இது (Aircraft carrier)இரண்டு கிழமைக்கு முன்பு எங்கள் ஆற்றிலே வந்தபோது படம் எடுத்தேன். பின்னாலே இரண்டு ஹெலியும் முன்னாலே ஒரு பிளேனும் நிற்கிறது(பெரிதாக்கிப் பார்த்தால் தெரியும்).
தாத்தாவின் நினைவு தொடர்கிறது...என் மகனுக்கு நான்கு குழந்தைகள். இரு ஆண்களும், இரு பெண்பிள்ளைகளும் இருக்கிறார்கள். எனக்கும் மீனாட்சிக்கும் திருமணமாகி ஐந்து வருடங்கள் குழந்தை கிடைக்காமல், நாங்கள் செய்யாத வைத்தியமில்லை, போகாத கோயிலில்லை. எமக்கு அந்தநேரம், ஆறுதல் தந்து, எம்மை மனிதராக வாழத் தைரியம் கொடுத்தது, எமது உறவுகளும், ஊர் மக்களுமே. பின்னர்தான் எம் மகன் பிறந்தான். அத்துடன் நிறுத்திக் கொண்டோம் என்று சொல்ல மாட்டோம், அவனுக்குப் பிறகு குழந்தைகள் கிடைக்கவில்லை.
பல இடங்களில் பார்த்திருக்கிறேன், தனிப்பிள்ளைகளாக இருப்பவர்கள், தனிமையில் வளர்வதால், அவர்களுக்கு, விட்டுக்கொடுக்கும் தன்மை, பகிர்ந்துகொள்ளும் தன்மை என்பன குறைவாகவே இருக்கிறது. பெற்றோரும், ஒரு பிள்ளை என்று, மொத்த செல்லத்தையும் அப்பிள்ளைமேல் பொழிந்து, பொத்திப் பொத்தி வளர்ப்பதால், பிள்ளை பெரியவர் ஆனால்கூட, தோல்வியைக் கண்டு துவண்டு போகிறது. இது எனது உடை, எனது விழையாட்டுப் பொருட்கள், யாரும் எடுக்கக்கூடாது, வைத்த பொருள் கலையாமல் அதிலேயே இருக்கவேண்டும். இப்படியெல்லாம் பழக்கப்பட்டு விடுகிறது. இதனால், திருமணத்தின் பின்னரும், அனுசரித்துச் செல்லும் தன்மைகள் குறைகிறது.
இவற்றை எல்லாம் மனதில் கொண்டே, நாங்கள் மகனைப் பூட்டி வைத்து வளர்க்கவில்லை. ஒரு சொக்கலேற் வாங்கிக் கொடுத்தாலும், அதை அவனது நண்பர்களுக்கும் கொடுத்தே உண்ணவேண்டும் எனச் சொல்லிக் கொடுத்தோம்.
"ஆடையைப் பார்த்து எடை போடக்கூடாது, சேற்றிலேதானே செந்தாமரை மலர்கிறது" என்பதைப் புரியவைத்து, தகுதி, தராதரம் பார்க்காமல் எல்லாப் பிள்ளைகளோடும் சேர்ந்தே விளையாடவேணும் என்பதைச் சொல்லிக் கொடுத்தோம். மொத்தத்திலே, நங்கள் அவனுக்குப் பெற்றோராக மாத்திரம் இராமல், நல்ல நண்பர்களாகவும் இருந்து, நன்கு படிக்க வைத்து, இன்று நல்ல ஒரு பதவிக்கு வர வழிவகுத்துக் கொடுத்துவிட்டோம். அவனது விருப்பத்தோடும், எங்களது ஆசியோடும், எமது ஊர்ப்பெண்ணையே முடித்து வைத்தோம். மீனாட்சியினதும், என்னுடையதும் வழிநடத்தல் வீணாகவில்லையென்பது, இன்று என் மகன், தன் குடும்பத்தை அக்கறையோடும், அன்போடும் வழிநடாத்தும் விதத்திலே புரிந்து, நான் பெருமைப்படுகிறேன்.
என் மருமகள், நாலாவது வாரிசை வயிற்றிலே சுமந்தபோது ஒருநாள், போனிலே மகனுடன் கதைத்தபோது, மீனாட்சி கேட்டாள், "தம்பி!! தூர தேசத்திலே, தனியாக இருக்கிறீங்களே, எப்படி வளர்க்கப்போறீங்கள்?, ஊரிலே என்றால் பறவாயில்லை, நாங்கள் இருக்கிறோம், பார்த்துக்கொள்வோம்" என்று. அதற்கு மகன் சொன்னான், " அம்மா!! நான் தனிப்பிள்ளையாக இருந்தேன் ஆனால், ஊர் என்பதால், என்னைத் தனிமை தெரியாமல் வளர்த்துவிட்டீங்கள், வெளிநாட்டில் அப்படி வளர்க்க முடியாதம்மா, வீட்டுக்குள்லேதானே இருந்து வளர்கிறார்கள், நாம் அதிகம் கஸ்டப்பட்டாலும் பறவாயில்லை, பிள்ளைகள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்களே என்றுதானம்மா" என்று. இங்கு வந்த பின்னரே எனக்கும், மகன் சொன்னது சரியென்றே படுகிறது.
வீட்டுக்குள்ளேயே சேர்ந்து விழையாடுகிறார்கள். ஆண்பிள்ளைகளுக்கு ஒரு அறையும், பெண்குழந்தைகளுக்கு ஒரு அறையும் கொடுக்கப்பட்டுள்ளது. தங்களது அறையை, தமது விருப்பத்திற்கேற்ப சோடித்து வைத்திருக்கிறார்கள். இரவு எட்டுமணியானதும், தத்தமது கட்டிலுக்குப் போகப் பழகியிருக்கிறார்கள். காலையில்தான் கொஞ்சம் கஸ்டப்பட்டு எழும்புவார்கள். அதுவும் குளிர்காலத்தில், பார்க்கப் பாவமாக இருக்கும். அவர்களின் எடையைவிட, அதிகமாக உடையணிந்து வெளிக்கிடுவார்கள்.
ஆனாலும் பள்ளிக்கூடம் போவதென்றால், மிகவும் பிரியமாகப் போகிறார்கள். உடல் நலமில்லை என்றாலும், வீட்டில் நிற்க மறுக்கிறார்கள். அதற்குக் காரணம், பாடசாலையில், படிப்பை மட்டுமே திணிக்காமல், பாதி படிப்பு, பாதி விழையாட்டாக நடாத்துகிறார்கள். அத்துடன் ஆசிரியர்களும், மிகவும் அன்பாகவும், பொறுமையாகவும் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்துப் புரிய வைக்கிறார்களாம். வீட்டு வேலைகூட அதிகம் கொடுப்பதில்லை. பள்ளிப்படிப்பே போதுமென்கிறார்களாம். ஹை ஸ்கூல் போனபின்னரே, படிப்பு அதிகமாகுமாம். சிறு வயதிலேயே அதிகமாகப் படிப்பைத் திணித்து, வெறுப்பேற்றிடக் கூடாதென்று எண்ணுகிறார்கள்.
ஓ.... சுவர் மணிக்கூட்டிலுள்ள குருவி, வெளியே வந்து கூவி, இரவு பதினொரு மணியாகிவிட்டதை அறிவிக்கிறது. எனக்கு மீண்டும் ஊர் ஞாபகம் வந்துவிட்டது. எங்கள் ஊரிலே, எது குறைவாக இருக்கிறதோ தெரியாது, ஆனால் அதிகமிருப்பது கோயில்கள்தான். அங்கே இருந்த காலங்களில், நான் மணிக்கூட்டில் நேரம் பார்ப்பதில்லை. அதிகாலை நாலரை மணிக்கு, கந்தசாமியாற்ற மணி அடிக்கும். அதைத் தொடர்ந்து, பிள்ளையாற்ற மணி, ஐந்து மணியாகிவிட்டதைத் தெரிவிக்கும். அந்த மணியோசையோடு நான் எழுந்துகொள்வேன். அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நேரமும் ஒலிக்கும் மணியோசை நேரத்தை அறிவித்தபடியே இருக்கும்.
இங்கு வந்ததிலிருந்து, மணியோசை என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. எனது வயோதிபக் காலத்தில் எல்லாவற்றையுமே இழந்துவிட்டமாதிரி ஓர் உணர்வு அடிக்கடி வந்து போகிறது. ஆனால் எது எப்படி இருந்தாலும், என் மகன் ஒருநாள் சொன்னான், "அப்பா!! ஊரை நினைத்துக் கவலைப்படாதயுங்கோ, தமிழே தெரியாமல் இருந்த என் பிள்ளைகள், இப்போ நீங்கள் வந்தபிறகுதான், நன்கு தமிழ் கதைக்கிறார்கள், அதை நினைத்துப் பெருமைப்படுங்கோ" என்று, அந்த ஒரு வார்த்தை எனக்குப் போதும், எத்தனை துன்பங்களையும், இதற்காக நான் தாங்கிக் கொள்வேன். என மனதிலே எண்ணியபடி, என் அறையை நோக்கிச் செல்கிறேன் நித்திரைக்காக.
------------- முற்றும் ----------------- இது நான் முதன் முதலில் பார்த்த.... சீ...சீ...
முதன் முதலில் தொட்ட.... சே..சே... என்னப்பா இது,
முதன் முதலில் எங்கள் வீட்டில் பூக்கத் தொடங்கியிருக்கும் டஃபடில்(Daffodils) பூவிதூஊ.....
இப்போ, இங்கு, எங்கு பார்த்தாலும்(காடு, மேடு, ரோட்டோரம்) டபடில் பூ மயமாகவே அழகாகக் காட்சி தருகிறது.
இது அன்புச் ஸாதிகா அக்கா, என் கொசு மெயிலுக்கு அனுப்பியது... எதிரிக்கும்(கவனிக்கவும்) கப்கேக்கைக் கொடுத்து உண்ணும் பரம்பரையாக்கும் எங்கட பரம்பரை:).
பின் குறிப்பு::
இதைப் படிச்சிட்டு, பதில் போடாமல்,பேசாமல் மூடிட்டுப் போனீங்களே எண்டால், ஒரு மாத்தத்துக்குள் தாத்தா அல்லது பாட்டியாகிடுவீங்களாம். பூனை சொன்னால் பலிக்குமாமே? முடிவு உங்கட கைகளில்.
------------------------------------------------------------------------------------------
“உண்மையான நண்பர்கள், மறந்துவிடுவார்கள்,
நம்மையல்ல நாம் விட்ட தவறுகளை”
------------------------------------------------------------------------------------------