|
|
Tweet |
|
|||
இத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நல்வரவு_()_
Saturday, 2 September 2017
கொஞ்சம் அழுகை.. கொஞ்சம் மகிழ்ச்சி:)
Sunday, 11 June 2017
"அந்தப்... பத்து மணி நேரங்களில்....:("
|
|
Tweet |
|
|||
Saturday, 11 February 2012
வளர்ப்பு மகள்!
சுப்பையாவுக்கும் காமாட்சிக்கும் திருமணமாகி அடுத்த மாதமே, காமாட்சி கர்ப்பமானார். அனைவரும் சந்தோச எல்லையில் அலைபுரண்ட நேரம் அடுத்த மாதமே சிசுக் கலைந்துவிட்டது.
ஆழ்ந்த சோகத்துக்கு ஆளானார்கள். அதை சந்தோசப்படுத்த மீண்டும் காமாட்சி தாய்மை எய்தினா. ஆனா அதுவும் அப்படியே 2,3 மாதங்களில் கலைந்துவிட்டது.
இது இப்படியே நிகழ்ந்தது.. ஒன்றல்ல இரண்டல்ல 6 தடவைகள் காமாட்சி இந்த அவஸ்தைக்கு ஆளானார். 7ம் தடவையாக தாய்மை அடைந்தபோது... அச்சிசு நல்லபடி வளர்ந்து, சரியான காலத்தில் பிறந்தது, ஆனால் கொடுமை என்னவெனில் பிறந்த உடனேயே அதுவும் கண்களை மூடிக்கொண்டது.
ஒரு குழந்தை ஆரம்பக் கருவிலேயே மறைவதைக் காட்டிலும், குழந்தையாகிப் பிறந்து மறையும்போது, ஒரு தாய் உடலாலும், மனதாலும் அனுபவிக்கும் வேதனையைச் சொல்லமுடியாதுதானே... அப்படி ஒரு வேதனைக்கு காமாட்சி ஆளானார்.
இக்கொடுமையைப் பார்க்க முடியாமல், யாருக்கும் சொல்லாமல், சுப்பையா, ஆஸ்பத்திரிக்குப் போய், டாக்டரோடு கதைத்து, அன்று பிறந்த ஒரு பெண்குழந்தையைத் தத்தாக எடுத்து வந்துவிட்டார் வீட்டுக்கு.
வீட்டிலே காமாட்சியைத் தவிர ஏனையோர் எதிர்ப்புக் காட்டினர். அதை எல்லாம் சமாளித்து, குழந்தைக்கு “மீனா” எனப் பெயர்சூட்டி வளர்க்கத் தொடங்கினர்.
மீனா, வீட்டுக்கு வந்த ராசியோ என்னவோ... அடுத்தடுத்து 5 குழந்தைகளை, அழகாகப் பெற்றெடுத்தார் காமாட்சி. மீனா, தன் தம்பி தங்கைகளோடு மிகவும் அன்பாகப் பழகினார்... பெற்றோர் மீது அதிக பாசம் காட்டினார். ஓரளவு வயதில் மீனாவுக்கும், அவர் தத்தெடுத்த குழந்தை என்பது ஊரவர்களால் தெரிய வந்தது. ஆனால் தாய் தந்தையர் காட்டும் பாசத்தாலும் அரவணைப்பாலும், மீனாவுக்கு அதெல்லாம் பெரிய விசயமாகப் படவில்லை.
தம்பி தங்கையரும் மீனாவோ,டு அக்கா அக்கா என அதிக பாசம் காட்டினர். உண்மையின்படி சொல்லப்போனால், அக்குடும்பத்தில் அதிக பாசமும் அன்பும் இருந்தது, ஏனைய 5 பிள்ளைகளைவிட மீனாவிடம்தான் அதிகம்.
திருமண வயதை அடைந்ததும், மூத்த மகளான மீனாவுக்கு, மாப்பிள்ளை தேட நினைத்து, பிறத்தியிலே திருமணம் முடித்துக் கொடுத்தால், ஏதும் பிரச்சனை கொடுத்து, மீனாவுக்கு மனம் புண்படும்படி நடந்துவிடுவார்களோ எனும் பயத்தில், சொந்தத்திலேயே திருமணம் முடித்துக் கொடுத்தனர்.
மீனாவும் திருமணம் முடித்து அழகாக 5 குழந்தைகளைப் பெற்றெடுத்தா. மீனாவின் தம்பிமார் வெளிநாடு போனார்கள், குடும்பத்தோடு மீனாவையும் வெளிநாட்டுக்கு அழைத்தார்கள். வெளிநாட்டிலும் மீனா குடும்பத்துக்கு பக்கமாகவே பெற்றோரும் இருந்தனர். பெற்றோர் தம் குறைநிறைகளைச் சொல்லி மனம் ஆறுவது மீனாவிடம்தான்.
மீனாவின் தந்தை சுகயீனமுற்று, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு டாக்டர்களால் சொல்லப்பட்டது, இன்றிலிருந்து சில நாட்களுக்குள் அவர் போய்விடலாம்.... எப்பவும் மரணம் சம்பவிக்கலாம் என. எல்லாப் பிள்ளைகளும் போய்ப் பார்த்து வந்தனர்.
மீனாவுக்கு அன்று என்னவோ மனம் சமாதானம் அடையவில்லை, இன்று நான் அப்பாவோடுதான் இங்கு தங்கியிருக்கப்போகிறேன், நீங்கள் போய் வாருங்கள் என அனைவரையும் அனுப்பிவிட்டா.
இரவு எல்லோரும் போய்விட்டனர். தந்தை மீனாவோடு கதைத்துக் கொண்டுதானிருந்தார். சில மணியில்.... திடீரென சத்தம் சந்தடி இல்லாமல் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அப்போ கடசி நேரத்திலும் அவரோடு கூட இருந்தது , வளர்ப்பு மகளான மீனாதான். இதிலிருந்து என்ன தெரிகிறது, பெற்றால்தான் பிள்ளை என்றில்லை, குழந்தை குழந்தைதான், அதைத் தத்தெடுப்பதில் யாரும் தயங்கக்கூடாது.
குட்டி இணைப்பு:
“நல்லதே நடக்குமென நம்புங்கள் - ஆனால்
மிக மோசமான நிலைமையை எதிர்கொள்ளவும் தயாராக இருங்கள்”
“வாழ்க்கை நிலையில்லாதது, இன்ப துன்பங்கள் நிறைந்தது
எதையும் முழுமையாக அனுபவிக்க முடியாதது”..
|
|
Tweet |
|
|||
Sunday, 6 June 2010
“தீபுக்குட்டி”

அன்பான உங்களுக்கு.....
என்னைத் தெரிகிறதா? நான்தான் தீபுக்குட்டி. என் பெயர் தீபனா, என்னை எல்லோரும் செல்லமாக தீபுக்குட்டி என்றே அழைப்பார்கள், இப்போ எனக்கு தீபனா என்ற பெயர் மறந்தேவிட்டது. எனக்கு வயது 11. எனக்கு ஒரு தம்பி, பெயர் தீபக்.
நான் இப்பொழுது ஆறாம் வகுப்பில் படிக்கிறேன். கொஞ்ச நேரம் மட்டுமே, இக்கணனியோடு இருக்க எனக்கு அப்பா அம்மாவிடமிருந்து அனுமதி கிடைத்திருக்கிறது. அதுக்குள் சோட் அண்ட் ஸ்வீட் ஆக என் முந்தைய அனுபவங்களைச் சொல்லிவிடலாம் என வலைப்பூவுக்கு வந்தேன். நான் வலைப்பூ வைத்திருப்பது அப்பா அம்மாவுக்கு விருப்பமில்லை, அவர்கள் விரும்பாத எதையும் செய்ய எனக்கும் விருப்பமில்லை. காரணம் படிப்பைக் குழப்பிவிடுமாம். அது உண்மைதான், ஆனாலும் நான் நன்கு படிப்பேன். இருப்பினும் இடையிடையாவது வந்து ஹலோ சொல்லிப்போவேன்.
இப்பொழுது நான், பெண்கள் உயர்தரப் பள்ளியில் படிக்கிறேன். இதற்கு முன் கலவன்(ஆண்கள், பெண்கள்) பிறைமறி ஸ்கூலில் படித்தேன். அங்கு 1ம் வகுப்பிலிருந்து 5ம் வகுப்பு வரையுமே உண்டு. நான் முதலாம் வகுப்பிலே சேர்ந்தபோது, என் குரூப்பிலே நாங்கள் ஐந்துபேர் இருந்தோம். என்னோடு
1. டொமார் 2.பரண்
3. அரண்
4. சாந்தி.
முதல்நாள் வகுப்பிலே, நான் அழுதுகொண்டிருந்தபோது, தனது பொக்கட்டிலிருந்த சொக்காவை எனக்குத் தந்து, என் அழுகையை நிறுத்தச் சொன்னது டொமார்தான். அன்று தொடங்கி, நாங்கள் ஐவரும் நல்ல பெஸ்ட் ஃபிரெண்ட் ஆகிவிட்டோம்.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னை எல்லோரும் தீபுக்குட்டி என்றே அழைத்தார்கள். எனக்கது பிடிப்பதில்லை. இது என்ன இது “மசுக்குட்டி” மாதிரி இருக்கே எனப் பலதடவை நினைத்ததுண்டு. ஆனால் முதலாம் வகுப்பிலே சேர்ந்த அன்று, எங்கட ரீச்சர் என்னிடம் வந்து “தீபுக்குட்டி!! பூனைக்குட்டி மாதிரி இருக்கிறாயம்மா, இரட்டைக்குடும்பி யார் கட்டிவிட்டது” எனக் கேட்டபோது, கோபத்திலே எனக்கு முகம் சிவந்தே விட்டது. அப்பொழுதுதான் அவவின் பெயர் “ஐசுக்குட்டி” என்பது தெரிந்தது. அன்றிலிருந்து தீபுக்குட்டி என்ற பெயரும் எனக்கு நன்கு பிடித்துவிட்டது.
அப்பாடசாலையின் அதிபர், எங்கள் அப்பாவின் நண்பர். வெள்ளிக்கிழமைகளில் எல்லோரும் பிரேயர் ஹோலிலே ஒன்றுகூடித் தேவாரம் படிப்பதுண்டு. அதன் பின்னரே வகுப்புக்கள் ஆரம்பமாகும். தேவாரம் சொல்லிக்கொடுக்க, அதிபர்தான் யாராவது ஒரு பிள்ளையை மேடைக்கு அழைப்பது வழக்கம். பெரும்பாலும் தீபுக்குட்டி என என்னையே அழைப்பார், நான் டொமாரையும் சாந்தியையும் அழைத்துச் செல்வேன், மூவரும் தேவாரம் சொல்லிக்கொடுப்போம். அரண் கிரிஸ்தவர், பரண் இஸ்லாமியர் என்பதால் அவர்களுக்கு வேறு ஹோலிலே பிரேயர் நடக்கும்.
எமக்குள் சண்டையே வந்ததில்லை. ஒருநாள் தமிழ் ரீச்சர் படிப்பிச்சா “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”, “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என. அதைக் கேட்ட டொமார், இன்ரவலில் எமக்கு , தன் அண்ணாவின் நண்பன் சொன்னாராம் “அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்”, “ஆலயம் தொழுவது வேலை மினக்கேடு” எனச் சொல்லி, விழுந்து விழுந்து சிரிக்க, இதைக்கேட்ட எனக்கு பொல்லாதகோபம் வந்துவிட்டது, உடனே யோசித்தேன் இது நகைச்சுவைதானே இதுக்கெல்லாம் கோபப்படலாமா என, நானும் விழுந்து விழுந்து சிரிக்க, எல்லோருமே அன்று சிரித்து உருண்டதை மறக்கவே முடியாது. டொமார் நல்ல நகைச்சுவையாளன், எப்போதும் ஏதாவது சொல்லி சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பான்.
முதல்நாள் பாடமாக, ரீச்சர் வந்து, வெள்ளைப்பலகையிலே ஒரு அழகான தாராவை வரைந்து, பார்த்துக்கீறி, பெயிண்ட் பண்ணுங்கோ எனச் சொல்லிப்போட்டு, அடுத்த வகுப்பு ரீச்சரோடு அரட்டை பண்ணப்போய்விட்டா. நானும் கீறியே கீறிப்பார்த்தேன், வரமாட்டேன் என்றுவிட்டது. உடனே பயத்திலே அழத்தொடங்கிவிட்டேன். அப்போ அரண்தான், எனக்கு தாராவை அழகாகக் கீறித் தந்தான், நானும் நல்ல வடிவாக பெயிண்ட் பண்ணினேன், ரீச்சர் பார்த்துப்போட்டு மிகநன்றாக இருக்கெனச் சொன்னா. நான் இப்பவும் அப்படத்தை என் அறையிலே ஒட்டி வைத்திருக்கிறேன்.
பாருங்கோ இவர்தான் அந்தத் தாராப்பிள்ளை:
ஐந்தாம் வகுப்பிலே “புலமைப் பரீட்சை” நடக்கும். அதிலே நான் “அதிதிறமைச் சித்தி” பெற்று “நாம் விரும்பும் பாடசாலையை” தெரிவு செய்து வந்துவிட்டேன். சாந்தி இன்னொரு பாடசாலைக்குப் போய்விட்டா. அரண், டொமார் ஒரு ஆண்கள் பாடசாலையிலும், பரண் இன்னொரு ஆண்கள் பாடசாலைக்குமாக, எல்லோரும் பிரிந்து போய்விட்டார்கள். நாம் பிரிந்தபின், ஒருவரையும் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சாந்தி மெயில் அனுப்பியிருந்தா, அதில், தான் டொமாரைக் கண்டதாகவும், அவர்கள் ஸ்கூல் யூனிபோம் இப்போ சோட்ஸ் இல்லையாம், ட்றவுஷர் தான் போடவேண்டுமாம், தன்னால் டொமாரோடு கதைக்க முடியவில்லை, தூரத்தில்தான் கண்டேன், சிரித்துவிட்டுப் போனான் பார்க்கவே வெட்கமாக இருந்தது என.
டொக்.. டொக்... டொக்.... , கொஞ்சம் பொறுங்கோ என் அறைக்கதவை யாரோ தட்டீனம், என்னவெண்டு கேட்டுக்கொண்டு வாறேன். அது அம்மாதான் கூப்பிட்டவ, “ஏன் இன்னும் லைட் எரியுது? இன்னும் நித்திரைகொள்ளவில்லையோ?” எனக் கேட்டுவிட்டுப் போறா. எனக்குக் கொம்பியூட்டர் இருக்கு, ஆனால் விடுமுறை காலங்களில் மட்டுமே, இன்ரநெற் பார்க்கும் அனுமதி உண்டு. நேற்றுத்தான் என் பரீட்சை எல்லாம் முடிந்தது. அதனாலேயே, இன்று இன்ரநெற்றில் கேம் விளையாட அனுமதிக்கப்பட்டேன்.
இக் குறுகிய நேரத்துள் என் கதையின் சுருக்கத்தைக் கூறிவிட்டேன். முடிந்தால் மீண்டும் சந்திக்கிறேன். இனியும் விழித்திருந்தால் அடிதான் விழும், எனவே படுக்கப்போகிறேன். அனைவருக்கும் குட்நைட்.....

---------------------------------------------------------------------------------------------------
பின் இணைப்பு:
இவர் எங்கள் கிட்டடிச் சொந்தக்காரர்.... பக்கத்து வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்.. அப்படியெண்டால் அதிராவுக்கு என்ன முறை என்பதைக் கண்டுபிடியுங்கோ... என்மீது கொஞ்சம் பொறாண்மை:), என்னை பார்த்து ஒரு லுக் விடுகிறார் பாருங்கோ..
She is proud of her BEAUTY:).
-------------------------------
“நிழல்கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்,
ஆனால் உண்மையான நட்பு,
உயிர் உள்ளவரை துணைக்கு வரும்”
-------------------------------
|
|
Tweet |
|
|||
Saturday, 24 April 2010
தாத்தாவின் நினைவுகள்(நிறைவுப்பகுதி)
தாத்தாவின் நினைவு தொடர்கிறது...
என் மகனுக்கு நான்கு குழந்தைகள். இரு ஆண்களும், இரு பெண்பிள்ளைகளும் இருக்கிறார்கள். எனக்கும் மீனாட்சிக்கும் திருமணமாகி ஐந்து வருடங்கள் குழந்தை கிடைக்காமல், நாங்கள் செய்யாத வைத்தியமில்லை, போகாத கோயிலில்லை. எமக்கு அந்தநேரம், ஆறுதல் தந்து, எம்மை மனிதராக வாழத் தைரியம் கொடுத்தது, எமது உறவுகளும், ஊர் மக்களுமே. பின்னர்தான் எம் மகன் பிறந்தான். அத்துடன் நிறுத்திக் கொண்டோம் என்று சொல்ல மாட்டோம், அவனுக்குப் பிறகு குழந்தைகள் கிடைக்கவில்லை.
பல இடங்களில் பார்த்திருக்கிறேன், தனிப்பிள்ளைகளாக இருப்பவர்கள், தனிமையில் வளர்வதால், அவர்களுக்கு, விட்டுக்கொடுக்கும் தன்மை, பகிர்ந்துகொள்ளும் தன்மை என்பன குறைவாகவே இருக்கிறது. பெற்றோரும், ஒரு பிள்ளை என்று, மொத்த செல்லத்தையும் அப்பிள்ளைமேல் பொழிந்து, பொத்திப் பொத்தி வளர்ப்பதால், பிள்ளை பெரியவர் ஆனால்கூட, தோல்வியைக் கண்டு துவண்டு போகிறது. இது எனது உடை, எனது விழையாட்டுப் பொருட்கள், யாரும் எடுக்கக்கூடாது, வைத்த பொருள் கலையாமல் அதிலேயே இருக்கவேண்டும். இப்படியெல்லாம் பழக்கப்பட்டு விடுகிறது. இதனால், திருமணத்தின் பின்னரும், அனுசரித்துச் செல்லும் தன்மைகள் குறைகிறது.
இவற்றை எல்லாம் மனதில் கொண்டே, நாங்கள் மகனைப் பூட்டி வைத்து வளர்க்கவில்லை. ஒரு சொக்கலேற் வாங்கிக் கொடுத்தாலும், அதை அவனது நண்பர்களுக்கும் கொடுத்தே உண்ணவேண்டும் எனச் சொல்லிக் கொடுத்தோம். "ஆடையைப் பார்த்து எடை போடக்கூடாது, சேற்றிலேதானே செந்தாமரை மலர்கிறது" என்பதைப் புரியவைத்து, தகுதி, தராதரம் பார்க்காமல் எல்லாப் பிள்ளைகளோடும் சேர்ந்தே விளையாடவேணும் என்பதைச் சொல்லிக் கொடுத்தோம். மொத்தத்திலே, நங்கள் அவனுக்குப் பெற்றோராக மாத்திரம் இராமல், நல்ல நண்பர்களாகவும் இருந்து, நன்கு படிக்க வைத்து, இன்று நல்ல ஒரு பதவிக்கு வர வழிவகுத்துக் கொடுத்துவிட்டோம். அவனது விருப்பத்தோடும், எங்களது ஆசியோடும், எமது ஊர்ப்பெண்ணையே முடித்து வைத்தோம். மீனாட்சியினதும், என்னுடையதும் வழிநடத்தல் வீணாகவில்லையென்பது, இன்று என் மகன், தன் குடும்பத்தை அக்கறையோடும், அன்போடும் வழிநடாத்தும் விதத்திலே புரிந்து, நான் பெருமைப்படுகிறேன்.
என் மருமகள், நாலாவது வாரிசை வயிற்றிலே சுமந்தபோது ஒருநாள், போனிலே மகனுடன் கதைத்தபோது, மீனாட்சி கேட்டாள், "தம்பி!! தூர தேசத்திலே, தனியாக இருக்கிறீங்களே, எப்படி வளர்க்கப்போறீங்கள்?, ஊரிலே என்றால் பறவாயில்லை, நாங்கள் இருக்கிறோம், பார்த்துக்கொள்வோம்" என்று. அதற்கு மகன் சொன்னான், " அம்மா!! நான் தனிப்பிள்ளையாக இருந்தேன் ஆனால், ஊர் என்பதால், என்னைத் தனிமை தெரியாமல் வளர்த்துவிட்டீங்கள், வெளிநாட்டில் அப்படி வளர்க்க முடியாதம்மா, வீட்டுக்குள்லேதானே இருந்து வளர்கிறார்கள், நாம் அதிகம் கஸ்டப்பட்டாலும் பறவாயில்லை, பிள்ளைகள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்களே என்றுதானம்மா" என்று. இங்கு வந்த பின்னரே எனக்கும், மகன் சொன்னது சரியென்றே படுகிறது.
வீட்டுக்குள்ளேயே சேர்ந்து விழையாடுகிறார்கள். ஆண்பிள்ளைகளுக்கு ஒரு அறையும், பெண்குழந்தைகளுக்கு ஒரு அறையும் கொடுக்கப்பட்டுள்ளது. தங்களது அறையை, தமது விருப்பத்திற்கேற்ப சோடித்து வைத்திருக்கிறார்கள். இரவு எட்டுமணியானதும், தத்தமது கட்டிலுக்குப் போகப் பழகியிருக்கிறார்கள். காலையில்தான் கொஞ்சம் கஸ்டப்பட்டு எழும்புவார்கள். அதுவும் குளிர்காலத்தில், பார்க்கப் பாவமாக இருக்கும். அவர்களின் எடையைவிட, அதிகமாக உடையணிந்து வெளிக்கிடுவார்கள்.
ஆனாலும் பள்ளிக்கூடம் போவதென்றால், மிகவும் பிரியமாகப் போகிறார்கள். உடல் நலமில்லை என்றாலும், வீட்டில் நிற்க மறுக்கிறார்கள். அதற்குக் காரணம், பாடசாலையில், படிப்பை மட்டுமே திணிக்காமல், பாதி படிப்பு, பாதி விழையாட்டாக நடாத்துகிறார்கள். அத்துடன் ஆசிரியர்களும், மிகவும் அன்பாகவும், பொறுமையாகவும் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்துப் புரிய வைக்கிறார்களாம். வீட்டு வேலைகூட அதிகம் கொடுப்பதில்லை. பள்ளிப்படிப்பே போதுமென்கிறார்களாம். ஹை ஸ்கூல் போனபின்னரே, படிப்பு அதிகமாகுமாம். சிறு வயதிலேயே அதிகமாகப் படிப்பைத் திணித்து, வெறுப்பேற்றிடக் கூடாதென்று எண்ணுகிறார்கள்.
ஓ.... சுவர் மணிக்கூட்டிலுள்ள குருவி, வெளியே வந்து கூவி, இரவு பதினொரு மணியாகிவிட்டதை அறிவிக்கிறது. எனக்கு மீண்டும் ஊர் ஞாபகம் வந்துவிட்டது. எங்கள் ஊரிலே, எது குறைவாக இருக்கிறதோ தெரியாது, ஆனால் அதிகமிருப்பது கோயில்கள்தான். அங்கே இருந்த காலங்களில், நான் மணிக்கூட்டில் நேரம் பார்ப்பதில்லை. அதிகாலை நாலரை மணிக்கு, கந்தசாமியாற்ற மணி அடிக்கும். அதைத் தொடர்ந்து, பிள்ளையாற்ற மணி, ஐந்து மணியாகிவிட்டதைத் தெரிவிக்கும். அந்த மணியோசையோடு நான் எழுந்துகொள்வேன். அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நேரமும் ஒலிக்கும் மணியோசை நேரத்தை அறிவித்தபடியே இருக்கும்.
இங்கு வந்ததிலிருந்து, மணியோசை என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. எனது வயோதிபக் காலத்தில் எல்லாவற்றையுமே இழந்துவிட்டமாதிரி ஓர் உணர்வு அடிக்கடி வந்து போகிறது. ஆனால் எது எப்படி இருந்தாலும், என் மகன் ஒருநாள் சொன்னான், "அப்பா!! ஊரை நினைத்துக் கவலைப்படாதயுங்கோ, தமிழே தெரியாமல் இருந்த என் பிள்ளைகள், இப்போ நீங்கள் வந்தபிறகுதான், நன்கு தமிழ் கதைக்கிறார்கள், அதை நினைத்துப் பெருமைப்படுங்கோ" என்று, அந்த ஒரு வார்த்தை எனக்குப் போதும், எத்தனை துன்பங்களையும், இதற்காக நான் தாங்கிக் கொள்வேன். என மனதிலே எண்ணியபடி, என் அறையை நோக்கிச் செல்கிறேன் நித்திரைக்காக.
------------- முற்றும் -----------------
இது நான் முதன் முதலில் பார்த்த.... சீ...சீ...
முதன் முதலில் தொட்ட.... சே..சே... என்னப்பா இது,
முதன் முதலில் எங்கள் வீட்டில் பூக்கத் தொடங்கியிருக்கும் டஃபடில்(Daffodils) பூவிதூஊ.....
இப்போ, இங்கு, எங்கு பார்த்தாலும்(காடு, மேடு, ரோட்டோரம்) டபடில் பூ மயமாகவே அழகாகக் காட்சி தருகிறது.
இது அன்புச் ஸாதிகா அக்கா, என் கொசு மெயிலுக்கு அனுப்பியது... எதிரிக்கும்(கவனிக்கவும்) கப்கேக்கைக் கொடுத்து உண்ணும் பரம்பரையாக்கும் எங்கட பரம்பரை:).
பின் குறிப்பு::
இதைப் படிச்சிட்டு, பதில் போடாமல்,பேசாமல் மூடிட்டுப் போனீங்களே எண்டால், ஒரு மாத்தத்துக்குள் தாத்தா அல்லது பாட்டியாகிடுவீங்களாம். பூனை சொன்னால் பலிக்குமாமே? முடிவு உங்கட கைகளில்.
------------------------------------------------------------------------------------------
“உண்மையான நண்பர்கள், மறந்துவிடுவார்கள்,
நம்மையல்ல நாம் விட்ட தவறுகளை”
------------------------------------------------------------------------------------------
|
|
Tweet |
|
|||
Sunday, 11 April 2010
தாத்தாவின் நினைவுகள்(பகுதி 2)
நினைவு தொடர்கிறது...
இங்கு நான் தனிமை என்பதை உணர்ந்துவிடக்கூடாது என்பதற்காக மகனும் மருமகளும் ஏதேதோ வசதிகளெல்லாம் செய்துதான் தந்திருக்கிறார்கள். பாவம் இவர்கள்தான் என்ன செய்வார்கள். நான் அவர்களை ஒருபோதும் குறை கூறமாட்டேன். அவர்கள் வேலைக்குப் போகிறார்கள். பின்னேரம் வேலையால் வந்தால் சமையல்வேலை, வீட்டுவேலை, பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தல் இப்படியே பம்பரமாகச் சுற்றுவார்கள். பத்துமணிக்கு முன்னரே எல்லோரும் படுத்து விடுவார்கள். வெள்ளிக்கிழமை வந்தால் கொண்டாட்டம்தான். இரவு ஒன்று இரண்டு மணியாகிவிடும் எல்லோரும் படுக்க. அதேபோல் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பெரும்பாலும் காலை பத்து மணிக்குப் பின்னர்தான் எல்லா வீடுகளிலும் எழும்புவார்கள். அதனால் பத்து, பதினொரு மணிக்கு முன்பு, யாரும் யாருக்கும் "போன்" கூடப் பண்ணுவதில்லை. அப்படியொரு பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
பாடசாலை மூன்று மணிக்குத்தான் முடிவடையும். வீட்டுக்கு வந்தால் ரீவியுடனேயே பிள்ளைகளின் பொழுது கழிகிறது. அவர்கள்தான் என்ன செய்வார்கள். வெளியில் இறங்கமுடியாது குளிர். என் கடைசிப் பேரனுக்கு இப்போ ஐந்து வயதுதான். முதலாம் வகுப்பில் படிக்கிறான். அந்தக் குட்டியும் ஏதோ "காட்டூன்" என்கிறார்கள், பூனை, நாய் எல்லாம் ஆங்கிலத்தில் கதைக்கிறது. அதைப் பார்த்து இவன் சிரித்தபடி இருப்பான். கூப்பிட்டால்கூட காதில் விழாது. அப்படியே இங்குள்ள பிள்ளைகள் வளர்ந்து வருகிறார்கள். பகல் முழுவதும் ஆங்கிலத்திலேயே கதைத்துவிட்டு வீட்டுக்கு வருவதால் தமிழை மறந்து விடுகிறார்கள். அவர்களுக்கு அது புரிந்துகொள்ளக் கஸ்டமாக இருக்கிறது. படங்கள் என்றாலும் பாட்டென்றாலும் ஆங்கிலத்தையே விரும்புகிறார்கள்.
வீட்டுக்குள்ளேயே, பிள்ளைகள் ஒருவருக்கொருவர் "தங்கியூ" எனச் சொல்லிக்கொள்கிறார்கள். ஒருமுறை எனது கடைசிப் பேரனிடம், கொஞ்சம் தண்ணீர் எடுத்து வரும்படி சொன்னேன். அவனும் கொண்டுவந்தான். நான் எதுவும் சொல்லவில்லை, வாங்கிக் குடித்துவிட்டேன். அது அவனுக்கு பெரிய குறையாகிவிட்டது. தாத்தா தங்கியூ சொல்லவில்லை எனத் தகப்பனிடம் முறையிட்டான். நான் தங்கியூ எனச் சொன்ன பின்பே, அவனுக்கு ஆறுதல் ஏற்பட்டது. இங்கு குழந்தைகள் காப்பகம் அல்லது நேசறியிலேயே, அங்குள்ள ஆசிரியர்கள், ஒரு பொருளை பிள்ளைகளின் கையில் கொடுக்கிறபோது, "தங்கியூ" சொல்லுங்கோ எனக்கூறி, பிள்ளைகள் சொன்ன பின்னரே, கையை விடுகிறார்களாம். அப்போது தொடக்கம் குழந்தைகளும், தங்கியூ என்பது கட்டாயமான ஒன்றாகக் கருதுகிறார்கள். தொட்டதற்கெல்லாம் தங்கியூ, சொறி, என சொல்லப் பழகுகிறார்கள். எங்கள் ஊர்களில் ஒரே குடும்பத்துள், நன்றி என்றெல்லாம் நாங்கள் சொல்வதில்லையே. தப்பித்தவறி யாராவது சொல்லிவிட்டாலோ, ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்து, ஏழனப்படுத்தி, திரும்பவும் அவர் அப்படிச் சொல்லமுடியாதபடி செய்துவிடுவோமே.
-------------------------------------------------இடைவேளை------------------------------
இது அன்பு ஆசியா, என் கொசுமெயிலுக்கு அனுப்பிய பூஸாரும் பப்பியும்.... இப்படத்தைப் பார்த்ததும் அவவுக்கு உடன்பிறப்புக்களின்(கிக்..கிக்..கீஈஈஈஈ தெரியாட்டில் கேளுங்கோ ஆரென) ஞாபகம் வந்துவிட்டுதாம், அதுதான் உடனே அனுப்பியிருந்தா.
டிங்...டிங்....டிங்... இடைவேளை முடிந்து நினைவு தொடர்கிறது.......
எட்டு மணிவரை வீட்டில் ஒரே அமளியாக இருக்கும். பின் ஒவ்வொருவராகத் தத்தமது கட்டிலுக்குப் போய்விடுவார்கள். மகனும் மருமகளும் பத்து மணிவரை, என்னுடன் கதைத்துக் கொண்டிருப்பார்கள், பின் அவர்களும் நித்திரையாகிவிடுவார்கள். விடிய எழுப்பவேண்டுமே என்ற ஏக்கம் அவர்களுக்கு, எனக்குத்தான் எந்தப் பொறுப்பும் இல்லையே. எத்தனை மணிக்கும் படுக்கலாம், எத்தனை மணிக்கும் எழும்பலாம். அதிலும் இந்த நாட்டிற்கு வந்தபின், இரவு பகலெல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. குளிர்காலங்களில், விடிவதே எட்டு மணியின் பின்னர்தான். பின்னேரம் மூன்றரைக்கே இருட்டிவிடும். சூரியனைக் காண்பதும் குறைவுதான். அந்தக்காலங்களில்தான், நான் ஊரை அதிகமாக நினைப்பேன். இது என்ன நாடென்று வெறுப்பேற்படும்.
எனது கிராமத்து வீட்டில், கிழக்கு வாசலில், ஒரு பெரிய மாமரம் இருக்கிறது. அதன்கீழ், சாய்மனைக் கதிரையில் உட்கார்ந்திருந்தால், என்ன ஒரு சுகம்... அங்காங்கே மர இலைகளினூடாக, வெயில் மண்ணில் படுவதே, ஒரு தனி அழகுதான். அதை எல்லாம் இனி நினைத்துப் பார்க்கவே முடியாதே. எங்கள் பக்கத்து வளவில், மகன், பெரிய மாடி வீடு கட்டியிருக்கிறான். எவ்வளவோ தடவை சொல்லியும், நானும் மீனாட்சியும் எங்கள் வீட்டிலேயே இருந்தோம். அது எங்களுக்குப் பழகிவிட்டது. எங்கள் வயோதிபக் காலத்திற்கு, அது ஒரு சுதந்திரமான வீடாக இருந்தது.
இங்கு, துப்புவது, மூக்குச் சீறுவதெல்லாம் வீட்டுக்குள்ளேயே செய்வது, மிகவும் கஸ்டமாக இருக்கிறது. வெளியில் துப்பக்கூடாதாம். வீதிகளில், அடிக்கடி குப்பை போடுவதற்கென, குப்பை பரல்கல் வைக்கப்பட்டிருக்கும். சிறு கடதாசியைக்கூட குப்பைத் தொட்டியில் போட, மக்கள் பழகிவிட்டார்கள். தப்பித்தவறி விழும் குப்பைகளை, துப்பரவு செய்வதற்காக வாகனங்களோ அல்லது ஆட்களோ இருப்பார்கள். இங்குள்ள வெள்ளையின மக்கள், நாய்களை அதிகமாக விரும்பி வளர்க்கிறார்கள். ஒரு பிள்ளையை எப்படி வளர்க்கிறோமோ, அந்தளவு கவனமாக நாய்களை வளர்க்கிறார்கள். நாய்களை பெல்ட்டால் கட்டி, கையில் பிடித்தபடி வெளியில் கொண்டு செல்வார்கள். அப்போது, கையில் பொலித்தீன் பைகள் வைத்திருப்பார்கள், ஆரம்பத்தில், எனக்கது விளங்கவில்லை, பின்னர் மகன்தான் சொல்லித் தந்தான், நாய்களைக் கூட்டிச் செல்கிறபோது, அவை ஏதாவது அசிங்கம் செய்தால், அதை அப்படியே, அந்தப் பையால் அள்ளி, அதை அங்காங்கே, நாய்க்கழிவுகளுக்கென்றே "பின்கள்" வைக்கப்பட்டிருக்கும், அதில் போடுவார்களென்று. இது இங்கே ஒரு சட்டமாகவே இருக்கிறது. எனக்கு, அதனைப் பார்க்கவே பெரிய அருவருப்பாக இருந்தது. ஆனால் யோசித்துப் பார்க்கையில், எவ்வளவு தூரம், நாட்டைச் சுத்தமாகப் பேணுகிறார்கள் என்று ஆச்சரியமாகவே இருக்கிறது.
தொடரும்..........
***********************************************************************************
பின் இணைப்பு:
மக்கள்ஸ்ஸ்......
தீயனவற்றைப் பார்க்காதீங்கோ....(நிலவு பார்க்கலாம்)
தீயனவற்றைக் கேளாதீங்கோ....(காதில் இலவம் பஞ்சை அடையலாம்)
தீயனவற்றைப் பேசாதீங்கோ....(பெரீஈஈ அமெரிக்கன் பேர்கரை வாயில் திணிக்கலாம்). ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி....![]()
எனவே இப்படி மகிழ்ச்சியாக இருப்போம்....(கண்படுத்திடாதீங்கோ....)
********************************************************************************
********************************************************************************
“ஒருவருக்குப் புத்திமதி கூற விரும்பினால்,
தனிமையில் கூறுங்கள்,
ஒருவரைப் புகழ விரும்பினால்,
நாலுபேர் மத்தியிலே புகழுங்கள்”
********************************************************************************
|
|
Tweet |
|
|||
Saturday, 13 March 2010
தாத்தாவின் நினைவுகள்......

இது முழுக்க முழுக்க என் கற்பனையில் உருவான கதை...........
சொன்னான்! என் நண்பன் கார்த்திகேசு அப்பவே சொன்னான், "சிவநாதா, வெளிநாடு குளிர் அதிகமாமே! உன்னால் தாங்க முடியுமா?" என்று. எனக்கும் அது தெரிந்திருந்தது, இருப்பினும் என் மகனின் வார்த்தைகளை என்னால் தட்ட முடியவில்லை. மகனதும் மருமகளதும் அன்பான அழைப்பை ஏற்று, இங்கு, இந்தக் குளிர்நாட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டேன்.

என் கிராமத்து நாச்சார் வீட்டில், குளிர்காலமானால் நான் எங்கேயும் வெளியே செல்வதில்லை, அந்தப் பக்கத்துப் பிள்ளையாரை எட்டிப் பார்ப்பதோடு சரி. வீட்டுத் திண்ணையிலுள்ள அந்த சாய்மனைக் கதிரையில் தான், என் பொழுது கழியும். அதிலும் என் மனைவி, மீனாட்சி இறந்ததிலிருந்து, நான் எங்கேயும் போவதில்லை. பிள்ளையாரிடம் போவதோடு சரி.
மீனாட்சி காலமானதன் பின், நான் தனியேதான் அக்கிராமத்து வீட்டிலிருந்தேன். ஆனால், தனிமை என்பதை நான் என்றுமே உணர்ந்ததில்லை. என் பொழுது முழுக்க, அத் திண்ணையிலேயே கழியும். ஏதாவது தேவைக்கு மட்டும்வீட்டினுள் சென்று வருவேன். திண்ணையிலேயே கட்டிலும் இருந்தது.
சமைப்பதற்கு, வீட்டைச் சுத்தம் செய்வதற்கென்று "சரசு" என்ற பிள்ளை வருவாள். தெருவால் போவோர் வருவோர் எல்லாம், வேலிக்கு மேலால் எட்டிப் பார்த்து, நான் இருப்பது தெரிந்தால், " என்னையா? எப்படி இருக்கிறீங்கள்? என ஒரு எட்டு வந்திருந்து கதைத்துவிட்டுப் போவார்கள். குசினி வாசலில் நிற்கும் நாவல் மரமும், முன் படலையுடன் நிற்கும் நெல்லி மரமும் காய்க்கத் தொடங்கிவிட்டால் போதும், அந்த அயல் குழந்தைகள் எல்லாம், எங்கள் வீட்டில்தான் நிற்பார்கள். மீனாட்சி இருந்த காலத்திலும் சரி, பின்னரும் சரி, மீனாட்சியோ நானோ, யாரையும் தடுத்ததில்லை. அதனால் எங்கள் வீட்டில் எப்பவும் தனிமை ஏற்பட்டதில்லை.

இப்பொழுதுதான், தனிமை என்பதை உணர்கிறேன். இங்கு காலையில், எட்டு முப்பது மணிக்கு எல்லோரும் புறப்பட்டு விடுவார்கள், பின்னேரம் நான்கு மணிக்கே திரும்புவார்கள். அதுவரை நான், வீட்டில் தனிமையிலேயே இருப்பேன். என் மகன், எனக்கு பொழுது போவதற்காக சகல வசதியும் செய்துதான் தந்திருக்கிறார், தமிழ் தொலைக்காட்சி, புத்தகங்கள், பேப்பர் என நிறைய வசதி செய்து தந்திருக்கிறார்கள். ஏதோ அந்தக் காலத்தில் படித்து வைத்த படிப்பு, இப்போ பேப்பர் படிக்க உதவுகிறது.

காலையில், எல்லோரும் போன பின்னர், பூட்டிய வீட்டினுள், "ஜெயில் வாழ்க்கை" என்பார்களே!, அதனை இப்போதுதான் நான் உணர்கிறேன். நான் விடும் மூச்சு எனக்குக் கேட்கிறது. அந்தளவு அமைதி. கதவு, ஜன்னல் எல்லாம் எப்பவுமே பூட்டியபடியேதான் இருக்கும். திறந்தால் குளிர் வந்துவிடுமாம். வெளியில் ரோட்டால் கார்போவது, கண்ணால் பார்த்தால்தான் தெரியும். சத்தம் எதுவுமே வீட்டினுள் கேட்காது.
எனது மருமகள், பார்த்துப் பார்த்து எனக்கு எல்லாம் செய்வார், மாலையில் சமைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுவார். மறுநாள், ஏதோ "மைக்குறோவேவ்" என்கிறார்கள் அதனுள் வைத்தால் ஒரு நிமிடத்தில் சூடாகிவிடும், சாப்பிட்டுவிடுவேன். ஆரம்பத்தில், எனக்கு இந்த உணவுகள் ஒத்துக்கொள்வதில்லை, காலப்போக்கில், இப்போ பழக்கமாகிவிட்டது.தேனீர்கூடப் போடப்பழகிவிட்டேன். என்னால் எவருக்கும் தொந்தரவு வரக்கூடாதென்றுதான் நான் எப்பவும் நினைப்பேன்.
மகன் என்னை இங்கு அழைக்கும்போதே நான் சொன்னேன், "தம்பி, இங்கே சமையலை, வீட்டைப் பார்த்துக்கொள்ள சரசு வந்து போகிறாள், எந்நேரமும் நண்பர்கள் வந்து போவார்கள், உறவினர்கள் வருவார்கள். இரவில்கூட இருவர் வந்து, இந்தத் திண்ணையில் படுப்பார்கள். நான் கதைத்துக்கொண்டே உறங்கிவிடுவேன், என்னைப்பற்றி நீ கவலைப்படாதே, வசதி வருகிறபோது ஒரு தடவை வந்து பார்த்துவிட்டுப்போ, எனக்கு இங்கு மீனாட்சி இல்லாதது தவிர, வேறு எந்தக் குறையும் இல்லை", என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். மகன் கேட்கவில்லை. உங்களை அங்கே தனியே விட்டுவிட்டு, என்னால் இங்கு நிம்மதியாக இருக்க முடியாதப்பா, குழந்தைகளும் கேட்கிறார்கள், என்று ஒரே பிடியாகக் கூப்பிட்டுவிட்டான்.
இங்கு குளிர்காலமானால், பக்கத்து வீட்டுக்காரரைக்காண்பதே, மாதத்தில் ஒருமுறை அல்லது இருதடவைகள்தான். அதுவும் வெளியில் போய்வருகிறபோது தப்பித்தவறிக் கண்டால்தான். ஆரம்பத்தில் என்னைப் பார்த்து "ஹலோ" என்றார்கள், நான் எதுவும் சொல்லவில்லை. பின்னர் மகன்தான் சொல்லித்தந்தான், யாராவது ஹலோ என்று சொன்னால், நீங்களும் திருப்பிச் சொல்லுங்கள், இல்லையெனில் உங்களுக்குப் பிடிக்கவில்லையோ என்று நினைப்பார்கள் என்று. அதிலிருந்து நானும் "ஹலோ" சொல்லப் பழகிக்கொண்டேன்.
இப்போ அவர்கள் சொல்ல முதலே, நான் சொல்லி விடுவேன். எங்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு நான்கு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது, அது என்னைப் பார்த்து "மிஸ்டர் சிவநாதன்" என்று அழைக்கும். முதலில் எனக்கு, இதென்ன ஒரு குழந்தை பெயர் சொல்கிறதே என்று ஒரு மாதிரித்தான் இருந்தது. ஊரில் என்றால் ஒரு வயது அதிகமானாலும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்களே. எமது கலாச்சாரம் வேறு, இவர்கள் கலாச்சரம் வேறு. எல்லாமே முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. இடத்திற்கேற்றபடி நாம்தான் எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும், என்று புரிந்துகொண்டேன்.
பகலில், நான் தனிய இருக்கிறேன் என்று, மகனும் மருமகளும் மாறி மாறிரெலிபோனில் விசாரித்துக் கொள்வார்கள். எனக்கும் "ரெலிபோன் காட்" என்று வாங்கித் தந்திருக்கிறார்கள். தனிய இருக்கிறபோது ஊருக்கு எடுத்துக் கதையுங்கள் என்று. ஊரில் கார்த்திகேசு வீட்டில் போன் இல்லை. கொமினிகேசனுக்கு இடையிடையே கூப்பிட்டுக் கதைத்துக் கொள்வேன். கார்த்திகேசு சொல்வான் "ஒழுங்கையால் போகிறபோது, உன் வீட்டுத் திண்ணையைப் பார்க்க, எனக்கு வயிறெரிகிறது" என்று. எனக்கும் நினைக்க கவலையாகத்தானிருக்கிறது. ஒருவேளை மீனாட்சி இருந்திருந்தால், நான் இங்கு வந்திருக்க மாட்டேன். அல்லது இருவருமாக வந்திருந்தால் பொழுதுபோவது தெரியாமல் கதைத்துக் கொண்டிருந்திருப்போம்.
மீனாட்சியும் நானும் எப்போதும் சண்டைப் பிடித்ததில்லை. அவளும் என்னிடம் அன்பாகவும் பணிவாகவும் நடந்து கொள்வாள். நானும் அன்பாக நண்பர்கள் போலவே பழகிவந்தேன். எங்கள் கிராமத்தில், எங்களைப்பற்றிச் சொல்லிக் கொள்வார்கள், தம்பதிகள் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும் என்று. அப்படி அன்பாகத்தான் இருந்தோம். திடீரென வந்த ஒரு காய்ச்சலால், யாராலும் மீனாட்சியைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
----------------தொடரும்....
======================================================

======================================================
இன்று பின் இணைப்பு:
வண்ணாத்துப் “பூஸ்”

======================================================
~~~வசந்தம் என்பது, வாழ்வில் ஒருமுறையேனும் வராமல் போகுமோ~~~
======================================================
|
|
Tweet |
|
|||
Thursday, 18 February 2010
பாட்டி.. (நிறைவுப்பகுதி)

பாட்டி.. தொடர்கிறது...
பாட்டி அந்த நாளில் ஆசிரியராக இருந்தவர். தாத்தா சிங்கப்பூரில் தொழில் புரிந்த சமயம், பாட்டியைத் திருமணம் முடித்தார். பின்னர் பாட்டியும் சிங்கப்பூரிலேயே வசதியாக வாழ்ந்தவர். அவர்களின் ஒரே பிள்ளைதான் எங்கள் அப்பா. தாத்தா மாரடைப்பால் இறந்துவிட, பாட்டி அப்பாவுடன் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார்.
பாட்டியின் விருப்பத்தின்படியும், அப்பாவின் விருப்பத்துடனும், அப்பா, அம்மாவை மணம் முடித்தார். அம்மாவுக்கு அம்மா இல்லை. பாட்டியையே தாயாக நினைத்தார். பாட்டி, அம்மாவை என்றைக்குமே மருமகளாக எண்ணியதை நான் காணவேயில்லை. தன் மகளாகவே நடத்தினார்.
எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தைகள் குறைவென்பதால், நான் அம்மாவின் வயிற்றிலிருந்தபோதே பெண் குழந்தை வேண்டுமென்று நேர்த்தி வைத்தார்களாம். அம்மா சொன்னா, ஒருநாள் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவின்போது, வெளிவீதியில் நின்று சுவாமி வெளிவீதி சுற்றுவதை பார்த்துக் கும்பிட்டாவாம் “கந்தா!! உனக்கு இரு மனைவிமார், அதில் ஒருவரை எனக்கு மகளாகத் தந்துவிடு” என்று.ம், அக்குழந்தைக்கு உன் மனைவியின் பெயரையே வைப்பேன் என.
நான் பெண்குழந்தையாகப் பிறந்தபோது, எல்லோருமே ஆனந்தப்பட்டார்களாம். பாட்டி எண்ணியிருந்தாவாம், பெண்குழந்தை எனில் “தாரணி” எனப் பெயர் வைப்பதென்று.. எனவே அம்மாவின் நேர்த்திக்கடனையும் பாட்டியின் விருப்பத்தையும் ஏற்று, எனக்கு “வளதாரணி” எனப் பெயர் வைத்தார்கள்(வள்ளி + தாரணி). பாட்டி என்னைச் செல்லமாக “தாரா” தாரா” எனக் கூபிடுவா, அதற்கேற்றபடி நானும் தாராமாதிரி நடப்பேனாம்.

பாட்டி ஒவ்வொரு கதையாகச் சொல்லச் சொல்ல நானும் ரசித்துக் கேட்பேன். அவ தன்னால் முடிந்தவரை என்னைப் பண்படுத்தி வளர்த்துவிட்டா. பாட்டி சொல்லுவா, பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட வயதுவரைஒழுங்கான பாதையில் வழிநடத்திக்கொண்டு வந்துவிட்டால், பின்னர் அவர்கள் குறுக்குப் பாதையில் செல்ல மாட்டார்கள். அதுபோல் உன்னை நான் நேர் வழியில் கொண்டுவந்துவிட்டேன், இனிமேல் நான் இல்லாதுபோனாலும், நீ நேர் பாதையில்தான் போவாய் என்பது எனக்குத் தெரியும் என்று.
ஆமாம், நான் பாட்டியை நினைத்து நினைத்தே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன் ”ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ?” எனக்கும் புரிகிறது, இருப்பினும், சிலபேரின் சிலநாள் பிரிவையே தாங்க முடியாத மனம், நிரந்தரப் பிரிவை எப்படித்தான் தாங்கிக்கொள்ளும். ஒரு மாதத்துக்கு முன்பு, என்னோடு சிரித்து மகிழ்ந்த பாட்டி, இன்று பூமாலையுடன் சுவரில் படமாகத் தொங்கியபடி புன்னகைத்துக்கொண்டிருக்கிறார் எம்மைப் பார்த்து.
நானும் பாட்டியை உற்றுப் பார்க்கிறேன். என் மனதில் ஒரு புதுத்தென்பு வருகிறது. ஆம், நான் பாட்டியின் கனவை நனவாக்க வேண்டும். அறைக்குள் சென்று புத்தகங்களை எடுத்து அடுக்குகிறேன். என்னில் ஏற்பட்ட இந்த திடீர்மாற்றத்தைக் கண்ட அனைவரும் திகைத்து நிற்கின்றனர்.
நான் பழைய தாராவாக மாறவேண்டும் என்ற பிரார்த்தனையில் இருந்த அம்மா, என்னைக் கட்டித் தழுவுகிறார் ஆனந்தத்தில். நான் பாட்டியை மனதில் நினைத்தபடி புறப்படுகிறேன் பாடசாலையை நோக்கி.
இது என் கற்பனையில் உதித்த கதையே... முற்றுப்பெற்றது.
ஊசி இணைப்பு:
இப்பத்தான் நாங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய நேரம்... உடன்பிறப்புக்களைப் பிரிக்க உள்ளுக்குள்ளால சதி:) நடக்குது. அன்பு இலா அக்கா(ஜீனோவின் முறையில்), அன்பாக எனக்கு அனுப்பிய “நீ... கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்..” என ஒரு காட்சி...

ஆனாலும் பூஸாரும் பப்பியும் எப்பவும் இப்படித்தான்.... பூஷாரை உண்ணவிட்டு பப்பி.. பசியிருக்குமாம்....கிக்...கிக்...கிக்... என்னே பாசம்.

கண்படுத்திடாதீங்கோ பிளீஸ்!!!
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
|
|
Tweet |
|
|||
Saturday, 6 February 2010
" பாட்டி" (ஆரம்பப் பகுதி)

கேட்டவை, அறிந்தவற்றையும் என் கற்பனையையும் சேர்த்து நானே, கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன் எழுதிய ஒரு சிறுகதை...
"பாட்டி"
பாட்டியை நினைக்கும்போதே நெஞ்சுக்குள் ஏதோ செய்கிறது. தொண்டைக்குள் ஏதோ வந்து அடைப்பதுபோல் இருக்கிறது.என் பாட்டியைப்பற்றிச் சொல்வதானால் ஒரு புத்தகமே எழுதலாம்.
நான் எந்தளவிற்கு என் அப்பா, அம்மாவை நேசிக்கிறேனோ அந்தளவிற்கு என் பாட்டியையும் நேசித்தேன். என்னைப் பொறுத்தவரை, எல்லாமே எனக்குப் பாட்டிதான். ஒரு நல்ல தோழியாக, நல்ல ஆசானாக, நல்ல அறிவுரை கூறுபவராக, அதைவிட சிறந்த பாதுகாவலராக இருந்தார். அந்தப் பாட்டியை இன்று நான் இழந்துவிட்டேன்.
ஆமாம்!! பாட்டி இறந்து இன்றுடன் முப்பத்தைந்து நாட்கள் முடிந்துவிட்டன. எனக்கு எல்லாமே கனவாகத்தான் தெரிகிறது. அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் போகத் தொடங்கிவிட்டான். தம்பியும், மனம் தேறி பள்ளிக்கூடம் செல்ல ஆயத்தமாகிறான். அப்பா, அம்மா கவலைகளை மனதில் புதைத்தபடி, மெதுவாக பழைய நிலைமைக்குத் திரும்ப முயல்கின்றனர். எங்கள் அம்மா மனதில் இருக்கும் கவலைகளை முகத்தில் காட்டிக்கொள்ள மாட்டார். வீட்டுத்தலைவி சோர்ந்துவிட்டால் வீடே சோர்ந்துவிடுமல்லவா?அதனாலோ என்னவோ.
அப்பா, முகத்தில் சிரிப்பை உண்டாக்க நினைத்து தோல்வியுற்றவராக இருக்கிறார்.
என்னால் மட்டும் மனதைத் தேற்றவே முடியவில்லை. பாட்டி இல்லாமல் பாடசாலைக்குப் போவதை என்னால் நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. பாட்டி எனக்குச் சொல்வார், எக்காரணம் கொண்டும் கல்வியை நிறுத்தக்கூடாது என்று. வாழ்க்கையில் எதை இழந்தாலும், கல்வியை மட்டும் இழக்கக்கூடாது என்பார்.
பாட்டி ஒருநாள் சொன்னார், `நான் எவ்வளவு காலம் உன்னுடன் இருப்பேனோ தெரியவில்லை, ஆனால் நீ நன்றாகப் படித்து, அண்ணாவைப்போல் பல்கலைக்கழகம் செல்லவேண்டும்` என்று. பாட்டி இருந்தபோது அது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை, எதுவுமே எம்மோடு கூட இருக்கும்வரை, அதன் அருமை எமக்குத் தெரிவதில்லைத்தானே. இழந்தபின்னரே தெரிகிறது. இப்போது என் மனம் சொல்கிறது, பாட்டிக்காக நிட்சயம் நான் நன்றாகப் படிக்க வேண்டும், பல்கலைக்கழகம் செல்லவேண்டும் என்று.
காலையில் பாடசாலை செல்லும்போது, பாட்டிதான் எனக்குத் தலைவாரிப் பின்னிவிடுவார். எனக்கு அடர்த்தியான நீண்ட கூந்தல். அம்மாவிற்கு என்னால் எந்த வேலைக் கஸ்டமும் வந்ததில்லை, ஏனெனில், பாட்டியே எல்லாம் செய்துவிடுவார். பாட்டிக்கு இலவம் பஞ்சுமாதிரி நல்ல வெள்ளைமுடி, நீளமாக இருக்கும், எந்நேரமும் வாரிக் கொண்டை முடிந்திருப்பார். நான் பின்னேரங்களில் அவவுக்குத் தலை பின்னுவேன், உடனேயே கலைத்து கொண்டை போட்டுக்கொள்வார். வயதிற்கேற்ப தோற்றம் இருக்க வேண்டும் என்பார்.
ஒருபோதும், பாட்டி வருத்தமென்று படுத்து நான் கண்டதில்லை. கடைசியாக நான்கு நாட்கள்தான் படுக்கையாக இருந்தார். பின்னர் எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார். பாட்டி, வீட்டால் வெளிக்கிட்டது, ஏதோ பத்துப்பேர் குறைந்துவிட்டதுபோல இருக்கிறது. வீட்டில் பம்பரம்போல சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று, காற்றாய்ப் பறந்துவிட்டார்.
பாட்டி சொல்லியிருக்கிறார், ஏதாவது தாங்கமுடியாத துக்கம் ஏறட்டால், அதை மனதில் அடக்கி வைக்காமல், அதைப்பற்றி மீண்டும் மீண்டும் யாருடனாவது கதைத்துப் பகிர்ந்துகொண்டால் கொஞ்சம் பாரம் குறையுமென்று.
பின்னேரம் அண்ணனைக் கூப்பிட்டேன் “அண்ணன்!! கொஞ்ச நேரம் வந்து இப்படி இரேன்”. அண்ணன் அம்மாக்குச் சொன்னான் “அம்மா! பாட்டியை நினைத்து நினைத்து இவளுக்குப் பைத்தியமே பிடிக்கப்போகிறது, கெதியில் பள்ளிக்கு அனுப்புங்கோ” என்று. கூடவே, தன் நண்பனுக்கு நடந்த ஒரு கதையையும் சொன்னான்.
தன் நண்பனின் தந்தை திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டாராம். இதையறிந்த நண்பர்கள், அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்களாம். தனியே விட்டால் நண்பன் அதிகம் கவலைப்படுவான் என்று, தந்தையின் இறுதிக்கிரியைகள் முடியும்வரை கூடவே இருந்து, மறுநாள் பல்கலைக்கழக விடுதிக்குக் கூட்டிச் சென்றார்களாம்.
அப்போ நண்பனால் பேச முடியவில்லையாம், வாயசைக்க முடியாமல் போய்விட்டதாம். அதனால் வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்களாம், டாக்டர் செக்பண்ணிவிட்டுச் சொன்னாராம், தந்தை இறந்தபின் நண்பன் வாய் திறந்து அழவில்லையாம், நண்பர்களும் இருப்பதனாலோ அல்லது கூச்ச சுபாவத்தாலோ துக்கத்தை மனதிலேயே புதைத்திருக்கிறார், அதனால் அவரால் பேசமுடியாமல் போய்விட்டதாம் எனச் சொல்லி, குணமாக்கிவிட்டாராம்.
இந்தக் கதையையும் கேட்டதே, அம்மாவுக்கு இன்னும் கவலை அதிகமாகிவிட்டது, இவளுக்கும் ஏதும் வருத்தம் வந்துவிடப்போகிறது என்று அப்பாவுக்குச் சொல்லிக்கொண்டிருந்தா... தொடரும்.
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
மெழுகுவர்த்தி
-----------------------

தன்னை அழித்துப்
பிறர்க்குதவுவது
மெழுகுவர்த்தி
~ ~ ~ ~ ~ ~ ~ ~
புகைப்பிடித்தல்
------------------------

தன்னையும் அழித்துப்
பிறரையும் அழிப்பது
புகைப்பிடித்தல்
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
பின் இணைப்பு..
அன்பு இலா, செல்லமாக தன் "சூஸ்" இல் "பூஸ்" வைத்து அனுப்பியது... பூஸாவுக்காக..

"LIFE IS MILK AND THE LOVE IS SUGAR"
|
|
Tweet |
|
|||
