ஒரு நிஜத்தை, கதைபோல வடித்திருக்கிறேன்.
சுப்பையாவுக்கும் காமாட்சிக்கும் திருமணமாகி அடுத்த மாதமே, காமாட்சி கர்ப்பமானார். அனைவரும் சந்தோச எல்லையில் அலைபுரண்ட நேரம் அடுத்த மாதமே சிசுக் கலைந்துவிட்டது.
ஆழ்ந்த சோகத்துக்கு ஆளானார்கள். அதை சந்தோசப்படுத்த மீண்டும் காமாட்சி தாய்மை எய்தினா. ஆனா அதுவும் அப்படியே 2,3 மாதங்களில் கலைந்துவிட்டது.
இது இப்படியே நிகழ்ந்தது.. ஒன்றல்ல இரண்டல்ல 6 தடவைகள் காமாட்சி இந்த அவஸ்தைக்கு ஆளானார். 7ம் தடவையாக தாய்மை அடைந்தபோது... அச்சிசு நல்லபடி வளர்ந்து, சரியான காலத்தில் பிறந்தது, ஆனால் கொடுமை என்னவெனில் பிறந்த உடனேயே அதுவும் கண்களை மூடிக்கொண்டது.
ஒரு குழந்தை ஆரம்பக் கருவிலேயே மறைவதைக் காட்டிலும், குழந்தையாகிப் பிறந்து மறையும்போது, ஒரு தாய் உடலாலும், மனதாலும் அனுபவிக்கும் வேதனையைச் சொல்லமுடியாதுதானே... அப்படி ஒரு வேதனைக்கு காமாட்சி ஆளானார்.
இக்கொடுமையைப் பார்க்க முடியாமல், யாருக்கும் சொல்லாமல், சுப்பையா, ஆஸ்பத்திரிக்குப் போய், டாக்டரோடு கதைத்து, அன்று பிறந்த ஒரு பெண்குழந்தையைத் தத்தாக எடுத்து வந்துவிட்டார் வீட்டுக்கு.
வீட்டிலே காமாட்சியைத் தவிர ஏனையோர் எதிர்ப்புக் காட்டினர். அதை எல்லாம் சமாளித்து, குழந்தைக்கு
“மீனா” எனப் பெயர்சூட்டி வளர்க்கத் தொடங்கினர்.
மீனா, வீட்டுக்கு வந்த ராசியோ என்னவோ... அடுத்தடுத்து 5 குழந்தைகளை, அழகாகப் பெற்றெடுத்தார் காமாட்சி. மீனா, தன் தம்பி தங்கைகளோடு மிகவும் அன்பாகப் பழகினார்... பெற்றோர் மீது அதிக பாசம் காட்டினார். ஓரளவு வயதில் மீனாவுக்கும், அவர் தத்தெடுத்த குழந்தை என்பது ஊரவர்களால் தெரிய வந்தது. ஆனால் தாய் தந்தையர் காட்டும் பாசத்தாலும் அரவணைப்பாலும், மீனாவுக்கு அதெல்லாம் பெரிய விசயமாகப் படவில்லை.
தம்பி தங்கையரும் மீனாவோ,டு அக்கா அக்கா என அதிக பாசம் காட்டினர். உண்மையின்படி சொல்லப்போனால், அக்குடும்பத்தில் அதிக பாசமும் அன்பும் இருந்தது, ஏனைய 5 பிள்ளைகளைவிட மீனாவிடம்தான் அதிகம்.
திருமண வயதை அடைந்ததும், மூத்த மகளான மீனாவுக்கு, மாப்பிள்ளை தேட நினைத்து, பிறத்தியிலே திருமணம் முடித்துக் கொடுத்தால், ஏதும் பிரச்சனை கொடுத்து, மீனாவுக்கு மனம் புண்படும்படி நடந்துவிடுவார்களோ எனும் பயத்தில், சொந்தத்திலேயே திருமணம் முடித்துக் கொடுத்தனர்.
மீனாவும் திருமணம் முடித்து அழகாக 5 குழந்தைகளைப் பெற்றெடுத்தா. மீனாவின் தம்பிமார் வெளிநாடு போனார்கள், குடும்பத்தோடு மீனாவையும் வெளிநாட்டுக்கு அழைத்தார்கள். வெளிநாட்டிலும் மீனா குடும்பத்துக்கு பக்கமாகவே பெற்றோரும் இருந்தனர். பெற்றோர் தம் குறைநிறைகளைச் சொல்லி மனம் ஆறுவது மீனாவிடம்தான்.
மீனாவின் தந்தை சுகயீனமுற்று, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு டாக்டர்களால் சொல்லப்பட்டது, இன்றிலிருந்து சில நாட்களுக்குள் அவர் போய்விடலாம்.... எப்பவும் மரணம் சம்பவிக்கலாம் என. எல்லாப் பிள்ளைகளும் போய்ப் பார்த்து வந்தனர்.
மீனாவுக்கு அன்று என்னவோ மனம் சமாதானம் அடையவில்லை, இன்று நான் அப்பாவோடுதான் இங்கு தங்கியிருக்கப்போகிறேன், நீங்கள் போய் வாருங்கள் என அனைவரையும் அனுப்பிவிட்டா.
இரவு எல்லோரும் போய்விட்டனர். தந்தை மீனாவோடு கதைத்துக் கொண்டுதானிருந்தார். சில மணியில்.... திடீரென சத்தம் சந்தடி இல்லாமல் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அப்போ கடசி நேரத்திலும் அவரோடு கூட இருந்தது , வளர்ப்பு மகளான மீனாதான். இதிலிருந்து என்ன தெரிகிறது, பெற்றால்தான் பிள்ளை என்றில்லை, குழந்தை குழந்தைதான், அதைத் தத்தெடுப்பதில் யாரும் தயங்கக்கூடாது.
குட்டி இணைப்பு:
“நல்லதே நடக்குமென நம்புங்கள் - ஆனால்
மிக மோசமான நிலைமையை எதிர்கொள்ளவும் தயாராக இருங்கள்”
“வாழ்க்கை நிலையில்லாதது, இன்ப துன்பங்கள் நிறைந்தது
எதையும் முழுமையாக அனுபவிக்க முடியாதது”..
=================^^^^^^^^^^^^^^=================