒன்றில் கட்டியாச்சு.
ஆனால் இவருக்கும் நாயென்றால் கொஞ்சம் பயம்போல:). அதனாலோ என்னவோ, அக் குட்டிக்கு கிட்டப் போகப் பயந்தார். இதைக்கண்ட அக்குட்டி, இவரைப் பார்த்து குலைக்கத் தொடங்கிவிட்டது. இவர் மனைவி சொல்லிக்கேட்டது, உங்களுக்கேன் தேவையில்லாத வேலை என்று. ஒரு இரவு முடிந்துவிட்டது. இவர், குட்டிக்கு கிட்டப் போகவுமில்லை, குட்டியை அவிழ்த்து விடவுமில்லை:). அடுத்தநாள் விடிய எப்படியோ ஒரு மாதிரி சங்கிலியைக் கழட்டி விட்டார். கழட்டியதும், பின்னர் கட்டுவதற்காகக் கிட்டப் போனார், அது குலைக்கத் தொடங்கிவிட்டது.
இவர் பின்னாலே மெதுவாகப் போனார், எங்கள் பின் கேற் திறந்திருக்கிறது, குட்டி அதனூடாக எங்கள் பின் வாசலுக்கு வந்துவிட்டது. அவரும் பின்னாலே சங்கிலியோடு வந்தார். எனக்கு அக் குட்டியையும் அதன் முகத்தையும் பார்த்ததுமே அப்படியே மனம் பிடித்துவிட்டது. எமக்கு நாய் பூனை வளர்த்துப் பழக்கமென்பதால், நான் எங்கள் பரம்பரை நாயாரின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன், குட்டி வாலாட்டியபடி என்னருகில் வந்தது.
தடவியபடியே சொன்னேன், இப்போ சங்கிலியைக் கொண்டு வந்து கட்டுங்கோ என்று. அவரைப் பார்த்தாலே குட்டி உறுமியது. அவரது குரல், அதன் காதில் கேட்டதும் பெரிதாகக் குலைத்தது. இதனால் பயந்துபோய், அவர் சங்கிலியை என்னிடம் தந்து சொன்னார், ஒருக்கால் கட்டிவிடுவீங்களோ என்று. நான் கட்டிவிட்டேன், அப்போ அவர் சொன்னார், கொஞ்ச நேரம் குட்டி இங்கே இருக்கட்டும், நான் பின்னர் வந்து கூட்டிப் போகிறேன் என்று போய்விட்டார். நான் எங்கள் மரமொன்றில் கட்டி சாப்பாடும் போட்டேன், அது சாப்பிட்டு விட்டு நித்திரை கொண்டது. ஆனால் மதில்கரையில் அவர் குரல் கேட்டால் மட்டும் பெரிதாகக் குலைத்தது ஹா ஹா ஹா..
எனக்கென்னவோ அந்த நாய்க்குட்டியை, விட மனமே இல்லை. அம்மாவிடம் சொன்னேன், நாங்களே வளர்ப்போம் என்று. அம்மா சொன்னா, இது அவருடையதுதானே, ஆனால் அவரிடம் இக்குட்டி போகும்போல் தெரியவில்லை, எதற்கும் பொறுத்துப் பார்ப்போம் என்று. பின்னேரம் ஆகியது. புது மாப்பிள்ளை மதிலால் எட்டிப்பார்த்துச் சொன்னார், ஒருக்கால் நாய்க்குட்டியைக் கொண்டுவந்து எங்கள் தூணில் கட்டிவிடுவீங்களோ என்று. குரல் கேட்டதும், கண்விழித்த குட்டி குலைக்கத் தொடங்கிவிட்டது. அம்மா சொன்னா, நீங்கள் வந்து அவிழ்த்துக்கொண்டு போங்கோ என்று.
மாப்பிள்ளை நல்ல உஷாராக வந்தார். நாய்க்குட்டி எழும்பிப் பாய்ந்து பாய்ந்து குரைத்தது. அவருக்குக் கோபம் வந்துவிட்டது, ஏய் சத்தம் போடாதே என உறுக்கிப்பார்த்தார். அது விடாமல் குரைத்தது, எனக்கும் அம்மாவுக்கும் சிரிப்பை அடக்கமுடியாமல் அவதிப்பட்டோம். கடைசியில் அவருக்கு முடியாமல் போகவே, சொன்னார் கொஞ்ச நாள் இங்கேயே இருக்கட்டும் என்று. அன்றுமுதல் அக்குட்டிக்கு எங்கள் பரம்பரைப் பெயரை வைத்து வளர்க்கத் தொடங்கினோம்.
=======================INTERVAL========================
=======================INTERVAL========================
நான் தான் அதன் எல்லாப் பொறுப்பும். எல்லாமே நேரத்துக்குச் செய்வேன். காலையில் கட்டுவது, மாலையில் சாப்பாடு வைத்துவிட்டு, அவிட்டுவிடுவது. பகலில் தேவைப்பட்டால் அவிழ்ப்பது. எல்லோரையுமே வழமைபோல் எங்கள் வளவால் போய்வர நாய்க்குட்டி அனுமதித்தது. ஆனால் சிலபேரை மட்டும் கண்டாலே அவருக்குப் பிடிக்காது. அந்தப் புதுமாப்பிள்ளை நம் வளவினுள் கால் வைக்கவே முடியாது:), மதிலால எட்டிப் பார்த்தாலே வள் வள் எனக் கத்தியது.. ஹா ஹா ஹா:).
அதை நாய்க்குட்டி என்று சொல்வதே தப்பெனப் படுகிறது. கதைக்க மட்டும் தெரியாதே தவிர, மற்றதத்தனையும் அதற்குத் தெரியும். நாம் சொல்வதெல்லாம் புரிந்துகொள்ளும், பதிலுக்கு தானும் ஊ..... ஊ..... என என்னோடு கதைக்கும். என் சட்டையில் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல், வாயால் என் சட்டையைக் கடித்து இழுப்பார். எனக்கு பொழுது போகாதுவிட்டால், முற்றத்தில் நின்று, அவர் பெயரைச் சொல்லி, என் கையை உயர்த்தி இரு விரல்களால் சுண்டுவேன், உடனே விளையாடத் தொடங்கிவிடுவார். ஆளும் நல்ல உயரம். என் தோள்வரை பாய்ந்து பாய்ந்து விழையாடும், விடவே மாட்டுது, கடைசியில் நான், அம்மா, அம்மா என்று கத்தினால், அம்மா "டேய்" என்று ஒரு குரல் கொடுத்தால் போதும், மிக நல்ல பிள்ளையாக கண்ணை உருட்டி உருட்டிப் பார்க்கும் அம்மா எங்கே நிற்கிறா என்று. அம்மாவைக் காணவில்லையாயின் மீண்டும் என் மீது பாயத் தொடங்கிவிடும்.
காலையில் அம்மாதான் வழமையாக எழுந்து கதவைத் திறப்பா. நான் என் அறையில் படுத்திருப்பேன். கதவை அம்மா திறந்ததும்தான், நேரே ஒரே ஓட்டமாக என் கட்டிலுக்கு வந்து, ஒரே பாய்ச்சலில் என் மீது ஏறி, தன் முதுகை என்மீது வைத்து புரளும், இருபக்கமும் புரளும், சில நாட்கள் நான் நித்திரையில் திடுக்கிட்டு விழிப்பேன். அம்மாவுக்கு மட்டும் பயப்படும் , அம்மாக்கு தெரியும் நேரே என் அறைக்குத்தான் வந்திருப்பார் என்று, அம்மா, "டேய் வெளியே வாடா" என்பா, உடனே ஓடிப்போய் அறைகதவுக் கேட்டினோடு நின்று என்னையும் அம்மாவையும் பார்க்கும். அம்மா போனால் மீண்டும் ஓடிவந்து புரளும். நான் எழுந்து வெளியே போகும்வரை இது நடக்கும்.
எங்கள் வீட்டுக் கோழிகளை அவருக்கு அடையாளம் தெரியும். கோழிகள் அவர்மீது ஏறி உளக்கிக்கொண்டும் போகும், காணாதவர்போல் படுத்திருப்பார். ஆனால் தப்பித்தவறியும் அடுத்த வீட்டுக் கோழி வளவுக்குள் வந்திடக்கூடாது, பாய்ந்து கலைக்கும், சிலவேளை கோழிகள் மேலே எழும்பிப் பறக்கும். இதனால் பக்கத்து வீட்டுக்காரரும் நினைத்திருக்கலாம், நாம்தான் கலைக்கிறோம் என்று. ஆனால் எமக்கே தெரியாவிட்டாலும் நாய்ப்பிள்ளைக்கு அடையாளம் தெரிந்துவிடும்.
நான் காலையில் எழுந்து ரீ குடித்த பின்னரே அவரைக் கட்டுவேன். நான் ரீ குடிக்கும்போது, என்னைப்பர்த்து வாலாட்டும், கொடுக்காவிட்டால் ஊ..... ஊ.... என்று கேட்கும், அதன்பின்னர் அவரது டிஷ்ஸிலும் கொஞ்சம் ஊத்துவேன் குடிப்பார். ஆனால் எனக்கு இப்ப நினைக்க கவலையாக இருக்கு, நான் குடிக்கும்போது அவருக்கும் ஆத்திக் கொடுத்திருக்கலாம், அந்நேரம் எனக்கு கிட்னி:) வேலை செய்யவில்லை. இப்பத்தான் கவலைப்படுகிறேன். பால் காய்ச்சிக் கொடுப்போம், ஆனால் நான் குடிக்கும்போது கொடுக்க நினைப்பதில்லை. அவர் கேட்டால் மட்டுமே கொடுப்பேன். அவரும் தினமும் கேட்பார்:).
நாங்கள் சைவமான நாட்களில் அவருக்காக, எலும்பு/ கருவாடு வாங்கி புறிம்பாக சமைத்துக் கொடுப்போம். சைவம் அவருக்குப் பிடிப்பதில்லை. தினமும் இரவில் அவரது தட்டிலே சாப்பாட்டை வைத்து, ஆளை அவிட்டு விடுவோம். சாப்பிட்டு விட்டு போவார். கொஞ்ச நாளாகப் பார்த்தோம், முக்கால்வாசிச் சாப்பாடு மட்டுமே சாப்பிடுவார், கால்வாசி பிளேட்டில்
இருக்கும். கொஞ்சம் தள்ளிப்போய் படுத்திருப்பார். சாப்பாட்டை யாரும் எடுத்துவிடாதபடி காவல் காப்பதுபோல். நாங்கள் பிளேட்டுக்கு கிட்டப் போனால் ஓடிவந்து மிகுதியையும் சாப்பிடுவதுபோல் பாவனை செய்வார், ஆனால் சாப்பிட மாட்டார். கொஞ்ச நேரம் பொறுத்து மீண்டும் போனால் சாப்பாடு முடிந்திருக்கும். இது என்ன மர்மம் எனக் கண்டு பிடிக்க வேண்டும் என்று, ஒருநாள் சாப்பாட்டை வைத்துவிட்டு ஒளித்திருந்து பார்த்தோம்.
வழமைபோல் இவர் முக்கால் வாசியைச் சாப்பிட்டார், கால்வாசியை மிச்சம் வைத்துவிட்டு போய்த் தள்ளிப் படுத்திருந்தார். கொஞ்ச நேரத்தில் மற்ற மரத்துக்கு கீழே ஒரு சத்தம் கேட்டது, யாரோ நடப்பதுபோல், உடனே இவர் ஓடிச் சென்றார், ( அது அடுத்த வீட்டுப் பொம்பிளை:), இவரது காதலி:)), முகத்தோடு முகம் வைத்து கதைப்பதுபோல் பாவனை செய்தார், உடனே அவ இவரோடு வந்தா, பிளேட்டுக்கு கிட்ட கூட்டிவந்துவிட்டார், அவ சாப்பிட்டா, இவர் பார்த்துக்கொண்டிருந்தார், சாப்பாடு முடிந்ததும் இருவரும் ஓடி ஓடி விளையாடியபடி போனார்கள்.
இதைப் பார்த்து எங்களுக்கு நம்பவே முடியாமல் போய் விட்டது. ஒரு நாய், இப்படி மனிதர்கள் போல நடந்துகொள்கிறதே என்று. அவரை பப்பி என்பதைவிட ஒரு தம்பி என்று சொல்லலாம். அந்தளவிற்கு அறிவு இருந்தது. சனிக்கிழமைகளில் தவறாமல், சம்போ போட்டுக் குளிக்க வார்த்து துடைத்துவிடுவேன். கறுப்பு உடம்பு பளபளவென்று மின்னும். குளிக்க வாடா என்றால், உடனே வந்து குளிக்கும் இடத்தில் நிற்பார். இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். அதுதான் கடைசியாக நாங்கள் வளர்த்த பப்பி. அதன் பின்னர் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை வளர்க்க. இதோடு சேர்த்து பூனையும் வளர்த்தோம், அதன் கதையையும் சொல்லி, இவரது முடிவையும் அதில் சொல்கிறேன். அந்த பப்பியாரை, நாங்கள் வளர்த்தது கிட்டத்தட்ட 3 வருடங்களே, பின்னர் கைவிட்டோம். இப்போ நினைக்க மிகவும் கவலையாக இருக்கு. பூஸாரின் கதையோடு, நாயாரை ஏன் கைவிட வேண்டி வந்தது என்பதனைப் பின்பு சொல்கிறேன்.
ஊசி இணைப்பு:
எப்பூடிப் பிடிக்கலாம்?:)..
YYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYY
__________________________()________________________