நல்வரவு_()_


Showing posts with label உண்மைச் சம்பவம்... Show all posts
Showing posts with label உண்மைச் சம்பவம்... Show all posts

Thursday, 5 October 2017

ஓவி... என்னை மன்னித்து விடு..:(

இம்முறை நம்ம ஏரியாவில்... நெல்லைத் தமிழனால் கொடுக்கப்பட்ட கருவுக்கு, கதை எனும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்:), நன்றாக இல்லை எனில் மன்னிச்சுக்கோங்கோ.. இது ஒரு உண்மைச் சம்பவத்தைக் கருவாகக் கொண்டு.. சிலபொய்களை சேர்த்து, பூசி மெழுகி எழுதியிருக்கிறேன்.- _()_

Thursday, 19 May 2011

எனக்கு Double or Triple OOkai, ஆனா இது முடியாது சாமீஈஈஈஈ:)

இந்த வீடியோவில் இருப்பவர்களே வந்திருந்தார்கள்...


இங்கே ஆரம்பப் பாடசாலைகளில்(Primary Schools) 10 வயதினருக்கு சைக்கிள் ஓடும் விதிமுறைகள் சொல்லிக்கொடுத்துப் பழக்குவார்கள், முடிவில் சோதனை வைத்து சேர்டிபிகேட் கொடுப்பார்கள். அதன் பின்பு அவர்கள் ரோட்டில் சைக்கிள் ஓடலாம்.

எங்கள் மகனின் வகுப்பும் இந்த Term பழகுகிறார்கள்.  அதனால் அவர்கள் வகுப்பை இன்னொரு பாடசாலைக்கு அழைத்துச் சென்றார்கள், ஏனெனில் அங்கு பிரபல்யமான சைக்கிள் ஓட்ட வீரர்கள் வந்து சாகசங்கள் காட்டிப் பின்பு, இவர்களுக்கும் சைக்கிள்பற்றி நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தார்கள்.

வழமையாக இப்படியான ட்ரிப்புக்கு பெற்றோரை உதவிக்கு கேட்பார்கள், ஆசியர்களோடு ஒருசில பெற்றோரும் சேர்ந்து மாணவர்களை அழைத்துப்போய்வருவது வழக்கம். இம்முறை நானும் உதவுகிறேன் எனக் கூறிச் சென்றேன்.

இதுவரை ரீவியில் பார்த்திருக்கிறேன், இம்முறை நேரில் பார்த்தபோது மிகவும் நன்றாக இருந்தது.

=========================================================

பின்னாலே -”- 10 அடி உயரமுள்ள மேடை அமைத்து, முன்னுக்கு ஒரு 5,6 அடி உயரமுள்ள இன்னொரு மேடையமைத்து, பின் மேடையிலிருந்து கீழே மிகவும் ஸ்பீட்டாக இறங்கி, அதே வேகத்தில் முன் மேடைமேல் ஏறிக் கீழே பாய்ந்து கால் நிலத்தில் முட்டாமல் சைக்கிளிலேயே நின்றார்கள்.


பின் மேடையில் ஏறி ஆயத்தமாகிறார்கள்.

=================================================================


சைக்கிளின் பின் ரயறிலேயே
நீண்ட நேரம் மேடையில்
தூக்கித் தூக்கித் துள்ளிக்கொண்டிருந்தார்

======================================================================
பின் மேடையில் ஏறித் தயாராக நிற்கிறார்கள்,
முன் மேடையிலே மீண்டும்,
 ஒன்றரை மீற்றர் உயரத்திலே
உயரம் பாய்வதற்கு ஒரு கம்பி பொருத்தப்பட்டிருக்கு


அக் கம்பியைக் கடக்கிறார் சைக்கிளோடு,
இவர் ஒரு பெண் வீராங்கனை.


=====================================================

முன் மேடைக்கு அருகில் இன்னும் இரு மேடைகள்,
 இன்னும் உயரமானவை இருக்குதெல்லோ,
அந்த முன் மேடையில் இருந்து,
பக்கத்து உயர மேடைக்கு தாவி,
 பின் சைக்கிளாலேயே படியேறி,
 மிக உயர்ந்த மேடைக்குச் செல்கிறார்.



மேலேயிருந்தும் ஒரு சில்லில் சாகசம் காட்டியபின்,
கீழ் மேடைக்குக் குதித்தார்.
 இவரிடம் இருந்தது மிகவும் குட்டிச் சைக்கிள்.



அதேபோலவே இன்னொருவர்,
பெரிய சைக்கிளோடு ஏறியிருக்கிறார்.



இவர் மேலேயிருந்து நேரடியாகக் கீழே குதித்து,
 விழாமல் தொடர்ந்து ஓடினார்.

இது, அந்தக் குட்டிச் சைக்கிள்காரர்,
கீழே எனவுன்ஸ் பண்ணுபவரை
படுக்கச் சொல்லிப்போட்டு பக்கத்திலே பாய்ந்தார்.


தவறாமல் அருகிலே பாய்ந்திருக்கிறார்.

============================================

இவர் குட்டி சைக்கிளோடு
உயரம் பாய ஆயத்தமாகிறார்.



வெற்றிகரமாகப் பாய்ந்து கால் நிலத்தில்
ஊன்றாமல் நின்றார்.


இவர் பெரிய சைக்கிள் வைத்திருப்பவர்..
 தூர இருந்து ஓடிவந்து பாய்கிறார்.



எப்படி சைக்கிள் ஸ்ரன் ஷோ பிடிச்சிருக்கா?
இவை என் மொபைலால் எடுத்தவைகளே.

================================================

பின் இணைப்பு:
இவை தம்பி ஜீனோ, என் கொசு மயிலுக்கு அனுப்பியவை....



சைக்கிள் இல்லாவிட்டால் என்ன, நாங்கதான் சாகசங்கள் செய்வோமே...:), ஆராவது பிடிக்க முடியுமோ?:).


உஸ் அப்பா... சோ....ஓ.. ரயேர்ட்...
இது ச்சோஓ சுவீட்டாம் தம்பிதான் சொன்னவர்ர்ர்ர்ர்:).


  ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விரும்பியது கிடைக்கவில்லையே என்பதற்காக
கிடைக்கும் எல்லாவற்றையும் விரும்பக்கூடாது
......கண்ண..தாசன் சொன்னவர்....
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Saturday, 22 January 2011

கனியிருப்பக் காய் கவர்தல்


நெடுநாள் மனதில் இருந்த புதையல், இன்று எப்படியும் மேடையேற்றிட எண்ணி களம் இறங்கிட்டேன்.

எனக்கு சின்ன வயது ஞாபகங்கள் அப்படியே பசுமரத்தாணிபோல மனதிலே இருக்கு. நான் முதன் முதலில் கடிதம் எழுதத் தொடங்கியது என் 7 ஆவது வயதில் என நினைக்கிறேன்.

எமது ஒன்றுவிட்ட அண்ணன் ஒருவர், அப்போது யூனிவசிட்டி கிடைத்துப் போயிருந்தார். அவர் எப்போதும் என்னோடு நன்கு பாசமாக இருப்பார். யூனி போனதும் அங்கிருந்து எனக்கு மட்டும் தனியாக ஒரு என்வலப்பில் என் பெயர்போட்டு முகவரி இட்டு மெயில் அனுப்புவார், வீட்டில் ஏனையோருக்கு ஒரு மெயில் அனுப்புவார். அந்த வயதில் என் பெயரில் முகவரியிட்டு மெயில் வருவது எனக்கு தாங்கமுடியாத மகிழ்ச்சியைக் கொடுக்கும். வீட்டில் அண்ணன், அக்கா எல்லோரும் என்னைக் கலைப்பார்கள் கடிதம் படிக்க, நான் ஏதாவது அவர்களிடம் பெற்றுக்கொண்டு (கன்டோஸ், மிட்டாய்... etc.,) படிக்கக் கொடுப்பேன்.

பின், அம் மெயிலை என்னிடமிருந்த குட்டி சூட்கேஷில் பத்திரமாக அடுக்கி வைப்பேன். அவரின் எழுத்து முத்து முத்தாக இருக்கும். எனக்குப் புரியவேண்டும் என்பதற்காக, இன்னும் அழகாக அச்சிட்டதுபோல எழுதுவார். எழுதும் பேப்பரிலும் கோடுகள் வரைந்து அழகாக்கி அனுப்புவார். நான் எப்பவும் எனக்குப் பிடித்தவர்களை என் ரோல் மொடலாக எடுத்துக்கொள்வது வழக்கம், அவர்களின் நடை உடை பாவனைக்கு நானும் மாற முயற்சிப்பேன்(இப்பவும்தான்). அதுபோல் அவரின் எழுத்துக்களை பார்த்துப் பார்த்து நானும் அழகாக்கி எழுதப்பழகுவேன்.

எனக்கு கவிதை, பழமொழிகள், பொன்மொழிகள்.... ஏன் கண்ணதாசனில்கூட ஆர்வம் உருவாக வித்திட்டவர் அவரென்றே சொல்லலாம். அந்தளவுக்கு கடிதத்தில் எப்படியும் ஒரு பொன்மொழியோ பழமொழியோ அல்லது தத்துவமோ எனக்குப் புரியக்கூடிய வகையிலே எழுதுவார். அவரது கடிதம், கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் புத்திமதியாக, நல்ல அன்பாக, ஒரு குழந்தைக்கு எது நல்லதோ அவ்வகையில் அமைந்திருக்கும். இரு பக்கங்களாவது எழுதுவார், நானும் அப்படியே ஸ்கூல் நியூசிலிருந்து வீட்டு நியூசெல்லாம் கொடுப்பேன் பெரிய பதிலாக.

அப்போது எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம், அவரது கடிதம் வந்த மறுநாளே நான் போட்டுவிடுவேன், ஸ்கூலால் வந்ததும் கடிதம் வந்திருப்பின் வாசித்த கையோடு, மேசையில் எல்லாம் இருக்கமாட்டேன், நடுக் ஹோலிலே, நிலத்திலே படுத்திருந்துதான் எழுதுவேன், பின்புதான் சாப்பிடப்போவேன். அதேபோல என் கடிதம் கிடைத்ததும், என்ன படிப்பென்றாலும் பதில் போட்டுவிடுவார்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால், எனக்கு அட்ரஸ் எழுதவெல்லாம் தெரியாது, எனவே கடிதத்தை எழுதி அப்பாவிடம் கொடுத்துவிடுவேன், அவர் ஒபீஸ் போகும்போது/வரும்போது போஸ்ட் பண்ணிவிடுவார்.. அப்பாதான் எனக்கு அப்போ தபால்காரர்:).

ஒரு தடவை கடிதம் எழுதி அப்பாவிடம் கொடுத்தேன், எத்தனை நாளில் பதில் வருமெனத் தெரியும், ஆனால் பதில் வரவில்லை, மீண்டும் இன்னொரு கடிதம் எழுதினேன், அப்பாவிடம் கொடுத்தேன், பதில் இல்லை. அப்போ வீட்டில் ரெலிபோன் வசதியெல்லாம் இல்லை. எப்பவாவது விடுமுறை தினத்தில் அப்பாவின் ஒபீஸ் போய் ரெலிபோன்(ஆசைக்கு) யாருடனாவது கதைப்பதுண்டு, ஆனால் இவருடன் கதைக்கமுடியாதென நினைக்கிறேன், கதைத்ததாக நினைவில்லை.

மூன்று கடிதங்கள் போட்டுவிட்டேன் பதில் இல்லை. எனக்கு கோபம்தான் வந்தது, அப்படிப் பதில்போடமுடியாமல் போய்விட்டதே அவரால், ஒருவேளை மறந்துபோய்விட்டாரோ என்றெல்லாம் அந்தக் குட்டி மனதில் கோபம் வந்துவிட்டது.

உடனே அதேபோல குப்புறக்கிடந்து இன்னொருமடல், என் கடிதத்துக்கு ஏன் பதில் போடவில்லை என கோபமாக என்ன எழுதினேனோ நினைவில்லை எழுதி, மீண்டும் என் மதிப்புக்குரிய, நம்பிக்கைக்குரிய தபால்காரரான அப்பாவிடம் கொடுத்து, கொடுக்கும்போது, அப்பாவுக்கும் ஏசினேன், பாருங்கள் அப்பா எத்தனை நாளாகிவிட்டது, நானும் மூன்று கடிதங்கள் போட்டுவிட்டேன் பதில் இன்னும் வரவில்லையே எனச் சொல்லியபடி கொடுத்தேன். அப்பா ஒரு புன் முறுவலோடு, கடிதத்தை வாங்கி, அப்படியா ஆச்சி? என சொல்லிக்கொண்டு பொக்கட்டில் வைத்துக்கொண்டு போய் விட்டார்.

மீண்டும் பழையகணக்குப்படி சரியான நாளில் பதில் வந்திருந்தது. இம்முறை பெரிய கடிதமாக பல பக்கங்களில் பதில் வந்திருந்தது. அவர் எழுதித்தான் எனக்கு உண்மை தெரியவந்தது. நடந்தது என்னவென்றால்...

நான் கடிதத்தை எழுதி அப்பாவிடம் கொடுக்க, அப்பாவுக்கு அந்நேரம் ஒபீஷில் ஏதோ கடும் வேலைபோலும், அதனால் என் கடிதங்களை ஒபீஷ் ரேபிள் லாச்சியில் போட்டு வைத்திருக்கிறார், அனுப்பவில்லை.

நாலாவது கடிதம் கொடுத்தபோது நான் ஏசினேன் தானே, அதன்பின்புதான் போஸ்ட் பண்ணவில்லை என நினைவு வந்து, அப்பா தானும் ஒரு கடிதம் எழுதி, தான் தான் மறந்துவிட்டேன் என, எல்லாக் கடிதத்தையும் ஒரு என்வலப்பிலே வைத்து அனுப்பியிருக்கிறார்.

அப்போதான் அவர் எழுதியிருந்தார், உங்கள் பதில் பார்த்து மிகவும் கவலையடைந்துவிட்டேன். ஏன் என்னோடு கோபித்தீங்கள்? தவறு என்னில் இல்லை, நீங்கள் எப்படி என்னைத் தவறாக நினைத்தீங்கள், என் பதில் வராவிட்டாலும்கூட, நான் பதில் அனுப்பவில்லையே என தப்பான முடிவுக்கு வரக்கூடாது. எனக்கும் எக்ஸாம் நேரமாகவும் இருந்தது, உங்களிடமிருந்தும் பதில் வரவில்லை எனவேதான், எக்ஸாம் முடியட்டும் என விட்டிருந்தேன். எமக்கு கோபம் வந்து, அக்கோபத்தோடு ஒரு கடிதம் எழுதும்போது, அந் நேரம் அது எமக்கு சரிபோலத்தான் தெரியும். ஆனால், எப்பவுமே நாம் ஒரு கடிதமோ பதிலோ அடுத்தவருக்கு அனுப்பும்போது, எழுதுபவராக மட்டும் இருக்கக்கூடாது, வாசிப்பவராகவும் இருந்து, அந் நேரம் வாசிப்பவரின் மனநிலை எப்படி இருக்குமென்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.



“அன்பற்ற இடத்திலிருந்து வரும்
மலையளவு எதிர்ப்பையும்
தாங்குகிற இதயம்,
அன்புள்ள இடத்திலிருந்து வரும்
கடுகளவு எதிர்ப்பைக்கூட
ஏற்க மறுக்கிறதே”

இப்படியெல்லாம் இன்னும் ஏதேதோ... (இப்ப இருந்திருந்தால் அக் கடிதத்தையே ஸ்கான் பண்ணிப்போட்டிருக்கலாம், இடம்பெயர்வுகளோடு அந்த குட்டி சூட்கேஷும் தொலைந்துவிட்டது) எழுதி, முடிவிலே இதை எழுதியிருந்தார்...

“இனிய உளவாக இன்னாத கூறல், கனியிருப்பக் காய் கவர்ந்தற்கு”

அவர் இதுக்கு மட்டும் கருத்துக்கூறவில்லை, கண்டுபிடியுங்கள் என்றுதான் எழுதியிருந்தார். அத்துடன் அப்பிரச்சனை முடிந்து கடித எழுத்துக்கள் தொடர்ந்தது. எனக்கு அது திருக்குறள் எனத் தெரியாது, ஏதோ பழமொழி என நினைத்துவிட்டேன். ஏன் அப்பா அம்மாவிடம்கூட விளக்கம் கேட்காமல் விட்டேன் எனவும் நினைவில்லை.

ஆனால் சின்ன வயதென்பதால், அதெல்லாம் பசுமரத்தாணிபோல மனதிலே பசுமையாக படிந்துவிட்டிருந்தது. அதனால் இன்றுவரை, ஒரு மெயில் எழுதும்போதுகூட அது நினைவுக்கு வரும். இருப்பினும் என்னதான் கவனமாக இருந்தாலும், சில நேரங்களில் விதி தவறாகி, கண்ணை மறைத்து,  வேண்டுமன்றல்ல, யோசிக்காமல் மெயில் அனுப்பி விடுவதுமுண்டு. அது தவறுதான். கடிதம் போஸ்ட் பண்ணியபின், ரேசர் போட்டு அழிக்கவா முடியும்.

“தவறு செய்யாதவர் மனிதர் அல்ல - அதே நேரம்
தன் தவறை உணர்ந்து (மன்னிப்பு கேட்டு) திருந்தாதவரும் மனிதர் அல்ல”.

பின் குறிப்பு:
இக்கடிதம் உணர்த்தும்(எனக்கு உணர்த்தியிருக்கும்) இரு உண்மைகள் என்னவென்றால். குழந்தைப்பிள்ளைதானே என அலட்சியம் கொள்ளாமல், முடிந்தவரை அதுக்கும் புத்திமதிகள், அறிவுரைகளை அன்பாக சொல்லிக்கொடுக்கோணும்... நிட்சயம், அது புரியாதுவிட்டாலும் மனதில் பதியும், வளர வளர அர்த்தம் புரிந்துகொள்ளும். எமது குழந்தையென்றல்ல, எமக்கு பிடித்த யாரின் குழந்தையானாலும் சரி.. அன்பைக் கொடுத்தால் அன்பைப் பெறலாம்.



அடுத்தது, எப்பவுமே நாம் எழுத்தாளராக மட்டும் இல்லாமல் அதை வாசிப்பவராகவும் இருந்து, வாசிக்கும்போது அடுத்தவரின் மனநிலை எப்படியிருக்கும்.. அதாவது ஒருவேளை எனக்கு இப்படியொரு கடிதம் வந்திருந்தால், என் மனநிலை எப்படி இருக்கும் என எண்ணியபின்னே போஓஓஓஒஸ்ட் பண்ணோனும்.

இந்தக் கண்ணில ஏதாவது தெரியுதா?

Friday, 14 May 2010

சொந்தக்காரங்க... எனக்கு ரொம்பப் பேருங்கோ....


ஏனோ தெரியவில்லை, இவர்களைப்பார்த்ததும், படமெடுத்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்துவிட்டது. எடுத்தேன், பின்பு இங்கு போடவேண்டும் என்ற ஆசை அதிகமாகிவிட்டது.... அதுதான்..சுட்டிட்டேஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. சீ இதென்ன இது போட்டிட்டேஏஏஏஏஏன்ன்ன்ன்ன்.. கடகடவெனப் பாருங்கோ உங்களுக்கு போறிங் வரமுன்ன்ன்ன்ன்ன்..:).

ஒற்றுமையான தம்பதிகள்..



ஏதோ அலுவலாகப் போன இடத்தில் பக்கத்திலே ஒரு பொண்ட்.. அதில் இவர்களைக் கண்டேன் கையில் கமெராவும் இருந்தமையால் சூட் பண்ணிட்டேன்.. இது வேற சூட்:).
இவதான் “தாரா”..


ஆ... கண்பட்டுவிட்டதுபோலும் கோபித்துக்கொண்டு எதிராகப் போயினமே....




பின்பு ஒற்றுமையாகி அருகே வந்தார்கள், நாம் எதிர்பார்த்துப்போகாமையால் உணவேதும் கொண்டு போகவில்லை, கையை நீட்டியதும், ஆ.. என விரலை உள்ளே இழுத்துவிட்டார்... ஒருகணம் திடுக்கிட்டுப், பின்பு ஒரு உண்மை தெரிஞ்சுகொண்டேன்..... தாராக்குப் பல்லில்லை, அதிராவுக்குப் பல்லிருக்கு.. கிக்..கிக்...கீஈஈஈஈ...




அவர்கள் திரும்பிச் சென்றபோது, அதிர்ந்துவிட்டோம் பார்த்து, அதில் ஒருவருக்கு கால் உடைந்து அதை இறகின்மேலே போட்டிருக்கிறார்.




அவர்கள் போகிறார்கள் Bye!! Bye!!!




அங்கே நீந்திய இன்னொரு ஜோடி... யாரையோ நினைக்கவைக்கிறார்கள் இவர்கள்:)..



இவர்களும் அங்கிருந்த உறவினர்தான்..




இன்னும் சிலர் அங்கு இருந்தார்கள், எல்லாப் படங்களையும் இணைக்கவில்லை.

ஊசிக்குறிப்பு:
இதைப்பார்க்கும் உங்களில் யாருக்காவது தைரியம்:) இருந்தால், பறவைகள், விலங்குகள்... படங்களை நீங்களே.. எடுத்து தொடர் பகுதியாக தொடருங்கள் எனக்கேட்டுக்கொள்கிறேன்... இமா, சந்தனா, ஜெய்லானி, ஜீனோ... அல்லது யாராவது.

ஆனால் நீங்கள் இதைத் தொடரவில்லையாயின், அதற்குச் சில காரணங்கள் இருக்கலாம்..
1. கமெரா இல்லாமல் இருக்கலாம்.
2. நேரமில்லாமல் இருக்கலாம்.
3. பறவை, விலங்கினத்தை விரும்பாதவராக இருக்கலாம்...
இவை அனைத்தையும் தாண்டி.. முக்கிய காரணம்....இதுவாகத்தான் இருக்கும்... “ஒரு பூஸுடன் மோதப்பயம்”:)...



2222222222222222222222222222
எதற்கும் காலம் வரும், என எண்ணி,
கடமையைக் கைவிடலாகாது

2222222222222222222222222222



^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பிந்திய இணைப்பு::
உஸ் அப்பாடா பூஸோ கொக்கோ??? இப்படியெல்லாம் எதிர்ப்பார்கள் எனத் தெரிஞ்சுதானே, வாயைக் கொடுத்து வம்பில மாட்டப்படாதூஊஊ என
பூஸ்குட்டிக்கு ~சூப்ஸ்ஸ்~ வாயில வச்சுவிட்டிட்டேன்...

1)முதலாவது மோதல்... நியூ..விலிருந்து..
தாரா தாரா வந்தாரா என வெள்ளைக்கு கறுப்பா போட்டு எதிர்த்திட்டா இம்ஸ்ஸ்ஸ்மாஆஆஆ.... போய்ப் பாருங்கோ... மற்றவைக்கு துணிவில்லைப்போல ஓக்கை காக்கா போகிறேன் ... முறைக்காதீங்கோ..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Sunday, 7 March 2010

Ambulance!!!



அம்பியூலன்ஸ்!!!

என்ன அப்படிப் பார்க்கிறீங்க? பயப்படாதீங்கோ... எல்லாம் என் அனுபவம்தான் பேசுது.
சின்ன வயதிலிருந்தே அம்பியூலன்ஸ், பயரெஞ்சின்... சயரின்(siren) கேட்டால், என்னையறியாமலேயே கை கால் நடுங்கும், இதயமெல்லாம் என்னவோ செய்யும், இதயத்துடிப்பு அதிகமாகிவிடும். இப்பகூட அப்படித்தான் அம்பியூலன்ஸ் சயரின் கேட்டால்... உள்ளுக்குள் யார் இருக்கிறார்களோ என்ன அவஸ்தைப்படுகிறார்களோ என எண்ணி, அச் சத்தம் தொலைதூரம் போகும்வரை எனக்கு நாடித்துடிப்பெல்லாம் அடங்கியதுபோல இருக்கும்.


இங்கு கார் றைவிங் பழகியபோது, எனக்கு பழக்கியவர் சொல்லித்தந்த விதிமுறை, கார் ஓடிக்கொண்டிருக்கும்போது இப்படி ஏதாவது சயரின் சத்தம் கேட்டால், உடனே சிக்னலைப் போட்டுவிட்டு, காரை எந்தக் கரையாயினும் சரி நிறுத்திவிட வேண்டும், நிறுத்தக்கூடாத இடமாயிருந்தாலும் பறவாயில்லை, எமது வாகனத்தை நிறுத்திவிட வேண்டும் அப்போதான் அவர்கள் வெட்டி எடுத்துக்கொண்டு போவார்கள், சயரின் சத்தம் கேட்டால் நாம் ஓடக்கூடாது.... அவர்கள் எம்மை முந்திப்போகக்கூடியளவுக்கு பக்கத்தில் ரோட்டு இருப்பின் நாம் ஓடலாம்.


இதேபோல், ரோட்டைக் கடப்பதற்காக நாம் நிற்கும்போது(Pedestrian Crossing), பட்டனை அமத்திவிட்டு பச்சை சிக்னலுக்காக காத்திருப்போம், பச்சை சிக்னல் வந்ததும், கடக்க தொடங்குவோம். அப்படி பச்சை சிக்னல் வரும்போது எங்காவது அம்பியூலன்ஸ் சயரின் கேட்டால், நாம் கடக்கக்கூடாது, வெயிட் பண்ணிப்பார்க்க வேண்டும் அல்லது, அது கடந்த பின்பே நாம் கடக்க வேண்டும். இப்படியிருக்கும்போது, கடந்த வாரத்தில் ஒருநாள் மோலுக்குப்(Mall) போயிருந்தேன். ஒரு கரையிலிருந்து அடுத்த பக்கத்திற்கு ரோட்டைக் கடக்க வேண்டியிருந்தது. பட்டனை அழுத்திவிட்டு, காத்திருந்தோம். அதாவது இரு பக்கத்திலும் நிறையப்பேர் ரோட்டைக் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தோம்.






இங்கு இன்னொரு கதையையும் சொல்லவேண்டும். இங்குள்ள ஆச்சிமார், அதாவது 70, 80 வயதுக்காரர்கள் பெரும்பாலும்(எல்லோரும் அல்ல) மகாராணியாரைப்போலவே உடையணிந்திருப்பார்கள். அதாவது அரைப்பாவாடை, அதற்கேற்ற மச்சிங் பிளவுஸ், பொருத்தமான சூஸ், தொப்பியும் போட்டிருப்பார்கள், லிப்ஸ்ரிக், கியூரெக்ஸ், முகப்பூச்சு, மச்சிங் கான்ட்பாக்... இப்படித்தான் வெளிக்கிட்டு மோலுக்கு வருவார்கள். பார்க்க ஆசையாக இருக்கும்.



சரி, அன்று பட்டனைப் பிறெஸ் பண்ணிவிட்டுக் காத்திருந்தோம், பச்சைலைட் வந்தவேளை, திடீரென அம்பியூலன்ஸ் சயரின் கேட்டது, இதே ரோட் பக்கமாக வந்துகொண்டிருப்பது தெரிந்தது. உடனே ரோட்டைக் கடப்பதற்காக ரோட்டிலே காலை வைத்துவிட்டு எல்லோரும் உள்ளே எடுத்துவிட்டோம். அதைக்கவனிக்காதவர்கள் கடக்க ஆயத்தமானபோது, இருபக்கத்திலுமிருந்து, எதிர்பக்கமிருந்து கடக்க தொடங்கியவர்களை “Ambulance is coming, stand there, stand there” எனக் கத்தினார்கள்.


ஆனால் ஒரு, வயதான ஆச்சிக்கு மட்டும் எதுவும் கேட்கவில்லை. 80 வயதுக்கு மேல் இருக்கலாம் அவவுக்கு, குயினைப்போலவே அழகாக, நான் மேலே கூறியபடி, மேக்கப் பண்ணிக்கொண்டு வந்திருந்தா. அவ ரோட்டைக் கடக்கத் தொடங்கிவிட்டா, அவவின் பக்கமிருந்தவர்களாவது அதைத் தடுத்திருக்கலாம், தடுக்கவில்லை,(வேண்டுமென்றல்ல, எல்லோரும் திகைத்த நிலை) நான் எதிர்ப்பக்கத்தில் இருந்தமையால் ஓடிப்போய்த் தடுக்கவும் முடியவில்லை. எனக்குத்தான், சயரின் சத்தம் காதில் கேட்டதும், எல்லாத் துடிப்பும் ஸ்தம்பித்துவிடுமே, பிறகெப்படி அடுத்தவருக்கு உதவமுடியும். அம்பியூலன்ஸ் கிட்ட வந்தே விட்டது, ஆச்சி அப்போது நடுரோட்டில் கடந்தவண்ணமிருந்தா, அவ பயந்திடுவார் என நினைத்தோ என்னவோ, அம்பியூலன்ஸ் றைவர், வெட்டி எடுத்துக்கொண்டு போகாமல் மிக அருகில்வந்து நிறுத்தினார்.


அப்போதுதான் ஆச்சி திடுக்கிட்டதுபோல பார்த்துக் கண்டுகொண்டா, அவவுக்கு சரியான அந்தரமாகப் போய்விட்டது. முகமெல்லாம் மாறிவிட்டது, ஓடுவதுபோல காலை எடுத்து வைத்து இக்கரைக்கு வந்தா, வரும்போது சொல்லிக்கொண்டே வந்தா.. "sorry.. sorry... I didn’t notice that... I didn’t notice that" என. அதன்பின்பு அம்பியூலன்ஸ் போய்விட்டது. ஆனால் எனக்கு அந்த ஆச்சியை நினைக்க சரியான கவலையாகிவிட்டது, நானும் சேர்ந்து அவவைத் தடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றேனே என மனதில் ஒரு உறுத்தலாக இருந்தது. ஆனால் அத்தனையும் நடந்தது... ஒரு 2 நிமிடத்திலும் குறைந்த இடைவெளியில்தான்.... வயதாகிவிட்டால் எமது நிலைமையும் இப்படித்தானே. நாம் தான் எம்மால் முடிந்தவரை வயதானோருக்கு உதவ வேண்டும்.

' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' '

இது Catnip Rose இல்லை....:) soap ஆல் செய்யப்பட்ட ரோசாப்பூவின் வாசத்தோடு உறங்குகிறார் பூஸார்..... இது அன்பு இளமதியின்.. வாசனைமிக்க பரிசு....


~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

பின் இணைப்பு:


"எது அழகு?"



----------------------------------------------------------------------
"முல்லைக்கு முட்டுக்கொடுக்க தேரைத் தேடாதீர்கள்
உடைந்த கால்களுக்கு உங்கள் தோளைக் கொடுங்கள்"
----------------------------------------------------------------------

Saturday, 30 January 2010

"பூஸா" விலிருந்து ஒரு காதல்...


இக்கதை பல வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவம்.

என்னோடு படித்த நண்பியின், அண்ணாவின் நண்பன் ஒருவரின் கடிதம்.. கவிதை..

இலங்கையிலே முன்பு, திடீர்த்திடீரென இராணுவத்தினரால் சுற்றி வளைப்பு நடக்கும். அந்நேரம் அதில் அகப்படும் ஆண்பிள்ளைகளைப் பிடித்துச் செல்வார்கள்.. தமது மனம் போன போக்கிலே பிடிப்பார்கள்.. சிலவேளை காப்பாற்றலாம், அல்லது அவர்களின் மூட்டைப் பொறுத்து, என்ன இருந்தாலும் பிடித்தவரைக் கூட்டிப்போய்விடுவார்கள் காம்ப்க்கு(முகாமுக்கு).

ஒருதடவை இப்படித்தான் இருந்தாற்போல் சுற்றிவளைத்து... அகப்பட்ட ஆண்பிள்ளைகளையெல்லாம் அப்படியே அள்ளிக்கொண்டு போனார்கள்.. போன வேகத்திலேயே.. கொழும்பிலுள்ள.. பிரபல்யமான ஒரு ஜெயில்.. அதுதான் ”பூஸா..” அங்கு அனுப்பிவிட்டார்கள்.

அப்படி அகப்பட்ட அப்பாவிகளில் ஒருவர் தான், இந்த நண்பன். இவரைப் பூஸா முகாமுக்குக் கொண்டுபோனபின், என் நண்பியின் அண்ணனுக்கு ஒரு கடிதம் அனுப்பினாராம்.. அதில் அவர் குறிப்பிட்டிருந்தது... அவர்களூரிலே ஒரு பெண்ணை, தான் தினமும் பார்த்துவந்தேன்... எனக்கு மிகவும் அவவைப் பிடித்துவிட்டது, ஆனால் பல தடவை கதைக்க முயன்றும், முடியாமல் போய்விட்டது. அதுக்குள் என்னை இங்கு கூட்டிவந்துவிட்டார்கள். எனவே எனக்காக நீ, அப்பெண்ணிடம் சென்று சம்மதம் கேட்டுச் சொல்வாயா?? என விபரமெல்லாம் சொல்லி கடிதம் அனுப்பியிருந்தாராம். இதைப் படித்துவிட்டு, நண்பியின் அண்ணாவும் போய் விசாரித்திருக்கிறார், விசாரித்த வேளை அப்பெண்பிள்ளை சொன்னகதை, தனக்கு அவ்வூரிலேயே இருக்கும் தன் மாமாவின் மகனுக்கு ஏற்கனவே திருமணம் நிட்சயிக்கப்பட்டிருக்கிறது என்று.

இதனை பூஸாவிலிருக்கும் நண்பனுக்கு மடலில் எழுதி அனுப்பினார், அதைப்படித்த நண்பன்... அதற்குப் பதிலாக, ஒரு கவிதையாக மடல் அனுப்பியிருந்தாராம்..

அக்கவிதையைக் கண்டதும், உடனே என் நண்பிக்கு, எனது ஞாபகம் வந்துவிட்டது, அதிராவுக்குத்தான் கவிதை என்றால் பிடிக்குமே.. என, அண்ணாவுக்குத் தெரியாமல் அக்கடிதத்தைத் திருடி, ஸ்கூலுக்குக் கொண்டுவந்து தந்தார்.. தந்து சொன்னா.. கெதியா பார்த்தெழுதிவிட்டுத்தா.. மீண்டும் கொண்டுபோய் இருந்த இடத்திலேயே வைத்துவிட வேண்டும் என்று.

நானும் அவசரமாகக் கொப்பி பண்ணிவிட்டுக் கொடுத்தேன்.. ஆனால் பின்பு அதைத் தொலைத்துவிட்டேன்... இருப்பினும் அதிலிருந்த சில வரிகள் என் மனதிலே ஆழமாகப் பதிந்துவிட்டது... அது இதுதான்...


அன்றொரு
அம்புஜத்தைக்
கண்டேன்..அதில்
என் மனதை
பறிகொடுத்தேன்..
பின்னர் - அது
ஆதவனுக்குரியதென
அறிந்து - என்
ஆசைக்கு விலங்கிட்டேன்..

…....................

…............................

சந்ததியை
வளர்க்க விரும்பும்
பெற்றோருக்கு
இவன் என்றும்
வில்லனாக
இருக்க மாட்டான்!!


....இடை வரிகளை மறந்துவிட்டேன்.


நான் இல்லை... நான் இல்லை....




ஜெயில் என்றதும், ஒரு பழைய ஜெயில் நினைவுக்கு வந்துவிட்டது.....

இது இன்வெரறி என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது. உல்லாசப்பிரயாணிகள் பார்வையிடும் இடம். 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.



இதே இடத்தில் பிரபல்யமான ஒரு பழைய ராசாவின் அரண்மனையும்(Castle) அமைந்துள்ளது..



தூரத்திலிருந்து ஒரு தோற்றம்...




அதனைச் சுற்றி இப்பவும் பூஞ்சோலையாக, நந்தவனமாக்கி வைத்து, அழகாக பாதுகாத்து வருகிறார்கள். முன்பு ராசாவைப் பாதுகாக்க.. அரண்மனையைச் சுற்றி பெரிய நீரோட்டம் செய்து, அதில் முதலைகள் வளர்த்தார்களாம்... அதெல்லாம் இப்பவும் அப்படியே இருக்கிறது...

இதில் தெரியும் நீரோடையூடாகத்தான், ராசா, அரண்மனையிலிருந்து படகில் சென்று, ஆற்றில் இறங்கி, ஏனைய இடங்களுக்குப் பயணம் செய்வாராம்..



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதிலெல்லாம், அதிரா ஓடி ஓடிப் படமெடுத்தேனாக்கும்... பலதடவைகள்.. ஆனால் இப்போ அவற்றைக் காணவில்லை(படங்களை).




~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யாராவது பார்க்க விரும்புபவர்கள் வாருங்கள்..... அழைத்துச் சென்று காட்டலாம்.... அழகான மலைத்தொடர்களிடையேதான் அமைந்திருக்கிறது..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பின் இணைப்பு:


காதல் என்பது???

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மணிக் கணக்காகப்
பேசிக்கொண்டிருப்பது..
விஷயமே இல்லாமல்...

Monday, 18 January 2010

அதிராவைத் தேடிய அன்னம்



இரண்டு நாட்களுக்கு முன்பு, என் ஜீப்பில் தனியே போய்க்கொண்டிருந்தேன். நேரம் இரவு ஏழு மணியைத் தாண்டியிருந்தது. வீடு போய்ச்சேர இன்னும் ஒரு மணித்தியாலம் எடுக்கும். வின்ரர் நேரம் என்பதால் 3/3.30 க்கே நன்கு இருட்டத் தொடங்கிவிடும்.

மனதில் பதட்டத்தோடு.. ஓடிக்கொண்டிருக்கிறேன். நான் ஓடிய பாதை 40 mile/hour. அதிலிருந்து 70 mile/hour Motorway இல் என்ரர் பண்ண வேண்டும். பிரித்தானியாவில் Highway என்பதை Motorway என்றுதான் அழைப்பது வழக்கம். கனடா, அமெரிக்காப் பகுதிகளில்தான் ஹைவே என்கிறார்கள். ஏனைய நாடுகள் பற்றித் தெரியவில்லை.



அப்போ நான் 40 மைல் வேகத்திலிருந்து, 70 மைல் வேகத்துக்கு, கொஞ்சம் கொஞ்சமாக கூட்டியபடி வளைவான பாதையூடாக வந்துகொண்டிருந்தேன் மோட்டவேயில் நுழைய. அப்பொழுது பார்க்கிறேன், மோட்டவே வெறிச்சோடிக்கிடக்கிறது. வழமையான அந்த நேரம், உள் நுழைய முடியாதபடி வாகனமாக இருக்கும். இன்று இப்படித் தெரிந்ததும் எனக்கு நெஞ்சு பக்கென்றது. தனியே வருகிறேன். ஏதாவது பாதை மூடிவிட்டார்களோ, திரும்பவேண்டிவருமோ என்றெல்லாம் மனம் எண்ணியபடி, வளைவு நேரானதும் முன்னே பார்த்தேன்.

என் முன்னே வந்த கார்கள் எல்லாம், மோட்டவேயில் நுழையாமல் அப்படியே நிற்கின்றன. நானும் நிறுத்திவிட்டேன். என்னவென்றே புரியாமல் தடுமாறியபடி மோட்டவேயைப் பார்க்கிறேன்... அங்கே இரண்டு மூன்று போலிஸ் கார்கள் ரோட்டின் குறுக்கே, முன்னே போவதும் பின்னே போவதுமாக நடனமாடுவதுபோல, அசைந்து கொண்டிருந்தன.



சில பொலீஸ்காரர்கள், கையிலே பொலீஸ் ஜக்கெட்டைப் பிடித்தபடி குறுக்கும் நெடுக்குமாக ஓடுவது தெரிந்தது. இது என்ன நடக்கிறது என எட்டிப் பார்த்தேன், என் கண்களையே நம்பமுடியாமல், பெரிய ஒரு சுவான்(swan), கிட்டத்தட்ட ஒரு மாட்டுக்கன்றின் அளவிருக்கும் ரோட்டின் குறுக்கே ஓடிக்கொண்டிருந்தது. சுவான் பிள்ளையைப் பிடிப்பதற்காகவே இவர்கள் இந்த ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தார்கள். பொலீஸைப் பார்த்தால் நெடுநேரம் ஓடிக் களைப்படைந்து விட்டவர்கள்போல தெரிந்தது.



சுவான் பிள்ளையும் களைத்துவிட்டார், ஓடுகிறார் பின்னர் ரோட்டிலே படுக்கிறார், அவர் படுத்ததும் பொலீஸ் கிட்டப் போகிறார்கள், உடனே எழுந்து இவர் ஓடுகிறார். இப்படியே நடந்துகொண்டிருந்தது. எங்கேயோ பக்கத்து ஆற்றிலிருந்து வழிமாறி வந்து மோட்டவேயில் நுழைந்திருக்கிறார். அதனால்தான் பாதையெல்லாம் மூடிவிட்டு, சுவானைப் பிடிக்கும் முயற்சியில் பொலீஸ் தோற்றுக் கொண்டிருந்தார்கள். குளிர் வேறு அவர்களை விறைக்க வைத்துக்கொண்டிருந்தது.

நானும் நன்கு ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தவேளை, திடீரென, சுவான் மோட்டவேயை விட்டு இறங்கி நான் நின்ற பாதைக்கு ஓடிவந்தது. அதுவும் என் ஜீப்பை நோக்கி. அன்னம்போல வாழப் பழக வேண்டும் என அடிக்கடி சொல்லும்..... “அதிராவைத் தேடி அன்னமா?” அதிர்ந்து விட்டேன். என் ஜீப்பின் பக்கத்திலே ஜன்னலுக்குக் கிட்ட வந்துவிட்டது, என் கை துரு துருவென்றது, பொக்கட்டிலே இருக்கும் போனை எடுத்து, படமெடுப்போம் என்று. ஆனால் பின்னாலே பொலீஸ் துரத்திக்கொண்டே வந்தமையால், பயத்தில் அப்படியே இருந்துவிட்டேன். தொட்டில் பழக்கம், பொலீஸ், ஆமி என்றால், தானாடாவிட்டாலும் தசை ஆடும்.

என் ஜன்னலோரம் வந்த சுவான்.. அப்படியே ஜீப்பைச் சுற்றிக்கொண்டு முன்னாலே சென்று, பக்கத்திலிருந்த மரங்களுக்குள் சென்றது. பொலீஸும் விடுவதாக இல்லை. கலைத்துக்கொண்டே போனார்கள். சொல்வார்களே ”முயல் பிடிக்கும் நாயை மூஞ்சையைப் பார்த்தால் தெரியும்” என்று. அப்படித்தான், அவர்களைப் பார்த்தால் சுவானைப் பிடிப்பார்கள்போலத் தெரியவில்லை எனக்கு. பின்னர் பாதையைத் திறந்துவிட்டார்கள். நான் வந்து சேர்ந்துவிட்டேன். இப்படியான பல காட்சிகளை ரீவியில் பார்த்து ரசித்திருக்கிறேன், ஆனால் நேரில் பார்த்தபோது, அது ஒரு இன்ப அனுபவமாக இருந்தது.

பின் குறிப்பு:
அன்னப்பறவையை நான் இதுவரை பார்க்கவில்லையாக்கும், சுவான் தான் அன்னம் என்று ஒரு கணிப்பு.

பின் இணைப்பு:
இது, அன்புச் ஸாதிகா அக்கா, என் கொசுமெயிலுக்கு, எனக்காக அனுப்பிய அன்புப் பரிசு ~பூஸ்~
அவரது நண்பியின் செல்லம். பிங் ~போ~ போட்டிருக்கிறார் அப்போ Girl தான்.