நல்வரவு_()_


Wednesday 23 February 2011

"என் மாமா"


கூக்குரலாலே கிடைக்காது
அந்த கோட்டைக்குள் நுழைந்தால் திரும்பாது....


சமீபத்திலே(போன வருடம்) என் மாமா(கணவரின் அப்பா) இறைவனடி சேர்ந்துவிட்டார். அப்போ தொடக்கம் அவர் பற்றி ஒரு பதிவு எழுத நினைத்து எழுதி முடியுதே இல்லை. மனதிலே இருக்கும் அனைத்தையும் எழுத்தில் வடிக்க முடியாவிட்டாலும் ஏதோ என்னால் முடிந்ததை எழுதிடவேணும் என நினைக்கிறேன்.

எப்படி ஆரம்பிப்பது எப்படி எழுதுவதென்றே தெரியவில்லை. முதலில் அவர்பற்றி ... மாமாவுக்கு ஸ்கொட்லாந்தின் எடின்பறோ மெடிகல் கொலீஜ்சிலே அந்நாளில் இடம் கிடைத்தது, அவர்தான் குடும்பத்தில் மூத்தமகன் என்பதால், வீட்டிலே போகவேண்டாம் என ஒப்பாரி .. அந்நாளில் வெளிநாடென்பது... ஏதோ இல்லாமல்போவதற்குச் சமனாகத்தானே கருதினார்கள்.

 அதனால் அவர் அதனைக் கைவிட்டு. லண்டன் ஏ எல் செய்து.. பட்டதாரியாகி, கண்டி ரின்ரிக் கொலீஜ்ஜிலே உப அதிபராக இருந்தார். அங்கு நடந்த ஒரு போட்டியிலே ....."Mrs.Kandy", என் மாமிக்கு முதலிடம் கிடைத்ததாம். இதெல்லாம் பழைய ஞாபகங்கள், பின்னர் அங்கிருந்து எப்படியும் வெளிநாடு போயிட வேண்டுமென... முன்னமுன்னம் வந்திறங்கினார்கள் மலேஷியாவிலே... அங்குதான் என் கணவரின் படிப்பும் ஆரம்பமானதாம்...

அங்கிருந்து கிட்டத்தட்ட 25 நாடுகளில் அவர், ஆசிரியராகவும் விஞ்ஞான விரிவுரையாளருமாக இருந்திருக்கிறார், அதைவிட அவர்கள் பல நாடுகளைச் சுற்றிப் பார்வையிட்டிருக்கிறார்கள்...(சைனா, ஜப்பான் பக்கம் தான் போகவில்லை).

எங்கள் திருமணத்தின் மூலம் அவர் எனக்கு மாமா ஆனார். எப்பொழுதுமே அவர்கள் என்னை, ஒரு அடுத்த குடும்பத்துப் பிள்ளையாகவோ அல்லது மருமகளாகவோ நினைத்தது கிடையாது.

என்னை விட்டுவிட்டு மகனோடு ரகசியம் கதைக்கவேண்டும், எனக்கு சிலதை மறைக்க வேண்டும் என்றெல்லாம் நடந்ததே இல்லை. தம் மகனுக்கு வாங்கிக்கொடுப்பதைக் காட்டிலும் எனக்குத்தான் அதிகம் வாங்கித் தருவார்கள்.

நாம், அவர்களிடம் வருகிறோம் எனச் சொன்ன உடனேயே, எனக்குப் பிடிக்குமென மாமா போய், பக்கோடா, மிக்‌ஷர், இப்படியான உறைப்பான பண்டங்கள் வாங்கி வந்து போத்தலில் போட்டு மேசையில் வைத்திருப்பார். அதைவிட நாம் ஏதும் ஒரு பொருளை ஆசைப்பட்டுக் கேட்டுவிட்டால் போதும், எங்கு தேடியாவது அடுத்த நாள் வாங்கி வந்திடுவார்.

எமக்காக என்றில்லை, எம் உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ ஒரு பொருள் தேவை எனச் சொன்னால் போதும், சொன்ன நாங்களே மறந்தாலும் அவர் மறக்க மாட்டார், பணத்தை நினைக்கவே மாட்டார்.. தேடித் தந்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்.

எம் பிள்ளைகளுக்கு மட்டுமில்லை, எனது குடும்பத்தில் யாருக்கு பிறந்தநாள் வந்தாலும் பரிசும் வாழ்த்தும் கொடுக்காமல் விடமாட்டார்.... ஓய்வு பெற்ற காலத்திலிருந்து தினமும் காலையில் புறப்பட்டுவிடுவார், போய் அதிகமாக புத்தகங்களே வாங்குவார், அதைவிட குட்டிச் குட்டிச் சாமான்கள் வாங்கி வந்து எமக்குப் பார்ஷலில் அனுப்பிக்கொண்டேயிருப்பார்... வாரம் இரு பார்ஷலாவது எமக்கு வந்தவண்ணமே இருக்கும்.

கிச்சின் உபகரணத்திலிருந்து, அழகுப்பொருட்கள் வரை என்னிடம் இருப்பதில் பாதி அவர் அனுப்பியவையே. என்னிடம் இருப்பதை என் நண்பி பார்த்து ஆசைப்பட்டால், அதை நான் “மாமா நீங்கள் அனுப்பியதைப் பார்த்து என் நண்பி மிகவும் ஆசைப்பட்டார்” எனச் சொன்னால் போதும், அடுத்த பார்ஷலில் அதை அனுப்பி, நண்பிக்கு கொடுங்கள் என்பார்... இதுதான் மாமா.

அவர்கள் வீட்டுக்கு யார் வந்தாலும், சாப்பிட்டுவிட்டுப் போனால்தான் அவருக்கு திருப்தி, அத்தோடு தன்னிடம் “ஸ்ரொக்கில்” சேர்த்து வைத்திருக்கும் பொருட்களையும் பரிசாகக் கொடுத்தனுப்புவார். நாங்கள் எம் ஆன்ரி வீட்டுக்குப் போய் வந்தபின், “மாமா, இன்று ஆன்ரி ஒரு கடையில் மட்டின் ரோல் வாங்கித் தந்தா, அதன் சுவையோ சொல்லமுடியாது” என்று சொன்னால் போதும், உடனே எழுந்துபோய் தன் ரெலிபோன் புக்கை எடுத்து வந்து, ஆன்ரிக்குப் போன் பண்ணி, அக்கடை அட்ரஸ் கேட்டு, அடுத்தநாள் போய் எமக்கு வாங்கி வருவார்(எல்லாமே மனக்கண்ணில் நிற்குது).

ஏன், ஹைஷ் அண்ணனின், மருத்துவம் தலைப்பைப் பார்த்து நான் சொன்னேன், மாமா எனக்கு இன்ன இன்ன பொருட்கள் வேண்டும், அவை உடம்புக்கு நல்லதாம், முடிந்தால் அனுப்புங்கோ என்றேன், தேடித் தேடி அனுப்பினார்...... ஏனையோர் ஆச்சரியப்பட்டார்கள் , எமக்கே இப்படியெல்லாம் கடையில் இருப்பது தெரியாது, இவர் எப்படிக் கண்டுபிடித்து வாங்கினார் என. ஏன் எதுக்கு என்றுகூடக் கேட்கமாட்டார்.

அவர்களிலுள்ள நல்ல குணம், வெளிநாட்டிலேயே இருந்ததாலோ என்னவோ, கணவரும் நானும் எங்காவது போகிறோம் என்றால், தப்பித் தவறி மாமா கேட்டாலும் கேட்பார், ஆனால் எங்கே போகிறீங்கள் என மாமி கேட்கவே மாட்டா, எத்தனை மணிக்கடா வருவீங்கள் என்றுதான் கேட்பா, அதேபோல திரும்பி வீட்டினுள் நுழையும்போது ஆசையாக இருக்கும், மாமி ஓடிவந்து இருவரையும் கேட்பா.... என்ன ஊத்த? ரீ போடட்டோ? கொபியோ? ரோஸ்ட்டும் செய்யட்டோ என்று.

சில நேரம் நாம் ரீவி பார்த்துக்கொண்டிருக்கும்போது, என் கணவர் சொல்வார் “அம்மா எனக்கு கோப்பி, அதிராவுக்கு ரீ, அத்தோடு ரோஸ்ட்டும்(என் கணவருக்கு எப்பவுமே பிரெட் ரோஸ்ட் வேண்டும்) தாறீங்களோ” என, மாமி உடனேயே, ஓக்கேடா இதோ கொண்டு வருகிறேன் என்பா, இல்லை மாமி நீங்க இருங்கோ நான் செய்கிறேன் என்பேன்(உண்மையாகத்தான்), உடனே சொல்லுவா இல்லையடா நீங்க பாருங்கோ, நான் கொண்டு வருகிறேன் என்று..., நாம் சோபாவிலே இருக்க, மாமா பழங்களை வெட்டி ரேயிலே கொண்டு வந்து தருவார்.

அவர்கள் வீட்டுக்குப் போய் இருக்கும்போது, மாமா மாமியின் அறைக்குள் போய்... தேடுவேன், அழகான குட்டி குட்டிச் சாமான்கள், தட்டுகள், சுவாமிப்படங்கள், படப்பாட்டுக்கள்... விதம் விதமான சிறிய கைப் பைகள்... இப்படி நிறைய இருக்கும், எனக்குத் தேவையானதை நானே எடுத்து வருவேன். நாம் உரிமையோடு எடுத்தால் அவருக்கு இன்னும் சந்தோஷம் அதிகமாகும்.

எம் குழந்தைகளுக்கு நாம் உடுப்பு வாங்குவதேயில்லை எனலாம். விளையாட்டுப் பொருட்கள், படிக்கும் புத்தகம், கேம்ஸ்கள் எல்லாமே அனுப்பிக்கொண்டிருப்பார். உடுப்புக்கள் எப்பவுமே பல ஜோடிகள் புதிதாக
எம் வீட்டிலிருக்கும். ஒரு முறை நான் என் கணவரிடமும் சொன்னேன்... “மாமா அளவுக்கதிகமாக உடுப்புக்களை அனுப்புவதால், நான் ஆசைக்கு உடுப்பு வாங்குவதில்லை எம் பிள்ளைகளுக்கு” என்று(இப்போ நினைக்க மனவருத்தமாக இருக்கு). கடைசியாக சமீபத்தில் எம்மிடம் வந்தபோது எனக்காக வாங்கி வந்த வீட்டுக்குப் போடும் புஜாமா செட்டே... 5/6 ஜோடிகள் இன்னும் புதிதாக இருக்கு. அப்படித்தான் எண்ணிக்கை இல்லாமல் வாங்கித் தருவார்கள்.

எம் பிள்ளைகள், தமக்கு என்ன தேவையோ, உடனே அதனைப் போனிலே சொல்வார்கள், அக்கிழமையே பார்ஷலில் வந்துவிடும். மகன் சிலவேளை போன் பண்ணி ஒரு பொருளைச் சொல்லிவிட்டு, ஒரு மணித்தியாலத்துக்குள் மீண்டும் போன் பண்ணிக் கேட்பார் “அப்பப்பா அனுப்பிப் போட்டீங்களோ” என, இதோ இதோ போகிறேன், வாங்கி அங்கிருந்தே அனுப்புகிறேன் என்பார், எமக்குச் சிரிப்பாக இருக்கும்.

மாமாவுக்கு படம் எடுப்பதிலும் உடனே அதைப் பிரிண்ட் பண்ணி ஆல்பத்தில் போடுவதிலும் அலாதி பிரியம்.... கிட்டத்தட்ட பைத்தியம் என்றே சொல்லலாம். அவரது உழைப்பிலே குறிப்பிட்ட சதவிகிதம்... படம் எடுப்பதில் செலவுபண்ணியிருப்பார். தான், யார் வீட்டுக்குப் போனாலும் படம் எடுப்பார், தன் வீட்டுக்கு யார் வந்தாலும் எடுப்பார், உடனே அதை இரு கொப்பியாக பிரிண்ட் பண்ணி, இரு ஆல்பம் வாங்கி தமக்கொன்று அவர்களுக்கொன்றெனக் கொடுப்பார்.

நியூசிலாந்திலே, என் கணவர் யூனிவசிட்டி என்ரன்ஸ் பரீட்சைக்காகப் படித்துக்கொண்டிருந்தபோது, தனக்கு பாடம் சொல்லித் தராமல், அங்கு ஸ்கூல் ஹொஸ்டலில் தங்கியிருந்த தன் வகுப்பு மாணவர்களுக்கு, போய்ப் பாடம் சொல்லிக்கொடுப்பாராம், என் கணவர் சொன்னார் அந்நேரம் தனக்கு கோபம் கோபமாக வருமாம், ஆனால் இப்போ நினைக்கையில் “பிறர் பிள்ளையைத் தடவி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்” என நினைத்திருப்பாரோ என்னவோ.

எம்மோடு எங்காவது வெளியே போகும்போது, தோளில் ஒரு பாக் எடுப்பார்(அதில் கமெரா இருக்கும்), உடனே என் கணவர், என் காதில் சொல்லிச் சிரிப்பார் “பேப்பர் ரிப்போட்டர் வருகிறார் பாருங்கோ” என.

மாமாவிலும் மாமியிலும் ஒரு பழக்கம், தன் மகனுக்கு(என் கணவருக்கு) என்ன அட்வைஸ் சொன்னாலும், தம் அதிகாரத்தைத் திணிப்பதில்லை. தம் விருப்பத்தைச் சொல்லிச் சொல்வார்கள், அதிராவின் விருப்பத்துக்கேற்ப முடிவெடுங்கள் என்று. எமது மகன்கள் பிறந்தபோதெல்லாம், தம் விருப்பப்பெயர்களைப் பட்டியலிட்டுச் சொல்லிவிட்டு, என் கணவரிடம் சொன்னார்கள்... இவை எமக்குப் பிடித்த பெயர்கள், ஆனால் அதிராவுக்கு என்ன விருப்பமோ அப்பெயரையே வையுங்கோ என. நாமும் எமக்கு பிடித்த பெயரையும் வைத்து, அவர்கள் விருப்பத்தில் ஒரு பெயரையும் தெரிவு செய்து இரு பெயர் வைத்தோம்.

இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம், அதிகம் சொன்னால் படிப்பவர்களுக்கு அலுப்படிக்கும், நான் இது ஒரு டயறியாகவும் இருக்கட்டுமே என நினைத்தே எழுதுகிறேன்.

இப்படியான மாமா, சில வருடங்களாக இன்சுலின் எடுக்கும் அளவுக்கு ஆளானார், உணவுக்கட்டுப்பாடென்பதே அவருக்கு இல்லை, அதுதான் பெரிய பிரச்சனையே. என் கணவர் குழந்தையாக இருந்தபோது தொடங்கி, சனி ஞாயிறில் ஒரு நாள், ரெஸ்ட்ரோரண்ட் போய்த்தான் சாப்பிடுவார்களாம், அப்பழக்கம் இப்பவும் தொடர்ந்தது

இன்சுலின் ஆரம்பமானதும் என் கணவர் சொன்னார், அப்பா முதலில் வெளியுணவை நிறுத்துங்கோ என, (என் கணவருக்கே மருந்துகள் சொல்வார்...) அதன் பின் எமக்குச் சொல்லாமல் போய்விடுவார்கள், ஆனால் பயத்திலே போன் பண்ணும்போது மாமா சொல்லாமல் மறைப்பார் மகனுக்கு, மாமி சொல்லிப்போடுவா, அப்போ என் கணவர் கேட்பார், ஏனப்பா வெளியில் சாப்பிடப் போனனீங்கள் என்று, உடனே சொல்வார் “இல்லை இல்லை, அம்மா தான் ஆசைப்பட்டவ அதுதான் கூட்டிப்போனேன், நான் சூப்தான் குடித்தேன்” என்று.

பின்னர் அவருக்கு கிட்னி பிரச்சனையாகி, பல வருத்தங்கள் தலைகாட்டத் தொடங்கிவிட்டது, ஆனால் அவர் நன்றாகத் தான் இருந்தார், வெளியே போய் வருவதையும் நிறுத்தவில்லை. அன்றுகூட, இரவு கதைத்துக் கொண்டிருந்துவிட்டுப் போய்ப் படுத்தாராம், இரவு 2 மணிபோல் மாமி கண்விழித்தாவாம், இவர் கட்டில் விழிம்பிலே படுத்திருந்தாராம்.... மாமி தட்டியிருக்கிறா, விழப்போறீங்கள் தள்ளிப்படுங்கோ என, உடம்பு குளிர்ந்திருக்கு.... அவர் போய்விட்டார்.

ஆனாலும் மாமிக்கு இப்போ 66 வயதுதான் ஆகிறது, அவ கத்தி குழறி பெரிதாக ஆர்ப்பாட்டம் செய்யாமல், அமைதியாக அழுதா, நான் அழுதபோது எனக்கு ஆறுதல் சொன்னா “அதிரா அழாதையுங்கோடா,  மாமா சந்தோசமாக இருந்தவர், எம்மைச் சந்தோசமாக வைத்திருந்தவர், எமக்கு உலகம் சுற்றிக் காட்டியவர், அவர் சந்தோசமாகவே போய்விட்டார், சந்தோசமாகவே இருப்பார்” என எனக்கு ஆறுதல் சொன்னா,.....  அவவின் இந்த ஏற்றுக்கொள்ளலை நினைத்து நாம் சந்தோசப்பட்டோம்.

எனக்கு இப்பதிவைப் போடும்வரை, ஏதோ நான் மாமாவுக்கு குறை விடுகிறேன், என்பதுபோல இருந்தது, இப்போ கொஞ்சம் பாரம் குறைந்திருக்கு.


பின் குறிப்பு:


மண் குடிசை வாசல் என்றால், தென்றல்வர மறுத்திடுமோ.... உனக்காக ஒன்று, எனக்காக ஒன்று ஒருபோதும் இறைவன் கொடுத்ததில்லை....
==========================================================

56 comments :

  1. அதிரா,இழப்புகள் என்றும் வலிதருபவைதான். :(

    உங்க மாமாவின் நினைவுகளை அழகாகத்தொகுத்திருக்கீங்க.
    /மாமா சந்தோசமாக இருந்தவர், எம்மைச் சந்தோசமாக வைத்திருந்தவர், எமக்கு உலகம் சுற்றிக் காட்டியவர், அவர் சந்தோசமாகவே போய்விட்டார், சந்தோசமாகவே இருப்பார்”/ நானும் அப்படியே நினைக்கிறேன்.அவரது ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்!

    ReplyDelete
  2. கண் கலங்குகிறது அதிரா.. இன்னொரு அப்பா மாதிரி இருந்திருக்கிறார் உங்களுக்கு.. ம்ம்.. எங்க ஊரில் இப்படி இறப்பு வந்தால் நல்ல சாவு என்று மெச்சுவார்கள்.. எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது..

    ReplyDelete
  3. வெகு நாட்களுக்குப் பிறகு பாட்டைக் கேட்டேன்.. பகிர்வுக்கு நன்றி அதீஸ்..

    ReplyDelete
  4. அதீஸ் மாமாவைப்ப்ற்றிய நினவலைகளை அழகாக பகிர்ந்து நெகிழவைத்து விட்டீர்கள்.சொந்த அனுபவத்தை எழுதுவது இதுதான் முதல் முறை என்று என்று நினைக்கிறேன்.காலம் சென்ற உங்கள் மாமாவி ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்

    ReplyDelete
  5. அதிரா
    அவ கத்தி குழறி பெரிதாக ஆர்ப்பாட்டம் செய்யாமல், அமைதியாக அழுதா, நான் அழுதபோது எனக்கு ஆறுதல் சொன்னா “அதிரா அழாதையுங்கோடா, மாமா சந்தோசமாக இருந்தவர், எம்மைச் சந்தோசமாக வைத்திருந்தவர், எமக்கு உலகம் சுற்றிக் காட்டியவர், அவர் சந்தோசமாகவே போய்விட்டார், சந்தோசமாகவே இருப்பார்” என எனக்கு ஆறுதல் சொன்னா,..... அவவின் இந்த ஏற்றுக்கொள்ளலை நினைத்து நாம் சந்தோசப்பட்டோம்.
    மிகவும் மனதை தொட்ட பதிவு அதிரா,மாமிக்கு என் விசாரிப்புக்கள்.

    மாமா அருமையான மனிதர்,அவர் பற்றி எடுத்துரைத்த விதம் மிகவும் அழகு.

    ReplyDelete
  6. அதிரா பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி,கண்ணதாசனே நேரில் பாடியது போன்ற காட்சி அமைப்பும்,அர்த்தமுள்ள பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது என்ற பாடலை கேட்கும் சந்தர்ப்பம்,ஜெயலலிதா முத்துராமன் மேஜர் அனைவரையும் கண்டதும்,நல்லாயிருக்கு.

    ReplyDelete
  7. அதிரா உஙக்ள் மாமாவை பற்றி படிக்கும் போது மனம் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது, இப்படி பார்த்து பார்த்து உஙக்ளுக்கெல்லாம் செய்து இருக்கார்,
    இவ்வள்வு நாள் மனதில் அடைத்து வைத்து இருந்ததை எழுதி இருக்கீஙக், இப்ப மனசு உங்களுக்கு லேசாகி இருக்கும், மாமி ரொம்ப தெளிவானவர்.
    அத்துடன் சோபாவில் உட்காரவைத்து ஒருத்தருக்கு டீ, ஒருத்தருக்கு காபி, பேஷ் அருமையானவங்க.

    ( நானும் இனி வரும் மருமகள் கலை ரொம்ப ராணி போல வைத்திருக்கனும் என்று நினைத்து கொள்வேன், அதோடு இதில் உள்ள பகிர்வையும் மண்டையில் எற்றி கொண்டேன், ஒரு காலத்தில் அவர்கள் நீங்க உங்கள் மாமாவை பற்றி சொல்வது போல் இன்னும் நல்ல முறையில் கவனிக்கனும் , என்று பார்ப்போம் காலம் என்ன சொல்லும் என்று...

    ReplyDelete
  8. அந்த கண்ணதாசன் பாட்டு சூப்பர் , கேட்கும் போது அருமையாக இருக்கும்..

    ReplyDelete
  9. இதுபோல மாமா கிடைக்க நீங்கள் மிகவும் கொடுத்து வைத்து இருக்கனும்..

    ReplyDelete
  10. //( நானும் இனி வரும் மருமகள் கலை ரொம்ப ராணி போல வைத்திருக்கனும் என்று நினைத்து கொள்வேன், அதோடு இதில் உள்ள பகிர்வையும் மண்டையில் எற்றி கொண்டேன்// ஆஹா.. ஜலி இப்ப எனக்கு உங்களுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள பொண்ணு இல்லாம போச்சே!:-(

    ReplyDelete
  11. உண்மைதான் மஹி, அவரைப் பொறுத்தவரை, நன்கு அனுபவித்து வாழ்ந்தவர்... நல்ல படி போய்விட்டார்... ஆனால் இழப்பு இழப்புத்தான் இருப்போருக்கு.

    மிக்க நன்றி மஹி வரவுக்கு.

    ReplyDelete
  12. வாங்க சந்து, உண்மையிலேயே அவர் அப்பாமாதிரித்தான், என்ன கேட்டாலும் வாங்கித் தருவார். பத்து ரூபா பெறுமதியான பொருளுக்கு 20 ரூபா முத்திரை ஒட்டிப் பார்ஷல் அனுப்புவார். நானே சிலவேளை பெரிய மனிஷி மாதிரி அவருக்கு அட்வைஸ் பண்ணியிருக்கிறேன்:)).

    இன்று என்ன சமையல் எனக் கேட்பார், நான் விரதம் மாமா, ஊரில் எங்கள் பக்கத்துப் பிள்ளையார் கொடியேறிட்டார், எங்களுக்கும் ஒரு திருவிழா உண்டு என்பேன், எந்த அட்ரசுக்குப் பணம் அனுப்பப்போறீங்கள் நானும் அனுப்பிவைக்கிறேன் என்பார். கிழமையில் ஒரு நாள், எமது பெயரில் கோயிலில் அர்ச்சனை பண்ணி விபூதி, குங்குமம் மெயிலில் எமக்கு வரும்.

    யார் கோயில் பற்றிக் கதைத்தாலும் தன்னால் முடிந்தது பத்து ரூபாயெண்டாலும் கொடுத்திடுவார்.

    அந்தப் பாட்டு உண்மைதான் சில நாட்கள் முன்பு போட்டேன்... எங்கட கண்ண..தாசனெல்லோ பாடுறார்.

    மிக்க நன்றி சந்து வரவுக்கு.

    ReplyDelete
  13. கடைசி வரிகள் தாம் கண்கலங்க வைத்துவிட்டன அதிரா..எனது மாமனாரும் உங்கள் மாமவை போல தான்..அவரது ஆத்மாவிற்காக வேண்டிக் கொள்கிறேன் அதிரா

    ReplyDelete
  14. ஹா ஹா ஸாதிகா அக்கா முடிந்தா நாலாவது,,,,,,

    ReplyDelete
  15. மிகவும் நெகிழ்வான பதிவு! உங்களுக்கே உரித்தான பாணியில் உணர்வுகள் கோர்த்து எழுதி இருக்கிறீர்கள். படித்து முடித்ததும் ஏதோ நானும் அவருடன் இருந்தது போல் இருக்கிறது.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  16. //Jaleela Kamal said... 14
    ஹா ஹா ஸாதிகா அக்கா முடிந்தா நாலாவது,,,,,, // :)

    ReplyDelete
  17. என்ன சொல்றதுன்னே தெரியல

    :-)) :-((

    ReplyDelete
  18. வாங்க ஸாதிகா மிக்க நன்றி. நெடுநாள் நினைவு இப்போதான் நிறைவுசெய்தேன்.

    //சொந்த அனுபவத்தை எழுதுவது இதுதான் முதல் முறை என்று என்று நினைக்கிறேன்./// கர்ர்ர்ர்ர்ர்ர், விடிய விடிய ராமாயணமாம் விடிந்த பின் ராமனுக்கு சீதை என்ன முறை எனக் கேட்டால் “மனைவி” ஆஆஆஆம்....:).

    அப்பூடியெல்லோ இருக்கு இது... நான் அங்கு வாழ்க்கை எனும் ஓடம் தொடங்கி இங்கு உண்மைச் சம்பவம் எண்டெல்லாம் எவ்ளோ நேரம் செலவழித்து குப்புறக்கிடந்து எழுதியிருக்கிறேன்..... அதை விட்டுப்போட்டு...... :))).

    மிக்க நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  19. @@@Jaleela Kamal --//
    ஹா ஹா ஸாதிகா அக்கா முடிந்தா நாலாவது,,,,,, // :) //



    அது சரி அட்வான்ஸ் புக்கிங்கா..!! :-))))))))))

    ReplyDelete
  20. //விடிய விடிய ராமாயணமாம் விடிந்த பின் ராமனுக்கு சீதை என்ன முறை எனக் கேட்டால் “மனைவி” ஆஆஆஆம்....:).//

    ராமனுக்கு சீதை பெரியப்பா பொன்னுதானே வரும்..:-)))

    ReplyDelete
  21. ஆசியா வாங்கோ மிக்க நன்றி. உண்மைதான் இன்னும் நிறையவே சொல்லிக்கொண்டே போகலாம், நான் சுருக்கமாக முடித்திட்டேன்(இதுதான் சுருக்கமா என முறைக்கக்கூடாது).

    பாட்டை வரவேற்றமைக்கு மிக்க நன்றி. சின்ன வயதிலிருந்தே எனக்கு இப்பாடல் பிடிக்கும், படம் பார்த்ததில்லை, ஆனால் அன்று பாட்டைத் தேடியபோது, கண்ணதாசனே அதைப் பாடுவது கண்டு எனக்கு அப்படியே ஒரு சொல்லமுடியாத பூரிப்பு..... மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அந்நேரம்.

    மிக்க நன்றி ஆசியா.

    ReplyDelete
  22. ஆ... ஜெய்... அப்பூடியில்லை, ஜலீலாக்காவுக்கு ரொம்ப குட்டி மருமகள் தேவைப்படுதுபோல அப்பத்தான் கையுக்குள்ள போட்டு வைத்திருக்கலாம்.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்...

    //ராமனுக்கு சீதை பெரியப்பா பொன்னுதானே வரும்..:-)))// அடடா சந்தேக சங்கத் தலைவருக்கு சந்தேகம் ஆரம்பமாப்போச்சே... இதை ஆராவது தீர்த்து வையுங்கோ பிளீஸ்ஸ்... இல்லாட்டில் மீண்டும் சிஷ்யையைத் தேடிக் கடலுக்குள் போயிடப்போறார்.

    ReplyDelete
  23. அதீஸ், உங்கள் மாமா நல்ல வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். அவரின் இறப்பும் அப்படியே எந்தக் கஷ்டமும் படாமல் இறந்துவிட்டார். அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள். என் அப்பாவும் இப்படித் தான் ஆனால், நீங்கள் உங்கள் மாமாவை புரிந்து கொண்ட அளவிற்கு என் குடும்பத்தில் சிலர் புரிந்து கொள்ளவில்லை. அதற்கெல்லாம் பெரிய மனது வேண்டும் அல்லவா?
    ஏனோ இதைப் படிக்க கவலையா இருந்திச்சு. அதான் நேற்று கமன்ட்போடாமல் போய்ட்டேன்.

    ReplyDelete
  24. ஜலீலாக்கா வாங்கோ, உண்மைதான் எமக்கு கிடைத்த மாமா மாமி யில், எமக்கு திருப்தி ஏற்படாவிட்டாலும் பறவாயில்லை, நாம் நல்ல மாமா மாமியாக வாழ்ந்து காட்டலாம்தானே.

    பொண்ணு பார்க்கப் போன அன்றே, நான் உன்னை ராணிபோல வைத்திருப்பேன் எனச் சொல்லிடாதீங்க, அதெல்லாம் மனதில இருக்கட்டும், வெளியில சொன்னால் மருமகளுக்கு லெவல் வந்திடும்.

    எங்கள் ஒரு மாமியின் மகன் வெளிநாட்டிலே, அவருக்கு சொந்தத்திலேயே இருந்த பெண்ணைப் பேசினார்கள், எல்லாமே ஒன்றுக்குள் ஒன்றுதான் ஆனால் இந்த பெண் வீட்டுக்கு பண வசதி இல்லை, சொத்துக்கள் இருந்தது, அப்போ மாமி மறுத்திட்டா, என் மகனுக்கு வரும் பெண், என்ன இல்லாவிட்டாலும் கொஞ்சம் நகையோடயாவது வரவேண்டும் அப்போதான் மகனுக்கு மரியாதை என்றிட்டா...

    மகன் சொல்லிட்டார் அம்மா உங்க விருப்பம்தான் என் விருப்பம், யாராயினும் நீங்கள் சொன்னால் நான் தாலிகட்ட ரெடி அப்படி...., தாய் (என் மாமி) சொன்னா இப்படி என்னை நம்பும் மகனுக்கு, எதுவுமில்லாத ஒரு பெண்ணை நான் எப்படி எடுப்பதென, அப்பெண்ணின் தந்தை கொஞ்சம் கிட்னி பாதிப்பாகி சுகயீனமாக இருந்தார்,(அவருக்கு ஏதாவது நடப்பதுக்குள், ஒரு பெண்ணையாவது கரை சேர்த்திட வேண்டுமென உறவுகள் விரும்பினர்) இவர்தான் மூத்த பெண், கீழே 2,3 ஆக 5 தம்பி தங்கை, அப்போ உறவுகள் எல்லாம் சேர்ந்து மாமிக்கு வேப்பங்குழை வைத்தியம்தான் செய்து... ஓம்படப்(ஆம் சொல்ல) பண்ணியாச்சு.

    மாப்பிள்ளை இல்லாமலே எழுத்து(நிட்சயார்த்தம்) நிகழ்த்தி, பெண்ணைக் கூட்டிப்போய் மாமி வீட்டில் வைத்திருந்தார்கள், அங்கே மாமி டக்கென மாறிட்டா(வேப்பங்குழை வேலை செய்திருக்கு) தன் மருமகள் என, அவவை செயாரிலே இருத்தி எல்லாம் கொடுத்தா, உடுப்புக்கூடத் தோய்த்துக் கொடுத்தா, மருமகளுக்கு தலைக்கனம் ஏறிட்டுது, வீட்டிலே சகல வேலையும் பார்த்தவர், இங்கே ரீ கப் கூட கழுவுவதில்லை, எல்லோருக்கும் சொல்லத் தொடங்கிட்டா, நானா கேட்டேன், என்னை விரும்பித்தானே பெண் எடுத்தார்கள்... இப்படிப் பல கதை.... பொல் எடுத்து அடிக்கலாம்போல கோபம் வந்தது எமக்கு( எமக்கென்றால் அது நானுக்கும் என் வயதை ஒத்த நம் கூட்டத்துக்கும், இந்தப்பெண்ணும் என் வயதுதான்).

    இப்பவும் நன்றாக இருக்கிறார்கள், ஆனால் உள் ஒற்றுமை மாமி மருமகளுக்குள் இல்லை, இருந்தும் நம் மாமிமார் ரொம்ப நல்லவங்களாச்சே.. மருமகளை எப்போதுமேஏஏ விட்டுக்கொடுத்துப் பேசமாட்டா அடுத்தாட்களிடம்.

    ஜலீலாக்கா... பூனைக்கொரு காலம் வந்தால் ஆமைக்கொரு காலமாமே.... நியூஸில இருந்து சீனவெடி வரப்போகுது எனக்கு.

    ReplyDelete
  25. தளிகா வாங்கோ, முதன்முதலில் வந்திருக்கிறீங்க, நல்வரவு மிக்க நன்றி.

    உண்மைதான் உங்க மாமா பற்றியும் நீங்க அங்கு சொன்னது இப்பவும் எனக்கு நினைவிருக்கு.

    ReplyDelete
  26. Jaleela Kamal said... 14
    ஹா ஹா ஸாதிகா அக்கா முடிந்தா நாலாவது,,,,,,

    /// ஜலீலாக்கா.... வலையுலகில் முதன்முதலாக காமெடிக் குயினாக ஒரு பதிவு, அதுவும் ஒரு வரியில் ஆனால் படித்துபடித்து நினைத்து நினைத்து ஒரு மணிநேரம் சிரிக்குமளவுக்கு.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  27. ஸாதிகா said... 10
    //( ஆஹா.. ஜலி இப்ப எனக்கு உங்களுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள பொண்ணு இல்லாம போச்சே!:-( ////

    ஹா..ஹா..ஹா... ஸாதிகா அக்கா, இன்று உங்க ராசிப்பலனைச் செக் பண்ணாமல் பதில் எழுதிட்டீங்கபோல இருக்கே... பூஸ் எஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  28. ஹைஷ் அண்ணன் வாங்கோ... மீண்டும் உங்களை இப்படி அடிக்கடி காணும்போது மனதுக்கு மிக்க மகிழ்வாக இருக்கு. நேரம் கிடைக்கும்போது எம்மை எட்டிப்பார்க்காமல் இருந்திடாதீங்கோ.



    ///ஹைஷ்126 said... 16
    //Jaleela Kamal said... 14
    ஹா ஹா ஸாதிகா அக்கா முடிந்தா நாலாவது,,,,,, // :)
    ///

    ஆ... ஸ்மெலி... மன்னிக்கவும் ஸ்மைலி... அதே ஸ்மைலி.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஆனாலும் கிக்..கிக்..கிக்...:)))

    ReplyDelete
  29. ஜெய்லானி said... 17
    என்ன சொல்றதுன்னே தெரியல

    :-)) :-((
    /// உண்மைதான் ஜெய், ஆனால் இப்போ எவ்ளோ தேறிட்டோம்... மனம் ஆறியிருக்கு.

    ReplyDelete
  30. அதீஸ்! ரொம்ப நேரம் திரும்ப திரும்ப படித்தேன். மனசில எதோ ஒரு வலி போல இருந்தது. எனக்கு வலி என்றால் அதை மறைக்க/மறக்க முயல்வேன். அதுதான் படித்ததும் பதில் போடாம ஓடிட்டேன். என்ன அழகான வாழ்க்கை . சிலர் எல்லாம் இருப்பதாலே எல்லாம் அழகாக தெரியும்.

    நல்லவர்களோடு கூட இருக்கணும்.. நல்ல விசயங்களை பேசணும் தெரிஞ்சுக்கணும். நாலு பேருக்கு நல்லது செய்யணும்.. இதுக்கெல்லாம் கூட ஒரு கொடுப்பினை வேணும்.
    என்ன சொல்லன்னு தெரிய்ல ஆனா... காலம் நினைவுக்கு ஒரு பொக்கிஷம்.

    ReplyDelete
  31. அன்பு அதிரா குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களும் பிரார்த்தனைகளும். தங்கள் மாமனாரது ஆன்ம இளைப்பாற்றிக்காகவும் என் பிரார்த்தனைகள்.

    என்றும் அன்புடன்
    இமா

    ReplyDelete
  32. அன்பு அதிரா எப்படி ஆறுதல் சொல்வது எனத்தெரியவில்லை.படித்ததும் நெஞ்சம் கனத்துப்போய்விட்டது. என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறேன். உங்கள் மாமாவின் ஆத்மா சாந்தியடையப்பிரார்த்திக்கிறேன்.
    உங்க பாணியில் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  33. படித்து முடிச்சதுக்கப்புறம் மனசு கனமா ஆயிடிச்சு...!

    உங்க மாமி சொன்ன மாதிரி, அவர் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்திருக்கார்... உங்களை எல்லாரையும் சந்தோஷமா வைத்திருக்கிறார்...
    அவரது ஆன்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்...!

    ReplyDelete
  34. உங்களுடைய மாமாவின் இழப்பு ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது...இருந்தாலும் அவருடைய அன்பால் சந்தோசமாக இந்தநாள் வரை இருந்ததற்காக கடவுளுக்கு நன்றிகள்...ரொம்ப கொடுத்து வச்சவங்க நீங்க அதிரா..அருமையான பகிர்வு....

    ReplyDelete
  35. வான்ஸ் வாங்கோ, வருகைக்கு மிக்க நன்றி.

    நீங்கள் சொல்வதும் புரியுது. தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வரும்போது, அவர்கள் உங்கள் அப்பாவை நிட்சயம் நினைப்பார்கள், கவலைப்படாதீங்க.

    ReplyDelete
  36. இல்ஸ்ஸ் வாங்க, மிக்க நன்றி.

    உண்மைதான் நிறையப்பேர் சொன்னார்கள், கொஞ்சக்காலம் வாழ்ந்தாலும் வாழ்க்கை என்பது மீட்டிப் பார்க்கும்போது இனிமையாக இருக்கோணும் அதுதான் நிறைவான வாழ்க்கையாக இருக்குமென.

    எமக்கு இப்போ பாரம் குறைந்திருக்கு, ஆனால் இப்போ பதிவைப் போட்டு எல்லோரையும் குழப்பிட்டனோ எனவும் வேதனையாக இருக்கு.

    ReplyDelete
  37. வாங்க இமா, மிக்க நன்றி. இன்னும் உங்களுக்கு நெட் பிரச்சனை தீரவில்லை என நினைக்கிறேன்.

    ReplyDelete
  38. வாங்கோ அம்முலு மிக்க நன்றி. இப்போ எம் மனப் பாரம் எவ்வளவோ குறைந்துவிட்டது. என்ன செய்வது என்ன துயர் வந்தாலும் ... மீளத்தானே வேண்டும்....

    ReplyDelete
  39. வாங்க கவிக்கா, உண்மைதான் மிக்க நன்றி.
    என்ன இம்முறை பெயர் மாற்றி வந்திருக்கிறீங்க.

    ReplyDelete
  40. கீதாச்சல் வாங்கோ மிக்க நன்றி. நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, ஆனால் பதிவைப் போட்டு அனைத்தையும்(நினைவுகள்) புதுப்பித்து விட்டேன்.

    ReplyDelete
  41. அதீஸ் ! ஒன்னும் நீங்க குழப்பல ஓகே...

    அங்க தனியா ஒரு சம்பந்தம் நடந்திருக்கு போல.. இப்போ தான் படித்தேன்..
    ஜலீலாக்கா வச்சாலும் வச்சீங்க சரவெடி :))
    அதுக்கு அதீஸ் "இன்றைய ராசி பலன்" முடியல... ஏன் இப்படி எல்லாரும் வெடியோட திரியறிங்க.. கிக்..கிக்..கிக்...

    ReplyDelete
  42. இலா said... 41
    அதீஸ் ! ஒன்னும் நீங்க குழப்பல ஓகே.../// ஓக்கே.

    அங்க தனியா ஒரு சம்பந்தம் நடந்திருக்கு போல.. இப்போ தான் படித்தேன்.. /// ஹா..ஹா...ஹா... நீங்களும் வாறது...


    ஜலீலாக்கா வச்சாலும் வச்சீங்க சரவெடி :))
    அதுக்கு அதீஸ் "இன்றைய ராசி பலன்" முடியல... ஏன் இப்படி எல்லாரும் வெடியோட திரியறிங்க.. கிக்..கிக்..கிக்...
    //// இன்னும் ராசிபலன் முடியல்லயோ? :)))) பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  43. கடைசி பத்தியைப் படிக்கும்போது கண்கலங்கிவிட்டது அதிரா! நம்மைவிட்டுப் பிரிந்தவர்களின் கடைசிநேர நினைவுகளும் கூடவே! ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவர் மீண்டும் வரமாட்டார்.. :(

    உங்க மாமனார் பற்றி படிக்கும்போது என் தந்தை நினைவுதான் வருகிறது. வானதி சொன்ன கதைதான் இங்கும்:( ஆனா அவர்களின் மறைவுக்குப் பின் இப்போ நினைத்துப் பார்க்கும் நிலை:( (என் தாயாரையும்தான்) இப்போதாவது நினைக்கிறார்களே!

    நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்கதான் அதிரா! எங்க திருமணத்திற்கு பல வருடங்கள் முன்பே என் மாமனார் இறந்துவிட்டதால், (அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு) ஒவ்வொருவரிடமா அவர்களின் ஃபோட்டோவைக் கேட்டு அலைந்தேன், அதையாவது பார்ப்போமே என்று. இன்றுவரைப் பார்க்கவில்லை :( எல்லோரும் சொன்ன ஆறுதல் 'உங்க கணவரைப் பார்த்தால் அவங்களைப் பார்த்த மாதிரி இருக்கும்' என்று. ஆனால் அப்படி சொன்ன பிறகு பார்க்கும் ஆவல் இன்னும் கூடியதே தவிர குறையவில்லை :)

    உங்க மாமியை விசாரித்ததாக சொல்லுங்கள்.

    ReplyDelete
  44. அஸ்மா வாங்கோ மிக்க நன்றி. உண்மைதானே... வார்த்தையில் சொல்லிவிடுவது சுலபம், அனுபவிக்கும்போதுதான் வலியை உணர முடிகிறது.

    //வானதி சொன்ன கதைதான் இங்கும்:( ஆனா அவர்களின் மறைவுக்குப் பின் இப்போ நினைத்துப் பார்க்கும் நிலை:( (என் தாயாரையும்தான்) இப்போதாவது நினைக்கிறார்களே!
    // நிழலின் அருமை வெயிலில் நிட்சயம் தெரியும்... தெரியாமல் போகாது.

    உங்கள் மாமாவின் படம் கிடைக்க நானும் பிரார்த்திக்கிறேன், முயற்சி திருவினையாக்கும்... தொடர்ந்து முயலுங்க.

    மாமியிடம் சொல்கிறேன் மிக்க நன்றி.

    ReplyDelete
  45. அதிராக்கா....

    படித்து முடித்ததும் உண்மையில் கண்கள் கலங்கி விட்டன சிறிது நேரத்திர்கு. மிக மிக கொடுத்து வைத்த மாமி, நீங்கள் எல்லோருமே. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்படியே என் அப்பாவைப் பற்றி யாரோ எழுதியதை போலே இருந்தது. death is a phenomenon, where empathy can never be practiced, we can hardly sympathize, to our best.. !! :(

    ReplyDelete
  46. இதுபோல ஒருமாமா கிடைக்க நீங்க ரொம்ப கொடுத்து வைச்சவங்க. ரொம்ப லக்கி. அவர் இழப்பு வலி மிகுந்ததாகத்தானிருக்கும்.

    ReplyDelete
  47. எந்த அப்புறமா வருவீங்க ஜலீலாக்கா?:))) மீ வெயிட்டிங்.

    ReplyDelete
  48. அன்னு வாங்கோ மிக்க நன்றி. உண்மைதான், மாமா பற்றி சொல்லிக்கொண்டே போகலாம. நம் இருவருக்கும் கதைக்க எதுவுமே கிடைக்காவிட்டால், என் கணவரிடம் சின்ன வயதுக் கதைகளைச் சொல்லச் சொல்லுவேன்... அவர் ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே போவார்... அப்படிப் பொறுக்கியவைகளில் மாமா பற்றி நிறைய அறிந்து வைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  49. லக்‌ஷ்மி அக்கா வாங்கோ, மிக்க நன்றி. இழந்தவை யாவும் இழந்தவைதானே.

    ReplyDelete
  50. உங்களின் ஒவ்வொரு பதிவாய் நேரம் கிடைக்கும் போது படித்து வருகிறேன். இப்ப தான் இந்த பதிவை படித்தேன். மிகவும் நெகிழ்வாய் இருந்தது. வாழ்க்கையில் இதுமாதிரியான தருணங்கள் ரொம்ப ரசிக்கக் கூடியவை!! தங்களின் மாமாவைப் போல் வாழ்பவர்களை கண்டால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    ReplyDelete
  51. வாங்கோ... மிக்க நன்றி. உண்மைதான் இப்படிப்பட்டோர் எப்போதாவது கோபமாக கதைத்தால்கூட அது எனக்குப் பெரிசாகத் தெரிவதில்லை, தூசுபோல தட்டிவிட்டிடுவேன், நல்ல குணங்களே கண்ணுக்கு பெரிதாகத் தெரியும்.

    ReplyDelete
  52. சகோ அதிரா..இப்பொதான் முதல் முறையா உங்களின் தளத்திற்கு வருகிறேன்..என்னைக் கவர்ந்த சிறந்த உணர்ச்சிபூர்வமான பதிவு...

    எல்லோர்க்கும் இப்படி மனிதர்கள் அமைவதில்லை..சிலர் இப்படி அமைபவர்களையும் புரிந்துகொள்வதில்லை..ஆனால் காலம் கடந்து புரிவர்...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  53. வாங்க ரஜின்!!! முதன்முதலாக வந்திருக்கிறீங்க.. நல்வரவு.

    ///என்னைக் கவர்ந்த சிறந்த உணர்ச்சிபூர்வமான பதிவு...///
    மிக்க நன்றி. மனதில் இருந்ததை முடிந்தளவு எழுத்தாக வடித்திருக்கிறேன்.

    உண்மைதான் எல்லோருக்கும் இப்படிக் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் அதை அனுபவிக்கத் தெரிவதில்லை.. அனைத்துக்கும் கொடுப்பனவு வேண்டும்.

    வரவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  54. உண்மையில் உங்களது மாமனாரின் நல் குணம் தெரிந்தது... கணவர் குடும்பமும், அவரது அம்மா (மாமி) தங்கமான குணம் உள்ளவர்களாக அமைந்திருக்கிறார்கள்... இறைவனிடம் நன்றி சொல்லுங்கள் மியாவ்... நல்ல அருமையான குடும்பம்.

    ReplyDelete
  55. முடித்த காலட்திலிருந்து கடவுளுக்கு நன்றி சொல்லியிருக்கிறேன் மாயா. என் நண்பி எனக்குச் சொன்னா “குறை நினைச்சிடாதையுங்கோ அதிரா, நீங்கள் பிடித்த விரதமும், கடவுள் நம்பிக்கையும்தான் உங்களுக்கு நல்ல கணவரையும் நல்ல மாமா, மாமியையும் தந்திருக்குதென”.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.