அம்மா!!!என்னை ஆசீர்வதித்துப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய நீ, ஏன் அழுதழுது அஞ்சல் அனுப்புகிறாய்?
பட்டம் பெறுவதற்காக, உன் பாதுகாப்பு வட்டத்துக்குள்ளிருந்து நான் வெளியே வந்துவிட்டது உண்மைதான், அதற்காக நீ அஞ்சாதே!!. புத்தகப் படிப்பைவிட உன் புத்திமதிகள் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றன.
அம்மா!! உன் கண்காணிப்பின் கீழ் இருந்தபோது, நான் கண்ணை மூடிக்கொண்டும் நடந்திருக்கிறேன், விழுந்தாலும் உன் மடியில்தான் விழுவேன் என்று எனக்கு நிட்சயமாகத் தெரிந்திருந்தது.
சின்னச் சின்ன ஷேஷ்டைகள் செய்து உன்னிடம் திட்டுவாங்குவது அப்போது என் பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் இப்போது நான், பொழுதைப்போக்கும் போக்கிரிப் பெண்ணாக இல்லைத்தாயே. ஏனெனில் நான் விழுந்தால் தாங்க இங்கே மடியில்லை இடிதான் உண்டு.
அதனால்தானம்மா, அக்கரைப் பச்சைகளிடமிருந்து அழைப்புக்கள் வந்தபோதெல்லாம் அவற்றை நான் கிழித்துப் போட்டேன். என்னைக் கைது செய்ய வந்தவர்களிடமெல்லாம், நான் ஏற்கனவே சிறையில் இருப்பதாகச் சொல்லி அனுப்பினேன். நீயே சொல்லம்மா, "காவல்காரன் இல்லையென்பதற்காக, நிலா பகலெல்லாம் உலாப் போகுமோ?".
எனக்கு நினைவிருக்கிறது, பல்கலைக்கழகத்தை முட்கள் நிறைந்த காடு என்றும், அதற்குள் நுழைந்தால் பழுதில்லாமல் திரும்புவது அபூர்வம் என்றும் நம் கிராமத்தவர்கள் பலவாறாகப் பேசியபோது, நீ என்ன சொன்னாய்? "என் மகள் அன்னம் போன்றவள், பாலையும் நீரையும் பிரித்துண்பதற்கு அவளுக்குத் தெரியும்" என அடித்துச் சொன்னாயே.
உனது அந்த அபார நம்பிக்கையை வாழவைப்பதற்காக, எனது அற்ப ஆசைகளை நான் சாகடித்துவிட்டேனம்மா.......
என்னைப் பொறுத்தவரை கலாசாலையும் வயலும் ஒன்றுதான், சேறும் உண்டு சோறும் உண்டு. சேற்றுத் தண்ணீரில் தவழ்ந்து விழையாடுவதற்குத் தவளைகள் வேண்டுமானால் ஆசைப்படலாம், நான் தாமரை அல்லவா?.
ராக்கிங்கின்போது கூட அழாதவள் நான், உன்னை அழ வைக்கவேண்டுமென்பதே என் ஆசை...... ஆமாம்!! வெற்றிகளோடு நான் வீடு திரும்புகையில், என்னைப் பார்த்து நீ, ஆனந்தக் கண்ணீர் வடிக்கவேண்டும். உன் கனவுகளின் மொத்த உருவமாய் நான் மாறிவருவேனம்மா கொஞ்சம் அவகாசம் கொடு, அவசரப்படாதே...
வளாகத்துக்குள்ளும் வம்புதும்புகள் நடக்கலாம்தான், ஆனால் நடவடிக்கைகளால் என் நாமம் நாறிப்போக விடமாட்டேன். சந்தனக் காட்டிலிருந்து வந்தவளுக்கு சாக்கடையைக் கண்டால் ஒதுங்கிக்கொள்ளத் தெரியும்.
கடைசியாகச் சொல்கிறேன், வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்திருக்கிறதே எனக் கண்ணீர் வடிக்காதே.....
"இந்தச் சூரியன் என்றைக்குமே கறுக்காது".
இப்படிக்கு உன்
அன்பு மகள்.