சமீபத்திலே(போன வருடம்) என் மாமா(கணவரின் அப்பா) இறைவனடி சேர்ந்துவிட்டார். அப்போ தொடக்கம் அவர் பற்றி ஒரு பதிவு எழுத நினைத்து எழுதி முடியுதே இல்லை. மனதிலே இருக்கும் அனைத்தையும் எழுத்தில் வடிக்க முடியாவிட்டாலும் ஏதோ என்னால் முடிந்ததை எழுதிடவேணும் என நினைக்கிறேன்.
எப்படி ஆரம்பிப்பது எப்படி எழுதுவதென்றே தெரியவில்லை. முதலில் அவர்பற்றி ... மாமாவுக்கு ஸ்கொட்லாந்தின் எடின்பறோ மெடிகல் கொலீஜ்சிலே அந்நாளில் இடம் கிடைத்தது, அவர்தான் குடும்பத்தில் மூத்தமகன் என்பதால், வீட்டிலே போகவேண்டாம் என ஒப்பாரி .. அந்நாளில் வெளிநாடென்பது... ஏதோ இல்லாமல்போவதற்குச் சமனாகத்தானே கருதினார்கள்.
அதனால் அவர் அதனைக் கைவிட்டு. லண்டன் ஏ எல் செய்து.. பட்டதாரியாகி, கண்டி ரின்ரிக் கொலீஜ்ஜிலே உப அதிபராக இருந்தார். அங்கு நடந்த ஒரு போட்டியிலே ....."Mrs.Kandy", என் மாமிக்கு முதலிடம் கிடைத்ததாம். இதெல்லாம் பழைய ஞாபகங்கள், பின்னர் அங்கிருந்து எப்படியும் வெளிநாடு போயிட வேண்டுமென... முன்னமுன்னம் வந்திறங்கினார்கள் மலேஷியாவிலே... அங்குதான் என் கணவரின் படிப்பும் ஆரம்பமானதாம்...
அங்கிருந்து கிட்டத்தட்ட 25 நாடுகளில் அவர், ஆசிரியராகவும் விஞ்ஞான விரிவுரையாளருமாக இருந்திருக்கிறார், அதைவிட அவர்கள் பல நாடுகளைச் சுற்றிப் பார்வையிட்டிருக்கிறார்கள்...(சைனா, ஜப்பான் பக்கம் தான் போகவில்லை).
எங்கள் திருமணத்தின் மூலம் அவர் எனக்கு மாமா ஆனார். எப்பொழுதுமே அவர்கள் என்னை, ஒரு அடுத்த குடும்பத்துப் பிள்ளையாகவோ அல்லது மருமகளாகவோ நினைத்தது கிடையாது.
என்னை விட்டுவிட்டு மகனோடு ரகசியம் கதைக்கவேண்டும், எனக்கு சிலதை மறைக்க வேண்டும் என்றெல்லாம் நடந்ததே இல்லை. தம் மகனுக்கு வாங்கிக்கொடுப்பதைக் காட்டிலும் எனக்குத்தான் அதிகம் வாங்கித் தருவார்கள்.
நாம், அவர்களிடம் வருகிறோம் எனச் சொன்ன உடனேயே, எனக்குப் பிடிக்குமென மாமா போய், பக்கோடா, மிக்ஷர், இப்படியான உறைப்பான பண்டங்கள் வாங்கி வந்து போத்தலில் போட்டு மேசையில் வைத்திருப்பார். அதைவிட நாம் ஏதும் ஒரு பொருளை ஆசைப்பட்டுக் கேட்டுவிட்டால் போதும், எங்கு தேடியாவது அடுத்த நாள் வாங்கி வந்திடுவார்.
எமக்காக என்றில்லை, எம் உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ ஒரு பொருள் தேவை எனச் சொன்னால் போதும், சொன்ன நாங்களே மறந்தாலும் அவர் மறக்க மாட்டார், பணத்தை நினைக்கவே மாட்டார்.. தேடித் தந்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்.
எம் பிள்ளைகளுக்கு மட்டுமில்லை, எனது குடும்பத்தில் யாருக்கு பிறந்தநாள் வந்தாலும் பரிசும் வாழ்த்தும் கொடுக்காமல் விடமாட்டார்.... ஓய்வு பெற்ற காலத்திலிருந்து தினமும் காலையில் புறப்பட்டுவிடுவார், போய் அதிகமாக புத்தகங்களே வாங்குவார், அதைவிட குட்டிச் குட்டிச் சாமான்கள் வாங்கி வந்து எமக்குப் பார்ஷலில் அனுப்பிக்கொண்டேயிருப்பார்... வாரம் இரு பார்ஷலாவது எமக்கு வந்தவண்ணமே இருக்கும்.
கிச்சின் உபகரணத்திலிருந்து, அழகுப்பொருட்கள் வரை என்னிடம் இருப்பதில் பாதி அவர் அனுப்பியவையே. என்னிடம் இருப்பதை என் நண்பி பார்த்து ஆசைப்பட்டால், அதை நான் “மாமா நீங்கள் அனுப்பியதைப் பார்த்து என் நண்பி மிகவும் ஆசைப்பட்டார்” எனச் சொன்னால் போதும், அடுத்த பார்ஷலில் அதை அனுப்பி, நண்பிக்கு கொடுங்கள் என்பார்... இதுதான் மாமா.
அவர்கள் வீட்டுக்கு யார் வந்தாலும், சாப்பிட்டுவிட்டுப் போனால்தான் அவருக்கு திருப்தி, அத்தோடு தன்னிடம் “ஸ்ரொக்கில்” சேர்த்து வைத்திருக்கும் பொருட்களையும் பரிசாகக் கொடுத்தனுப்புவார். நாங்கள் எம் ஆன்ரி வீட்டுக்குப் போய் வந்தபின், “மாமா, இன்று ஆன்ரி ஒரு கடையில் மட்டின் ரோல் வாங்கித் தந்தா, அதன் சுவையோ சொல்லமுடியாது” என்று சொன்னால் போதும், உடனே எழுந்துபோய் தன் ரெலிபோன் புக்கை எடுத்து வந்து, ஆன்ரிக்குப் போன் பண்ணி, அக்கடை அட்ரஸ் கேட்டு, அடுத்தநாள் போய் எமக்கு வாங்கி வருவார்(எல்லாமே மனக்கண்ணில் நிற்குது).
ஏன், ஹைஷ் அண்ணனின், மருத்துவம் தலைப்பைப் பார்த்து நான் சொன்னேன், மாமா எனக்கு இன்ன இன்ன பொருட்கள் வேண்டும், அவை உடம்புக்கு நல்லதாம், முடிந்தால் அனுப்புங்கோ என்றேன், தேடித் தேடி அனுப்பினார்...... ஏனையோர் ஆச்சரியப்பட்டார்கள் , எமக்கே இப்படியெல்லாம் கடையில் இருப்பது தெரியாது, இவர் எப்படிக் கண்டுபிடித்து வாங்கினார் என. ஏன் எதுக்கு என்றுகூடக் கேட்கமாட்டார்.
அவர்களிலுள்ள நல்ல குணம், வெளிநாட்டிலேயே இருந்ததாலோ என்னவோ, கணவரும் நானும் எங்காவது போகிறோம் என்றால், தப்பித் தவறி மாமா கேட்டாலும் கேட்பார், ஆனால் எங்கே போகிறீங்கள் என மாமி கேட்கவே மாட்டா, எத்தனை மணிக்கடா வருவீங்கள் என்றுதான் கேட்பா, அதேபோல திரும்பி வீட்டினுள் நுழையும்போது ஆசையாக இருக்கும், மாமி ஓடிவந்து இருவரையும் கேட்பா.... என்ன ஊத்த? ரீ போடட்டோ? கொபியோ? ரோஸ்ட்டும் செய்யட்டோ என்று.
சில நேரம் நாம் ரீவி பார்த்துக்கொண்டிருக்கும்போது, என் கணவர் சொல்வார் “அம்மா எனக்கு கோப்பி, அதிராவுக்கு ரீ, அத்தோடு ரோஸ்ட்டும்(என் கணவருக்கு எப்பவுமே பிரெட் ரோஸ்ட் வேண்டும்) தாறீங்களோ” என, மாமி உடனேயே, ஓக்கேடா இதோ கொண்டு வருகிறேன் என்பா, இல்லை மாமி நீங்க இருங்கோ நான் செய்கிறேன் என்பேன்(உண்மையாகத்தான்), உடனே சொல்லுவா இல்லையடா நீங்க பாருங்கோ, நான் கொண்டு வருகிறேன் என்று..., நாம் சோபாவிலே இருக்க, மாமா பழங்களை வெட்டி ரேயிலே கொண்டு வந்து தருவார்.
அவர்கள் வீட்டுக்குப் போய் இருக்கும்போது, மாமா மாமியின் அறைக்குள் போய்... தேடுவேன், அழகான குட்டி குட்டிச் சாமான்கள், தட்டுகள், சுவாமிப்படங்கள், படப்பாட்டுக்கள்... விதம் விதமான சிறிய கைப் பைகள்... இப்படி நிறைய இருக்கும், எனக்குத் தேவையானதை நானே எடுத்து வருவேன். நாம் உரிமையோடு எடுத்தால் அவருக்கு இன்னும் சந்தோஷம் அதிகமாகும்.
எம் குழந்தைகளுக்கு நாம் உடுப்பு வாங்குவதேயில்லை எனலாம். விளையாட்டுப் பொருட்கள், படிக்கும் புத்தகம், கேம்ஸ்கள் எல்லாமே அனுப்பிக்கொண்டிருப்பார். உடுப்புக்கள் எப்பவுமே பல ஜோடிகள் புதிதாக
எம் வீட்டிலிருக்கும். ஒரு முறை நான் என் கணவரிடமும் சொன்னேன்... “மாமா அளவுக்கதிகமாக உடுப்புக்களை அனுப்புவதால், நான் ஆசைக்கு உடுப்பு வாங்குவதில்லை எம் பிள்ளைகளுக்கு” என்று(இப்போ நினைக்க மனவருத்தமாக இருக்கு). கடைசியாக சமீபத்தில் எம்மிடம் வந்தபோது எனக்காக வாங்கி வந்த வீட்டுக்குப் போடும் புஜாமா செட்டே... 5/6 ஜோடிகள் இன்னும் புதிதாக இருக்கு. அப்படித்தான் எண்ணிக்கை இல்லாமல் வாங்கித் தருவார்கள்.
எம் பிள்ளைகள், தமக்கு என்ன தேவையோ, உடனே அதனைப் போனிலே சொல்வார்கள், அக்கிழமையே பார்ஷலில் வந்துவிடும். மகன் சிலவேளை போன் பண்ணி ஒரு பொருளைச் சொல்லிவிட்டு, ஒரு மணித்தியாலத்துக்குள் மீண்டும் போன் பண்ணிக் கேட்பார் “அப்பப்பா அனுப்பிப் போட்டீங்களோ” என, இதோ இதோ போகிறேன், வாங்கி அங்கிருந்தே அனுப்புகிறேன் என்பார், எமக்குச் சிரிப்பாக இருக்கும்.
மாமாவுக்கு படம் எடுப்பதிலும் உடனே அதைப் பிரிண்ட் பண்ணி ஆல்பத்தில் போடுவதிலும் அலாதி பிரியம்.... கிட்டத்தட்ட பைத்தியம் என்றே சொல்லலாம். அவரது உழைப்பிலே குறிப்பிட்ட சதவிகிதம்... படம் எடுப்பதில் செலவுபண்ணியிருப்பார். தான், யார் வீட்டுக்குப் போனாலும் படம் எடுப்பார், தன் வீட்டுக்கு யார் வந்தாலும் எடுப்பார், உடனே அதை இரு கொப்பியாக பிரிண்ட் பண்ணி, இரு ஆல்பம் வாங்கி தமக்கொன்று அவர்களுக்கொன்றெனக் கொடுப்பார்.
நியூசிலாந்திலே, என் கணவர் யூனிவசிட்டி என்ரன்ஸ் பரீட்சைக்காகப் படித்துக்கொண்டிருந்தபோது, தனக்கு பாடம் சொல்லித் தராமல், அங்கு ஸ்கூல் ஹொஸ்டலில் தங்கியிருந்த தன் வகுப்பு மாணவர்களுக்கு, போய்ப் பாடம் சொல்லிக்கொடுப்பாராம், என் கணவர் சொன்னார் அந்நேரம் தனக்கு கோபம் கோபமாக வருமாம், ஆனால் இப்போ நினைக்கையில் “பிறர் பிள்ளையைத் தடவி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்” என நினைத்திருப்பாரோ என்னவோ.
எம்மோடு எங்காவது வெளியே போகும்போது, தோளில் ஒரு பாக் எடுப்பார்(அதில் கமெரா இருக்கும்), உடனே என் கணவர், என் காதில் சொல்லிச் சிரிப்பார் “பேப்பர் ரிப்போட்டர் வருகிறார் பாருங்கோ” என.
மாமாவிலும் மாமியிலும் ஒரு பழக்கம், தன் மகனுக்கு(என் கணவருக்கு) என்ன அட்வைஸ் சொன்னாலும், தம் அதிகாரத்தைத் திணிப்பதில்லை. தம் விருப்பத்தைச் சொல்லிச் சொல்வார்கள், அதிராவின் விருப்பத்துக்கேற்ப முடிவெடுங்கள் என்று. எமது மகன்கள் பிறந்தபோதெல்லாம், தம் விருப்பப்பெயர்களைப் பட்டியலிட்டுச் சொல்லிவிட்டு, என் கணவரிடம் சொன்னார்கள்... இவை எமக்குப் பிடித்த பெயர்கள், ஆனால் அதிராவுக்கு என்ன விருப்பமோ அப்பெயரையே வையுங்கோ என. நாமும் எமக்கு பிடித்த பெயரையும் வைத்து, அவர்கள் விருப்பத்தில் ஒரு பெயரையும் தெரிவு செய்து இரு பெயர் வைத்தோம்.
இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம், அதிகம் சொன்னால் படிப்பவர்களுக்கு அலுப்படிக்கும், நான் இது ஒரு டயறியாகவும் இருக்கட்டுமே என நினைத்தே எழுதுகிறேன்.
இப்படியான மாமா, சில வருடங்களாக இன்சுலின் எடுக்கும் அளவுக்கு ஆளானார், உணவுக்கட்டுப்பாடென்பதே அவருக்கு இல்லை, அதுதான் பெரிய பிரச்சனையே. என் கணவர் குழந்தையாக இருந்தபோது தொடங்கி, சனி ஞாயிறில் ஒரு நாள், ரெஸ்ட்ரோரண்ட் போய்த்தான் சாப்பிடுவார்களாம், அப்பழக்கம் இப்பவும் தொடர்ந்தது
இன்சுலின் ஆரம்பமானதும் என் கணவர் சொன்னார், அப்பா முதலில் வெளியுணவை நிறுத்துங்கோ என, (என் கணவருக்கே மருந்துகள் சொல்வார்...) அதன் பின் எமக்குச் சொல்லாமல் போய்விடுவார்கள், ஆனால் பயத்திலே போன் பண்ணும்போது மாமா சொல்லாமல் மறைப்பார் மகனுக்கு, மாமி சொல்லிப்போடுவா, அப்போ என் கணவர் கேட்பார், ஏனப்பா வெளியில் சாப்பிடப் போனனீங்கள் என்று, உடனே சொல்வார் “இல்லை இல்லை, அம்மா தான் ஆசைப்பட்டவ அதுதான் கூட்டிப்போனேன், நான் சூப்தான் குடித்தேன்” என்று.
பின்னர் அவருக்கு கிட்னி பிரச்சனையாகி, பல வருத்தங்கள் தலைகாட்டத் தொடங்கிவிட்டது, ஆனால் அவர் நன்றாகத் தான் இருந்தார், வெளியே போய் வருவதையும் நிறுத்தவில்லை. அன்றுகூட, இரவு கதைத்துக் கொண்டிருந்துவிட்டுப் போய்ப் படுத்தாராம், இரவு 2 மணிபோல் மாமி கண்விழித்தாவாம், இவர் கட்டில் விழிம்பிலே படுத்திருந்தாராம்.... மாமி தட்டியிருக்கிறா, விழப்போறீங்கள் தள்ளிப்படுங்கோ என, உடம்பு குளிர்ந்திருக்கு.... அவர் போய்விட்டார்.
ஆனாலும் மாமிக்கு இப்போ 66 வயதுதான் ஆகிறது, அவ கத்தி குழறி பெரிதாக ஆர்ப்பாட்டம் செய்யாமல், அமைதியாக அழுதா, நான் அழுதபோது எனக்கு ஆறுதல் சொன்னா “அதிரா அழாதையுங்கோடா, மாமா சந்தோசமாக இருந்தவர், எம்மைச் சந்தோசமாக வைத்திருந்தவர், எமக்கு உலகம் சுற்றிக் காட்டியவர், அவர் சந்தோசமாகவே போய்விட்டார், சந்தோசமாகவே இருப்பார்” என எனக்கு ஆறுதல் சொன்னா,..... அவவின் இந்த ஏற்றுக்கொள்ளலை நினைத்து நாம் சந்தோசப்பட்டோம்.
எனக்கு இப்பதிவைப் போடும்வரை, ஏதோ நான் மாமாவுக்கு குறை விடுகிறேன், என்பதுபோல இருந்தது, இப்போ கொஞ்சம் பாரம் குறைந்திருக்கு.
பின் குறிப்பு:
மண் குடிசை வாசல் என்றால், தென்றல்வர மறுத்திடுமோ.... உனக்காக ஒன்று, எனக்காக ஒன்று ஒருபோதும் இறைவன் கொடுத்ததில்லை....
==========================================================
|
Tweet |
|
|||