
என்னத்தைக் கண்டேன்???:)
(சிலவேளை இதுதான் வாழ்க்கையோ??:):))
கல்லூரிக் காலத்தில்
என் கண்ணசைவுகள்கூட
உனக்குக் கவிதை சொல்லியிருக்கும்
அதனால் தானே
என் கண்ணசைவுகளை நீ
அதிகபட்சம் நேசித்தாய்
அப்போது எனக்கு
மீசை கூட
முளைத்திருக்கவில்லை!
இருந்தும் நீ எனக்குப்
பச்சைக்கொடி காட்டினாயே...
எதனால்?
காதல் கடிதம்...
ஓ.....
அது என் மாமாவின்
பழைய கடிதத்தைப்
பார்த்து எழுதியது...
அப்போது எனக்குச்
சுயமாக கடிதம் கூட
எழுதத் தெரியாது!
சும்மா
பரீட்சார்த்த முயற்சியாய்
உனக்குக் கொடுத்தேன்
இப்படியாகுமென்று
யார் கண்டது?...
அதன் பின்
நான் என்ன செய்தேன்
எல்லாமே நீதானே!
அப்போதெல்லாம்
உனக்கு என்னைப் பிடிக்கும்!
என் புலம்பல் பிடிக்கும்!
புரியாமல் நான் பேசும்
வசனம் பிடிக்கும்!
நண்பர்கள் உபயத்தில்
நான் சொல்லும்
கவிதைகள்கூட உனக்குப் பிடிக்கும்!
இப்போது மட்டும்
உனக்கு என்ன நடந்தது?
எத்தனை தடவை
என் 'செந்தில்' முகத்தைத் தடவி
'கமல்' என்று புகழ்ந்திருக்கிறாய்..?
எத்தனை தடவை
'நீங்கள் இல்லாவிடால்
வாழ்க்கையே இல்லை'
என்று புலம்பியிருக்கிறாய்..?
அப்போது உண்மையில்
'வாழ்க்கை' என்றால் என்னவென்று
உனக்கும் தெரியாது
எனக்கும் தெரியாது!
இருப்பினும் வாழ்க்கைபற்றி - நீ
நிறையப் பேசுவாய்!
நான் சொல்லும்
அர்த்தமற்ற தத்துவங்களை
அப்படியே நம்புவாய்!
அதிகமேன்....
தொடர்ச்சியாய் ஆறு வருடம்
"நீ குஷ்பூ மாதிரி இருக்கிறாய்"
என்று நான் சொன்ன பொய்யை
நீ கடைசிவரை நம்பினாயே!
அப்போதெல்லாம் எனக்குள்
எதைக் கண்டாய்?
சொர்க்கத்திற்கான விசா
என்னிடம் இருப்பதாக
யார் உனக்குச் சொன்னது?
இப்பொழுது
கொஞ்ச நாட்களாகத்தான்
உன்னிடம் இந்த மாற்றம்!
"உங்களைக் கட்டிக்கிட்டு - நான்
என்ன சுகத்தைக் கண்டேன்?" என
நீ அடிக்கடி புலம்புவதின்
அர்த்தம் எனக்குப் புரியவில்லை!
சிலவேளை
இதுதான் வாழ்க்கையோ?
என்னது?
நான் பேசுவது
கழுதை கத்துவதுபோல்
இருக்கிறதா?
ஐயோ!! பிளீஸ்!!
தயவுசெய்து மெதுவாகக் கத்து
நமது மூன்றாவது மகன்
நம்மை முறைத்துப் பார்க்கிறான்!!!
(கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு, இலங்கைப் பேப்பரில் வெளியானது இது).
இத்துடன் கிறிஸ்மஸ் இலவச இணைப்பு "மொப்பி"..
http://picasaweb.google.com/athiramiya/Moppy
|
|
Tweet |
|
|||