நான் ரெடி, நீங்க ரெடியோ?
தலைப்பைப் பார்த்ததும் எல்லோரும் யோசிப்பீங்கள், நானும் ஏதோ சொல்ல வெளிக்கிடுகிறேன் என. அப்படியில்லை, இதுவரை காலமும், ஹீலிங் என்றால் என்ன, தியானம் என்றால் என்ன?, வர்ம வைத்தியம் என்றால் என்ன?, என எனக்கு “கடுகளவு” கூடத் தெரியாது.
முதன்முதலில் ஹைஷ் அண்ணன் “அறுசுவை” தளத்துக்கு வந்து, “மறைபொருள் ரகசியம்” எனத் தலைப்பிட்டபோது, சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்ப்பது போலதான் பார்த்தேன்... என்னோடு நிறையப்பேர் அப்படித்தான் பார்த்தார்கள்:).
அதன்பின்பு, ஒவ்வொரு பகுதியாக புதுப்புது, நல்ல விஷயங்கள், மருத்துவங்கள் என, பல பல கற்றுக்கொண்டோம். தியானம் செய்வதெல்லாம், விரும்பாத ஒன்றாக இருந்த எனக்கு, அனைத்திலும் நிறையவே நம்பிக்கை வந்தது. மூச்சுப்பயிற்சி செய்யக் கற்றுக்கொண்டேன். அதனால் நான் அடைந்த நன்மைகள் பல. இப்படி நிறையவே சொல்லலாம்.... , இத்தோடு நிறுத்துகிறேன். “மறைபொருள் ரகசியம்” பகுதிகளைக் காண விரும்புபவர்கள்... இங்கே வாங்கோ...
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
எனக்கு எப்பவுமே, சின்ன வயதிலிருந்தே, தத்துவங்கள், பொன்மொழிகள், அர்த்தமுள்ள வாக்கியங்கள் மிகவும் பிடிக்கும். அப்படியானவற்றைச் சேகரிப்பதிலேயே, என் பாதிப்பொழுதுகள் முன்பெல்லாம் கழிந்தது. இப்போது நேரம் போதாமல் இருப்பினும், கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்தி அவற்றைச் சேகரிப்பேன்.
அப்படித்தான்... மறை பொருள் ரகசியங்கள் சொல்கின்றபோது, ஹைஷ் அண்ணன், இடையிடையே அப்பப்ப தத்துவ வரிகளையும் அவர், இணைக்கத் தவறுவதில்லை. அதில் ஓடியோடிப்:) பொறுக்கி சேகரித்ததன் தொகுப்பையே இங்கு தருகிறேன்.
1)முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.
2)ஒருவரை வாதத்தில் வெல்வது வெற்றியல்ல, அவரின் மனதை வெல்வதே வெற்றியாகும்.
3)அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி.
4)அறிவை அறிந்தோர் அன்பின் அறமே ஞானம்.
5)நமக்கோ, பிறருக்கோ தற்காலத்திலும், பிற்காலத்திலும் உடலாலும், மனதாலும், சமூகத்தினாலும், ஊறு விளையாத எந்த ஒரு ஆசையும், நியாயமான ஒரு ஆசைதான்.
6)அறிவுக்கு அடிமையாவதே பக்தி,
அறிவை அறிவால் அறியப் பழகுதல் யோகம்.
7)மனத்தை அடக்க நினைத்தால் அலையும்,
மனத்தை அறிய நினைத்தால் அடங்கும்
8)எண்ணம், சொல், செயலால் எவருக்கும்
எப்போதும் நன்மையே விளைவிக்க நாட்டமாயிருங்கள்.
9)அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம்
மூன்று வகையிலும் அறிவு வறுமை அடைகிறது.
10)சிந்தனை, ஒழுக்கம், சீர்திருத்தம், சிக்கனம், சேவை
இவை ஐந்தும், செழிப்பான வாழ்வளிக்கும்
11)உறவிலே கண்ட உண்மை நிலையே, தெளிவு.. துறவு
12)பகைமை வைத்துக் கொண்டு ஒருவரை வாழ்த்த முடியாது,
வாழ்த்தும் போது பகைமை நிற்காது.
13)உண்மைதான் நம்மை மாற்றுமே தவிர,
உண்மையை நாம் ஒரு போதும் மாற்ற முடியாது.
14)எப்போதும் விழிப்போடும், சிந்தனையோடும்
ஆற்றும் செயல்களினால், முன் வினையின் தீமைகள் தடுக்கப்படும்.
15)அன்பு என்பது, எந்த ஒன்றையும் உடலாலோ மனதாலோ,
இணைத்துப்பிடித்துக் கொண்டு இருப்பது.
ஹைஷ் அண்ணன் பணம் செலவழித்துப் படித்தவற்றை, எமக்கு இலவசமாகச் சொல்லித் தந்தமைக்கு(அவர் எங்கே சொல்லித்தந்தார்:), நாங்கள் சண்டைப்பிடித்து, தேங்காய் உரிப்பதுபோலல்லவா கேட்டுக் கேட்குத் தெரிந்து கொண்டோம்.... சரி சரி இது எமக்குள் இருக்கட்டும்:)), பிரதியுபகாரமாக எதையும் செய்ய முடியவில்லை.... “மிக்கநன்றி” என இலகுவாகச் சொல்வதைத்தவிர.
சேகரித்த அனைத்தையும் ஒட்டுமொத்தமாக இங்கே போட முடியவில்லை, இன்னும் இருக்கு... அடுத்த பகுதியில் தொடரும்..ம்ம்ம்ம்ம்.
பின் இணைப்பு:
நான் எடுத்த படங்கள்..... உங்களால் முடியுமோ:)?..... இதுக்கெல்லாம் தைரியம் வேணுமெல்லோ... பிளேன் லாண்ட் பண்ணப்போகும்போது எடுத்தேன்.....
எங்கள் முற்றத்து பூமரம்... இப்போது பூத்திருப்பவர்......
##########################
பறவையின் சிறகுகள் விரிந்தால்தான்
வானத்தில் அது பறக்கும்...
##########################