நல்வரவு_()_


Monday, 26 July 2010

லைபிரறி அண்ணன்!!!

இதுவும் ஒரு உண்மைச் சம்பவம்.






படிக்கிற காலத்தில் இரண்டு வருடங்கள்,  நானும் என் நண்பியும்(என் அதே பெஸ்ட் ஃபிரண்ட்தான்)  ஒரு பேகர்(பறங்கியர்) இன ஆன்ரி அங்கிளின் வீட்டில் இருந்தோம். அவர்களுக்கு எம் வயதை ஒத்த இரு ஆண் பிள்ளைகள், பெண் குழந்தைகள் இல்லை. அதனாலோ என்னவோ எம்மீது அதிக பாசம். நாங்களும், வீட்டுக்குப் போனபின், அம்மாவிடம் சொல்வதுபோல, வெளியில் நடந்த கதைகளையெல்லாம் ஆன்ரிக்குச் சொல்லுவோம், அவவும் எம்மோடு சேர்ந்து கேட்டு, ரசித்து புத்திமதியும் சொல்லுவா.

அங்கே ஒரு லைபிரறி இருந்தது, அது ஆகப் பெரியதும் இல்லை, சிறியதும் இல்லை. அதனால் அது எப்பவும் மிக அமைதியாக இருக்கும். எம் வீட்டுக்கும் கிட்ட. அதனால் நானும் நண்பியும் அங்குபோயிருந்துதான் அதிகம் படிப்போம். அங்கே பொறுப்பாக இருந்தவர் ஒரு அண்ணன். அந்நேரம் அவருக்கு கிட்டத்தட்ட 28, 30 வயதாவது இருக்கலாம். சரியான கறுப்பு, உயரமானவர். மிக மிக அமைதியானவர். எப்பவுமே எதுவுமே பேசமாட்டார். எம்மிருவருக்கும், இப்படியான அமைதியானவர்களைக் கண்டால், எம்மையறியாமலே அவர்களை எமக்குப் பிடித்துக்கொள்ளும். அதேபோல இவரையும் எமக்குப் பிடிக்கும். “லைபிரறி அண்ணன்” என பெயரும் சூட்டிவிட்டோம்.

முதல் நாள் மட்டுமே, எம்மிடம் பெயர் விபரம் கேட்டு, காட் பதிவு செய்தார், பின்பு வாயே திறப்பதில்லை. ஆனால் நாம் உள்ளே போய், மாடிப்படியேறி முடியும்வரை பார்ப்பார். அதுபோலவே மீண்டும் வெளியே வரும்வரை தவறாமல் பார்ப்பார், தப்பித்தவறிக்கூடச் சிரித்திட மாட்டார். அவரது முகத்தில் எப்பவுமே ஒரு சோகம் இருப்பதுபோல தெரியும். அவரின் இப்படியான போக்காலயே எமக்கும் அவரோடு கொஞ்சம் தனகவேண்டும்போல இருக்கும்:). ஆனால் நாங்களிருவரும் அவரைவிட அமைதி. எமக்கும் கண் மட்டுமேதான் வேலை செய்யும். நேரடியாகப் பார்க்கவும் மாட்டோம். அப்போ இதெல்லாம் எப்படித் தெரியும் எனக் கேட்கிறீங்களோ?. அம்மாவுக்குப் பேன் பார்த்தபடியே, பார்க்காமல் சொல்வேன், வேலியின் போகும் ஓணான் என்ன கலர் என்பதை:)). சரி இது போகட்டும்.

இக்கதைகளை வீட்டுக்கு வந்து ஆன்ரிக்குச் சொல்வோம்,  நல்லவராக இருக்கிறார் ஆன்ரி, ஆனால் எப்பவுமே சோகமாக இருக்கிறார் என்று. இதனால் எம்மோடு சேர்ந்து ஆன்ரியும் கவலைப்படுவா.

அந்த ஏரியாவில் இருந்த எல்லோருமே பேகர் இனத்தவர்கள்தான். ஆங்கிலேயர்போலதான் உடையணிவார்கள், அதிகம் ஆங்கிலம்தான் பேசுவார்கள். வயதானோர் மட்டுமே பறங்கிப்பாஷையும் கதைப்பார்கள். சாதாரண நிறமாகவும் இருப்பார்கள், நல்ல வெள்ளை, சிவப்பு உதட்டோடு வெள்ளைக்காரர் போலவும் இருப்பார்கள்.

எமது வீட்டுக்கு இரு வீடுகள் தள்ளி, அப்படித்தான் ஒரு குடும்பம் இருந்தார்கள். அங்கொரு அக்கா இருந்தா(ஃபுளோரா என்று பெயர்), அவவும் இப்படித்தான், வெள்ளைக்காரர்போல இருப்பா. 25,26 வயதிருக்கும், இடைக்கிடை எமது இந்த ஆன்ரி வீட்டுக்கும் வந்து, எம்மோடும் கதைத்துப்போவா.


ஒருநாள் நாங்கள் வீட்டுக்குப்போக, ஆன்ரி ஓடிவந்து சொன்னா, அதிரா நியூஸ் தெரியுமோ? ஃபுளோராவுக்குத் திருமணமாமே, மாப்பிள்ளை ஆரெனத் தெரியுமோ? உங்கள் லைபிரறி அண்ணன் தான், எனச் சொன்னா. எமக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை, எமக்குத் தெரிந்த அக்காவுக்கு அவரை நிட்சயித்துவிட்டமையால், ஏதோ எமக்கு சொந்தமாகிவிட்டதுபோல நினைத்து சந்தோசப்பட்டோம். ஃபுளோராவுக்கென்று அழகான வீடும் கொடுத்தார்கள்.


அப்பொழுதான் ஆன்ரி, அவரின் கதை சொன்னா. அந்த லைபிரறி அண்ணனும் பேகர் இனத்தவராம், பிறந்தவுடனேயே தாய் இறந்துவிட்டாவாம், பின்பு தந்தையும் காலமாகிவிட்டாராம், இவர் ஒரு பிள்ளைதானாம், அவரின் அங்கிள் ஒருவர்தான் இவரை வளர்த்தாராம். இப்போ பெரிய குடும்பத்தில் திருமணம் நிட்சயம் என்றதும் அவருக்கும் மகிழ்ச்சியாம் என.


பளீரென்ற பால் வெள்ளை நிற அக்காவுக்கும், கோப்பி நிற அண்ணனுக்கும் திருமணம் இனிதே முடிந்தது. கிறிஸ்தவர்கள், அதே முறைப்படியே திருமணமும் நடந்தது. ஆல்பம் பார்த்தோம் அழகாக இருந்தார்கள்.


அதன் பின்பு, நாமும் அங்கிருந்து வெளிக்கிட்டு விட்டோம். பின்பு ஒரு தடவை ஆன்ரியோடு கதத்தபோது சொன்னா, ஃபுளோரா கர்ப்பமாக இருக்கிறா என்று. பின்னர் சில காலங்களின் பின் போன் பண்ணியபோது, ஆன்ரி அழுவதுபோல கதைத்தா. என்ன ஆன்ரி எனக் கேட்டதற்கு. ஃபுளோராவுக்கு, நல்ல பால்போல ஆண்குழந்தை நோமல் டெலிவறியாகியது, நன்றாகத்தான் இருந்தா, அடுத்தநாள் திடீரென உடம்பெல்லாம் நீலமாகி, ஃபுளோரா இறந்துவிட்டார் என்று.

அதன்பின்பு நான் லைபிரறி அண்ணனின் நிலைமை பற்றி எதுவும் அறியவில்லை. விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது. அவருக்கு வாழ்க்கையில், நல்ல ஒரு குடும்பத்தைக் கொடுத்து, பத்து மாதத்திலேயே பறித்துக்கொண்டது. இப்படி எத்தனையோ கதைகள் கேள்விப்பட்டதுண்டு, இது எனக்கு தெரிந்தவர்கள் என்பதால், மியாப் பெட்டியில் இடங் கிடைத்துள்ளது.


பின் இணைப்பு:
இவரைக் காணவில்லை:)..., விரைவில் கண்டு பிடித்துக் கொடுப்போருக்கு ..................... வழங்கப்படும்.



இதைப் பொறுமையுடன் படித்த அனைவருக்கும் நன்னி! நன்னி!! நன்னி!!!.(இவர் எங்க வீட்டுப் பிள்ளை...).



===========================
உங்கள் உருவத்தை உங்களுக்கே காட்டிக்கொடுப்பது கண்ணாடி,
உங்கள் உள்ளத்தை மற்றவர்களுக்கு காட்டிக்கொடுப்பது உங்கள் பேச்சு
===========================

48 comments :

  1. ரொம்ப வருத்தமான் முடிவு. இது போன்ற முடிவுக்காகவே நான் கதை படிப்பதை தவிர்பது.

    அவரை அருட்பேராற்றலின் கருணையினால் வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன் என!

    ReplyDelete
  2. படிப்பாளி பூஸூம், குடுமி வைச்ச ஜீனோவும் சூப்பர்ர்ர்ர்ர்ர்:)

    ReplyDelete
  3. விதி கொடியது அதிரா.. இப்போது அவர் குழந்தையுடன் சுமாராகவாவது இருப்பார் என்ற நம்பிக்கையில் சும்மா கதைத்துவிட்டுப் போகிறேன்..

    உங்கட மங்கியார் அழகாக இருக்கிறார் அதீஸ்.. நானும் நினைத்தேன், ஜீனோவைக் கண்டு கன நாட்களாகிட்டதே என.. கண்டால், கேட்டதாகச் சொல்லவும்...

    ReplyDelete
  4. இன்னொன்றும்.. நன்றாக வர்ணித்துள்ளீர்கள்.. நேரில் பார்ப்பது போன்றுள்ளது..

    ReplyDelete
  5. அதீஸ் காலையிலேயே அழ வச்சுட்டீங்களே :-)

    படிப்பாளி பூஸ் அழகாக இருக்கிறார். சிண்டு போட்ட ஜீனோ ஏன் இப்படி முழிக்கறார்?
    மங்கியார் யார்? பூசாரின் ஃப்ரெண்டா?

    ReplyDelete
  6. இருங்கோ அதிர்ர்ர்ர்ர்ராக்கா,மொதல்ல ஒரு மேட்டர க்ளியர் பண்ணிக்குவம்.கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    கொசு மெய்ல் அனுப்பிய அடுத்த நாள் //இவரைக் காணவில்லை:)..., விரைவில் கண்டு பிடித்துக் கொடுப்போருக்கு ..................... வழங்கப்படும்.//எண்டு பப்ளிக் அனவுன்ஸ்மெண்ட் பண்ணினால் எப்பூஊஊஊஊடி? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    1./குடுமி வைச்ச ஜீனோவும் சூப்பர்ர்ர்ர்ர்ர்:)
    26 July 2010 01:37 /
    2./சிண்டு போட்ட ஜீனோ ஏன் இப்படி முழிக்கறார்?
    மங்கியார் யார்? பூசாரின் ஃப்ரெண்டா?
    26 July 2010 03:18 /
    3./ஜீனோவைக் கண்டு கன நாட்களாகிட்டதே என.. கண்டால், கேட்டதாகச் சொல்லவும்...
    26 July 2010 01:40 /

    1.ஹைஷ் அண்ணே, குடுமிய போட்டுவிட்டவர் உங்கட டோரா சிஸ்டேர்தான்! டாங்க்ஸ் பார் ட்தி காம்ப்ளிமெண்ட்!கர்ர்ர்!

    2.கவிசிவா சிஷ்டேர்,ஜீனோவிண்ட அழகான திராட்சைக்கண்கள், 'திரு-திரு'கண்கள் போலே தெரிந்தால் உங்கட கண்ணிலை மிஸ்டேக்காக்கும்.கிர்ர்ர்ர்!

    3.கண்டு,கேட்டு சொல்லிடுவம் எல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!

    ReplyDelete
  7. இருங்க படிச்சிட்டு வரேn..!!

    ReplyDelete
  8. சோககதையை போட்டு சோகமாக்கிட்டீங்களே... ..அதுவும் துனையை பிரிந்த சோகம் ......

    ReplyDelete
  9. //(இவர் எங்க வீட்டுப் பிள்ளை...).ன்னு படம் போட்டிருக்கீங்களே யார் இவரு எனக்கு தெரியாம ..அவ்வ்வ்வ்வ்வ்.

    ReplyDelete
  10. பேபி பூஸ் புக் படிக்கிர வேகத்தை பார்தால் சீக்கிரம் ஐ ஏ எஸ் பாசாகிடும் போலிருக்கு...!!!

    ReplyDelete
  11. திரும்பவும் ஒரு 'அண்ணன்' கதை. ஆனால் நல்ல கதை. பிள்ளை இப்ப பெரிய ஆளா இருக்க வேணும். ரெண்டு பேரும் சுகமாக இருப்பினம் அதிரா. யோசிக்காதைங்கோ.

    //அம்மாவுக்குப் பேன் பார்த்தபடியே, பார்க்காமல் சொல்வேன், வேலியின் போகும் ஓணான் என்ன கலர் என்பதை:))// உங்கட ஊரில கலர் கலரா ஓணான் இருந்துதோ! ஓ! அது கலர் மாறும் என்ன!

    பப்பீஸ்... நாளை ஒரு பார்ட்டி இருக்கு. டோராட்டச் சொல்லி எனக்கும் ஒரு ஹேர்ஸ்டைல் போட்டு விடச் சொல்லுங்கோ, ப்ளீஸ்.

    //இருங்க படிச்சிட்டு வரேn..!! // அட! இப்புடிக் கூட எழுதலாமோ! ;)

    ReplyDelete
  12. ஹைஷ் அண்ணன்,

    சும்மாவோ அக்காலத்திலயே சொல்லிவிட்டார்கள் “நீங்கள் யாருடன் சேர்ந்து சிரித்தீங்கள் என்பதை மறக்கலாம், ஆனால் யாருடன் அழுதீங்கள் என்பதை மறக்கவே முடியாது” என.

    இது வருத்தமான முடிவுதான், படிக்க கஸ்டம்தான், ஆனால் இப்படியான சம்பவங்கள் என்றைக்குமே மனதில் நீங்காமல் பதிந்துவிடுகிறதே. மிக்க நன்றி எல்லோரையும் ஆண்டவன் காப்பாற்றட்டும்.

    //படிப்பாளி பூஸூம், குடுமி வைச்ச ஜீனோவும் சூப்பர்ர்ர்ர்ர்ர்:)
    /// மேலோட்டமாக பார்க்க “பப்பாளி” ப்பூஸ் என தெரிந்தது, நல்ல வேளை கர்ர்ர்ர்ர்ர்:)) சொல்ல முன், மீண்டும் படித்து கண்டுபிடித்திட்டேன்...... மியாவும் நன்றி. நீங்கள் படம்...ம்ம்ம்ம் பாருங்கோ.

    ReplyDelete
  13. சந்து, உண்மைதான் விதி வலியதுதான்.

    மங்கியாருக்கு எங்கள் வீட்டில் டிமாண்ட்:) அதிகம். உள்ளங்கையிலே ஸ்ரிக் இருக்கு அவருக்கு, கழுத்திலே கொழுவி ஒட்டிவிட்டால்... உப்பு மூட்டைபோல முதுகிலே தொங்கிக்கொண்டு வருவார்:).

    ஜீனோவைக் காணவில்லை சந்து:))).... எங்கிருக்கிருக்கிறாரோ? என்ன பண்ணுறாரோ... கடவுள் காப்பாற்றட்டும்:))).

    மிக்க நன்றி சந்து.

    ReplyDelete
  14. ஹைஷ் அண்ணன் சொல்ல மறந்திட்டேன், ஜீனோவுக்கு வீட்டில செல்லம் அதிகம்:)), அதுதான் செல்லமாக:), டோரா கட்டிவிட்ட குடுமி..... வேறொன்றுமில்லை, ஜீனோ ஆண்பப்பிதான் நம்புங்கோ:)))).

    ReplyDelete
  15. அதீஸ், நல்லா இருக்கு. ஆனால், ஒரு சந்தேகம்...இந்த லைப்ரரி அண்ணாத்தை பேகர் இனத்தவர் என்கிறீங்க ஆனால் கறுப்பு என்கிறீங்க எப்படி?????? ( ஜெய்க்கு மட்டும் தான் கேள்விகள் கேட்க தெரியுமோ???? நாங்களும் கேட்போமில்லை )
    இறுதியில் சோகமாக முடிந்து விட்டது.

    நாங்கள் கொழும்பில் இருந்த போது எங்கள் அயலாரும் பேகர் இனத்தவர்கள் தான். மாலை நேரம் வெளியில் இருந்து டீ பார்ட்டி வைப்பார்கள். கேட்டில், கப், பிஸ்கட் என்று ஏதேதோ வைச்சிருப்பார்கள். தேநீரைக் கூட ரசித்துக் குடிப்பார்கள்.
    இன்னொரு பேகர் இனத்தவர்களின் வீடு பெரிய மலை மேல் இருப்பது போல உயரமான இடத்தில் இருந்தது. பார்க்கவே ஆசையாக இருக்கும். நானும் பியங்கா என்ற பேகர் இனப்பெண்ணும் நண்பிகள். நிறைய மலரும் நினைவுகள்.

    ReplyDelete
  16. சோக கதையை போட்டு அழவெச்சுட்டீங்களே அதீஸ்...

    ReplyDelete
  17. நிஜக்கதை படித்து மனம் கனத்துவிட்டது அதீஸ்.இப்போ அந்த லைப்ரரி அண்ணன் என்ன செய்றார்?இது போல் பலரது வாழ்விலும் திடுமென வரும் சோகங்கள் மனதை பிழிய வைக்கும்.

    ReplyDelete
  18. வாங்கோ கவி!!!, கதையின் முடிவு கவலையாக இருக்கே என்றுதான் மங்கிப்பிள்ளையின் படம் போட்டேன். ஜீனோவுக்கு குடும்பி கட்டியதும், அவருக்கு வெயிக்கம் வந்துட்டுதாம் அதுதான் அப்பூடி:)...

    மங்கியார், பூஸாருக்கு மட்டுமில்லை, எங்கட “ஜெய்” க்கும் ப்பிரெண்டுதான்ன்ன்ன்:). அங்க பார்த்திருப்பீங்களே.... வாள்... இல்லையில்லை வால்லை பிடிச்சூஊஊஊஉ இழுப்பதை:).

    மிக்க நன்றி கவி.

    ReplyDelete
  19. ஆ..... பிடியுங்கோ.... பிடியுங்கோ.... ஜீனோ வந்திடார்... ஜீனோ... மிக்க நன்றி.

    அது ஜீனோ... அங்கின... ஆரோ:) சொல்லிச்சினம் ஜீனோவுக்கு வழுக்கை:) என..,. அக்கா, நான் விட்டிடுவேனோ... அதுதான் குடும்பி கட்டுமளவுக்கு ஜீனோவுக்கு முடியிருக்கு என காட்டிப்புட்டேன்.....:))).

    ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்ச கதையா... இண்டைக்கு ஜீனோவுக்கு முடியில்ல என்றிட்டு.. நாளைக்கு அக்காவுக்கும் முடியில்லை எனச் சொல்லிட்டாலும்:):) எண்டுதான் "Prevention is better than cure".... kik..kik..kiiiiiii.

    ஜீனோ... கர் வாணாம்... அது உங்கட ஜிப்பாய் அண்ணேயும், கவி சிஸ்டரும், எல்ஸ்ஸ் தங்:)கட்சியும் தானே... விட்டுடுங்கோ...

    உஸ்.... அப்பா முடியல்லே.... ஒன்றுமில்லை.... நான் வெக்கையைச் சொன்னேன்:).

    ReplyDelete
  20. வாங்கோ ஜெய்..லானி,
    ///இருங்க படிச்சிட்டு வரேn..!! // ஆ... எவ்ளோ நேரம்தான் நானும் எழும்பாமலே கதிரையில இருப்பது:), கெதியாப் படியுங்கோ.

    இப்படியான கதைகளையும் இடையிடை எழுதினால்தான், உலகத்திலே எத்தனையோ துன்பங்கள் இருக்கென்பதை நாமும் இடையிடை நினைப்போமெல்லோ.

    மங்கிப்பிள்ளையைத் தெரியாதோ???:), அவர்தான் அங்கே வாலைப் பிடித்து இழுக்கிறார்.. கொஞ்சம் தனகல் குணம் இவருக்கு:), உங்கள் படம் பார்த்துத்தான் இவரின் நினைப்பு வந்துது.. அதுதான் சுடச் சுட சூட் பண்ணிப் போட்டேன்.

    உஸ்ஸ்ஸ்... ஜெய்... டோண்ட் டிஸ்ரேப்.., அது பேபி பூஸ் சீரியசாகப் படிக்கிறா... “NASA” வில வேலை எடுத்து ஸ்பேஸ் பார்க்கப் போகோணும்ம்ம்ம்.

    மியாவும் நன்றி ஜெய்..லானி.

    ReplyDelete
  21. வாங்கோ இமா, இப்போ எனக்கு அவர்களோடு தொடர்பு இல்லாமல் போய்விட்டது, சுனாமியின் பின்பு ஒரு தடவை கதைத்தேன், எங்கட ஆன்ரியின் தங்கையும் 2 மகன்மாரும் சுனாமியில் கடலோடு போய்விட்டதாக அறிந்தேன்...

    உங்கட ஊரில கலர் கலரா ஓணான் இருந்துதோ! ஓ! அது கலர் மாறும் என்ன!/// இல்லையே இமா, தென்னையில் இருக்கும் பச்சை ஓணான், அதைவிட, மஞ்சள், சாம்பல், பிரவுண் இவ்வளவும் பார்த்திருக்கிறேனே..... அதெல்லாம் பேபியாக இருந்தபோது:).

    போனதடவை பெட் ஷொப் போனபோது, ஓணான் விற்கிறார்கள், அதுக்கு உணவாக, உயிர்ப்பூச்சி, புழு எல்லாம் பொக்ஸ் களில் விற்கினம், ஓணான்பிள்ளை, பூச்சியைக் கொடுக்க கொடுக்க அழகாக, அவ்...அவ்... என வாங்கிச் சாப்பிடுவதை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தோம்.

    Puppy looks cute. ;) /// Puppy is my brother, that is why he is cute.... kik...kik...kik..
    (puppy kaakkaaa poongkoo).

    மியாவும் நன்றி இமா.

    ReplyDelete
  22. உம்..உஹும்..ம்ம்!!உம்..உஹும்..ம்ம்!!உம்..உஹும்..ம்ம்!!அதிராக்கா,ஜீனோக்கு சந்தோஷத்திலை ஆனந்தக்கண்ணீர்தான் வருகுது,வார்த்தை வருகுதில்லை.இம்பூட்டுப் பாசக்கார அக்காவா இருக்கீயளே!உங்களுக்கு ஜீனோ எப்பூடி டாங்ஸ் சொல்லூஊஊஊம்?? வாணாம்,விட்டிடுவோம்.

    /உஸ்.... அப்பா முடியல்லே.... ஒன்றுமில்லை.... நான் வெக்கையைச் சொன்னேன்:)./நோ வொரீஸ்யா..ஜீனோ உங்கள்க்காக ஸ்டார்பக்ஸ்-லே ஒரு ஹாட் லஸி:) ஓர்டர் பண்ணீருக்கு.சீக்ரமா வந்துரும்,வெயிட்டீஸ்!

    ஆன்ரீ எப்பவுமே உண்மைதான் பேசுவாங்கொ.ஹிஹிஹி!/டோராட்டச் சொல்லி எனக்கும் ஒரு ஹேர்ஸ்டைல் போட்டு விடச் சொல்லுங்கோ, ப்ளீஸ். /கர்ர்ர்.ர்..தீஸ் சர்வீஸஸ் ஆர் எஸ்பெஷலி பார் ஜீனோ "ஒன்லீ"..உங்களுக்கு வேணா புஜ்ஜி பியூட்டிபார்லரை சஜஸ்ட் பண்ணும்.

    அதிராக்கா,லைபிறரி அண்ணே கதையும் சோகமா இருக்கு. இதைப் படிக்கேக்க,பழைய நினைவு! ஜீனோவின்ட நண்பி ஒருவர் இப்பூடிதான் ஒரு ஆண்பிள்ளையைப் பெற்றுவிட்டு,உயிர் நீத்துவிட்டார்.:( அந்த நிகழ்வு நினைவுக்கு வந்த்துட்டது.:(:(:(

    ReplyDelete
  23. அடுத்த பார்ட்டிக்குக் கன்னத்தில டோராபுஜ்ஜியை வடிவா பெய்ன்ட் பண்ணி விடுங்கோ எண்டு யாரும் கேட்கட்டும், அப்ப இருக்கு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  24. //அடுத்த பார்ட்டிக்குக் கன்னத்தில டோராபுஜ்ஜியை வடிவா பெய்ன்ட் பண்ணி விடுங்கோ எண்டு யாரும் கேட்கட்டும், அப்ப இருக்கு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் //:))))

    ReplyDelete
  25. வாணி வாங்கோ.... இல்லை வாணி, பேகரில் இரு வகையினரும் உள்ளனர், கறுப்பும் இருக்கு வெள்ளையும் இருக்கு. எங்கள் வீட்டு ஆன்ரி கறுப்பு, மூத்த மகனும் கறுப்பு. அங்கிள் பால், இரண்டாவது மகனும் பால்:), இரண்டாவது தாயிடம் கேட்பார், மம்மி எங்கே காக்கா(கறுப்பென்பதால் அண்ணாவை அப்படிக் கேட்பார்) என்று:).

    நான் அடிக்கடி நினைப்பதுண்டு அவர்கள் எம்மவர்களை விட மிக மிக நல்லவர்கள். ஆன்ரியின் , அந்த சுனாமியில் இறந்த தங்கையின் மகளுக்கு சாமத்திய வீடு வைத்தார்கள், அவர்கள் எல்லோருமே ஃபீவ் தான் சமைப்பார்கள், எமக்காக மட்டும் அன்று சிக்கின் வாங்கி புறிம்பாக சமைத்துத் தந்தார்கள்.

    அதுபோல, இன்னொரு ஒன்றுவிட்ட தங்கையின் மகளுக்கு சாமத்திய வீடு, வீட்டுக்கு வந்து ஆன்ரிக்கு மட்டும் அழைப்புச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்(எம்மை மறந்து), போனபின் ஆன்ரி சொன்னா, அதிரா உங்களை அழைக்கவில்லை அவர்கள், அப்போ நாமும் போகப்போவதில்லை, நீங்களும் இப்போ எம் பிள்ளைகள்போலத்தானே இருக்கிறீங்கள், அப்போ உங்களுக்கும் சொல்லத்தானே வேண்டும் என. பின்பு என்ன நடந்ததோ தெரியாது, எமக்கும் மீண்டும் வந்து அழைத்தார்கள்.

    அங்கிள் வேலையால் வரும்போது, தம் பிள்ளைகளுக்கு ஏதும் வாங்கினால் அதே அளவு எமக்கும் வாங்கிவந்து தருவார். ஒளிப்பு மறைப்பென்பதே அவர்களிடம் கிடையாது.

    இரண்டாவது மகன் சரியான செல்லம், தாயோடு சண்டைப்பிடிப்பார், அக்கா ஆட்களைத்தான் நீங்கள் கவனிப்பீங்கள் என் சொல்லுக் கேட்க மாட்டீங்கள் என்று.

    தலையில் தோயும்போது ஆன்ரி வந்து, சீயாக்காய்/ சம்பூ தேய்த்துவிடுவா எனக்கு. அப்போ பெரீஈஈஈய முடி. இப்படி அவர்கள் கதைகள் சொல்லிக்கொண்டே போகலாம்.....

    மிக்க நன்றி வாணி.

    ReplyDelete
  26. மேனகா வாங்கோ மிக்க நன்றி. முடிவிலே மங்கிப்பிள்ளையைப் பார்த்து, சோகத்தை மறக்கவேண்டும் என்றே அதையும் போட்டேன்:).

    ReplyDelete
  27. ஸாதிகா அக்கா வாங்கோ. மியாவும் நன்றி.

    அவர்பற்றி எதுவும் தெரியாது ஸாதிகா அக்கா. உண்மைதான், நாட்டிலே சோகக் கதைகள்தானே அதிகமாக இருக்கு.

    ReplyDelete
  28. வாணாம்,விட்டிடுவோம்/// வாணாம்... ஓக்கை விட்டுடுவோம்.

    லஸில ஹொட்டோ ஜீனோ?:), புதுஷா இருக்கே... கெதியா அனுப்புங்கோ ட்ரை பண்ணிப்பார்த்திடலாம்..... நான் கண்டதெல்லாம் சுவை பார்க்கும் ரகம். எனக்கு வீட்டில சட்டமே போடப்பட்டிருக்கு, கண்ட நிண்ட மரங்களில் வரும் கனிகள் எல்லாம் புடுங்கிச் சாப்பிட்டுப் பார்க்கப்பூடாதென்று:)... இங்கு சில இடங்களில் மலைப்பகுதிகளில்.. என்னவென்றே தெரியாத பழங்கள் எல்லாம் பழுத்திருக்கும்:).

    என் கதையால் நிறையப் பேருக்கு மறந்திருந்த கதையெல்லாம் நினைவுக்கு வந்திருக்கும்:).. மியாவும் நன்றி ஜீனோ.

    ReplyDelete
  29. இமா..இமா.. ஜீனோவைப் பார்த்து உப்பூடிக் கர்ர்ர்ர் சொல்லப்பூடாது.. பாவம் ஜீனோ அவர் என்ன பண்ணுவார்:).

    நீங்கள் வேணுமெண்டால், இமயமலை உச்சியிலிருக்கும் குறிஞ்சாப் பற்றையின் நடுவிலுள்ள ஒரு பூவைப் பறிச்சுத் தரச் சொல்லுங்கோ.... ஜீனோ தவண்டு தவண்டெண்டாலும் போய்க் கொண்டுவந்து தருவார்:). பொய்யெண்டால் ஒரு தடவை கேட்டுத்தான் பாருங்கோவன்:)).


    ஆனால் இது புஜ்ஜி சம்பந்தப்பட்டதெல்லோ:), ஏற்கனவே புஜ்ஜி ஓடர் போட்டிட்டாவாம்... பெண் வண்டுக்குப் பின்னால கூடப் போகப்பூடாதெண்டு:), அப்போ இப்பூடியான மற்றரெல்லாம் எப்பூடி ஜீனோவால டீல் பண்ண முடியும்?:))). இதுக்குத்தான் சொல்றது, எப்பவும் குப்புறக்கிடந்து கிட்னியால யோசிக்க வேணும் பூஸாரைப்போல..... ஆ..... முறைக்கப்பூடாது நான் ஒரு அப்பா.....ஆஆஆஆஆவி:))).

    ...................................

    ஆரோ கீழ அழுகினம்:)),ஒருவேளை டிஷ்யூ வேணுமோ தெரியேல்லையே:))).

    ReplyDelete
  30. என்ன இப்படி ஒரு சோகமான கதை. எனக்கு சோகமான நினைவுகள் பிடிப்பதில்லை... எங்கிருந்தாலும் உங்கட லைப்ரரி அண்ணணும் அவர் குடும்பமும் நல்லா இருக்கட்டும்...

    படிப்பாளி பூஸ் வெறி கியூட்.. நானும் உங்களுக்காக ஒரு பூஸ் பிடிச்சிட்டு வந்திருக்கேன்... அனுப்பி வைக்கிறேன் பாருங்க..

    ReplyDelete
  31. வாங்கோ இலா, வந்திட்டீங்கள்..நல்லவேளை ரொனாடோ.... ஏதும் வரேல்லை:).

    பூஸாரைக் கெதியா அனுப்புங்கோ இலா, பூஸுக்காக பூஸ் வெயிட்டிங்:).

    மிக்க நன்றி இலா.

    ReplyDelete
  32. மனதைத் தொடும் கதை அதிரா! உங்கள் லைப்ரரி அண்ணணும்,குழந்தையும் நலமாக இருப்பார்கள் என்றே நம்புவோம்.

    என்னது? பூஸார் NASA-ல ஸைன்டிஸ்ட் ஆகப்போறவரோ? ஆல் த பெஸ்ட்! பெரீஈஈய்ய்ய புக்காதான் படிக்கிறார்.ரொம் படித்து கழுத்து சுளுக்கிக்கப்போகுது..சந்திரிக்கா தைலம் ரெடியா வைச்சிருக்கீங்கள்ல? :):)

    எங்க வீட்டில் இதேபோல இருந்த ஒரு மங்கிபிள்ளையை லைட்டில் கொழுவி(கரெக்டுதானே?) தொங்கப்பொட்டு,கருகிப்போய்விட்டார்.இவர் நன்றாக வணக்கம் செய்கிறார்.

    ReplyDelete
  33. //மங்கியார், பூஸாருக்கு மட்டுமில்லை, எங்கட “ஜெய்” க்கும் ப்பிரெண்டுதான்ன்ன்ன்:). அங்க பார்த்திருப்பீங்களே.... வாள்... இல்லையில்லை வால்லை பிடிச்சூஊஊஊஉ இழுப்பதை:).//

    //உங்கள் படம் பார்த்துத்தான் இவரின் நினைப்பு வந்துது.. அதுதான் சுடச் சுட சூட் பண்ணிப் போட்டேன்.//

    அப்ப எனக்கு வரும் ஆப்பு எல்லாம் எனக்கு நானே வச்சுக்கிறதா...? அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  34. வாங்கோ மகி.
    ஆல் த பெஸ்ட்! பெரீஈஈய்ய்ய புக்காதான் படிக்கிறார்/// தேங்கியூஊஊஊஊ. பெரீய பெரீய புக் படிச்சால்தானாம் ஸ்பேசுக்குக் கூட்டிப்போவினமாம்:).

    ஆ.... எங்கட சந்திரிக்காத் தைலம்... அங்கவரை பேமஸ்ஸோ??:).

    சே...சே.... வேணுமென்றே... மங்கிப்பிள்ளையை இப்பூடிப் பண்ணிட்டீங்களே.... நல்லாஆஆஆஆஆ இருங்கோ..:))).

    மிக்க நன்றி மகி.

    ReplyDelete
  35. அப்ப எனக்கு வரும் ஆப்பு எல்லாம் எனக்கு நானே வச்சுக்கிறதா...? அவ்வ்வ்வ்வ்வ் /// இதுதான் பொல்லுக்கொடுத்து..... சே...சே... ஒண்ணுமில்லே...

    ஜெய்..லானி, என்ன இப்பூடிக் கேட்டிட்டீங்க?, நாங்க உங்களுக்கு ஆப்பு வைப்போமா???, இதைக் கேட்கவே ரத்தக் கண்ணீரா வருகுதெனக்கு....

    இருப்பினும் உங்களுக்கு ஆப்பெல்லாம் எந்த மூலைக்கு..... நீங்கதான் பெரீய தலைவராச்சே:), சந்தேக சங்கத் தலீஈஈவர்:)))).

    உஸ் அப்பா முடியல.... இண்டைக்கு மரம் வேண்டாம் ஆபத்து, கட்டிலுக்குக்கீழதான் பாதுகாப்பூஊஊஊஊ:)).

    ReplyDelete
  36. // அடுத்த பார்ட்டிக்குக் கன்னத்தில டோராபுஜ்ஜியை வடிவா பெய்ன்ட் பண்ணி விடுங்கோ எண்டு யாரும் கேட்கட்டும், அப்ப இருக்கு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    //ஆஆஆஆஆஆ?? யு ரூ ஆன்ரீ?

    நீங்கோ செய்வது சோஷியல் சர்வீஸ். வருபவர் முகத்திலை ப்ரஷ் வச்சி கீறுவது..ஆனா பாருங்கோ,திஸ் ஹேர்ஸ்டைலிங் இஸ் எ பர்ஸனலைஸ்ட் சர்வீஸ்,யு நோ? இத்தல்லாம் அல்லாருக்கும் பண்ண முடியாதாம்.தீஸ் வர்ட்ஸ் ஆர் நாட் கிவன் பை ஜீனோ,பட் பை புஜ்ஜி. இப்பொ புர்யுதா உங்கள்க்கு?

    புஜ்ஜிக்கு தெரிஞ்ச ஹேர்ஸ்டைலிஸ்ட் நியூஸி.லே இருக்காராம். பேர் கூடோ, க்-லே ஆரம்பித்து ஸ்-லே முடியுமாம். நடுவிலே ரி என்று ஒரு எழுத்தைச் சேர்த்தால் அவர்பெயராம். புஜ்ஜி ரிக்வஸ்ட் பண்ணா,அவர் ஒத்துப்பாராம் உங்கள்க்கு ஹேர்டூ செய்ய. இஸ் இட் ஓக்கை? டீல்?

    அதிர்ராக்கா,வாட் யூ ஸே?

    ReplyDelete
  37. என்னா அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிப்பதில டாக்டர் வாங்கி இருக்கேன் தெரியுமா...க்கி..க்கி..

    ReplyDelete
  38. அதிர்ராக்கா,வாட் யூ ஸே? /// சே... சே... நான் ஒன்றுமே சொல்லவில்லையே:).... எப்பவோ தொடக்கம் வாயில பிளாஸ்டரோடதானே இருக்கிறேன்... அது சரி மேலே என்னவோ கிந்தியில:)) விளாசியிருக்கிறீங்க அக்காவுக்கு எதுவும் புய்யல்லே:), இருந்தாலும், இப்ப எதுக்கு சும்மா இருக்கிற க்ரிஸ் அங்கிளை இழுக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

    ReplyDelete
  39. என்னா அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிப்பதில டாக்டர் வாங்கி இருக்கேன் தெரியுமா...க்கி..க்கி../// கிக்..கிக்...கீஈஈஈ.... எவ்வளவு அடியையும் தாங்கிக்கொள்வதாலதானே ஜெய்..லானி, எல்லோரோடயும், உங்களால நண்பராக இருக்க முடியுது.

    அதுசரி உந்தப் பட்டங்களையெல்லாம் எங்கே பதுக்கி வைக்கிறீங்க?:).

    ReplyDelete
  40. //எவ்வளவு அடியையும் தாங்கிக்கொள்வதாலதானே ஜெய்..லானி, எல்லோரோடயும், உங்களால நண்பராக இருக்க முடியுது.//

    ஆமா சமாதானமா போக அரைநாள் வேனும் . சண்டைப் போட அரை நிமிஷம் போதும்.எனக்கு அரை நாள் தான் பிடிச்சி இருக்கு

    //அதுசரி உந்தப் பட்டங்களையெல்லாம் எங்கே பதுக்கி வைக்கிறீங்க?:). //


    ஹை ..இப்பிடி கேட்டா சொல்லிடுவேனா நான்..மாட்டேனே..!!! அதிலும் 3 அரியர்ஸ் வச்சி வாங்கியது .ஹி..ஹி..

    ReplyDelete
  41. ஆமா சமாதானமா போக அரைநாள் வேனும் . சண்டைப் போட அரை நிமிஷம் போதும்.எனக்கு அரை நாள் தான் பிடிச்சி இருக்கு
    ///// இப்படியே தொடர்ந்திருக்க வாழ்த்துக்கள்.

    //அதிலும் 3 அரியர்ஸ் வச்சி வாங்கியது .ஹி..ஹி.. /// இது வேறயோ??:)))

    ReplyDelete
  42. நீங்கள் சொன்னது போல் என் மதினி கதை போல்தான் இருக்கிறது. அந்த காலத்தில் பிரசவம் செத்து பிழைப்பது என்பார்கள், மறுஜென்பம் என்பார்கள். லைப்ரி அண்ணன் மறுமணம் புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை. தாயை பிரிந்த குழந்தை நலமோடு வாழ வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா, லிங் பார்த்ததும் வந்திட்டீங்கள். பின்பு என்னாச்சு எனத் தெரியவில்லை.. உண்மைதான் ஏதோ நச்சு உடம்பில் கலந்து விட்டதாம் எனச் சொன்னார்கள் அப்போ.

      மிக்க நன்றி கோமதி அக்கா... துன்பக் கதைகள் பல கேட்டுக் கேட்டு மனம் மரத்து விட்டது:(.

      Delete
  43. ரொம்பத் துயரமான முடிவுதான். சிலருக்கு வாழ்க்கை இப்படி வெறுமையைக் கொடுத்துவிடுகிறது. அந்த லைப்ரரி அண்ணன் குழந்தையை எப்படி வளர்த்தாரோ... இல்லை வளர்ப்பதற்காக இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தாரோ என்று யோசிக்கிறேன்.

    இங்கு பின்னூட்டம் போட்ட பலரும் இப்போது இணையத்தில் இல்லை போலிருக்கிறதே.

    பறங்கியர் பாஷை - அது ஆங்கிலம் இல்லையா? ஏனென்றால் ஆங்கிலம் என்று குறிப்பிட்டும் எழுதியிருக்கிறீர்கள். அவங்க உங்களோடு தமிழ்ல பேசினாங்களா?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      பதில் தர கொஞ்சம் லேட்டாகிட்டுது மன்னிக்கவும். பின்பு லைபிரரி அண்ணன் பற்றி தெரியாது, ஆனா அந்த அக்காவின் அம்மா அப்பா சகோஒதரங்கள் இருந்தார்கள்.. அவர்கள் இவரையும் குழந்தையையும் பார்த்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

      //இங்கு பின்னூட்டம் போட்ட பலரும் இப்போது இணையத்தில் இல்லை போலிருக்கிறதே.//

      உண்மைதான் சிலர் காணாமலே போய் விட்டார்கள்:(.. பலர் வதனப் புத்தகத்தோடு ஒதுங்கி விட்டினம்.

      இலங்கையில் பறங்கி இன மக்கள்.. எல்லோரும் கிரிஸ்தவர்கள், ஆனா பெரும்பாலும் பிள்ளைகளை சிங்கள ஸ்கூலில்தான் படிப்பித்தார்கள். எல்லாப் பாஷையும் பேசுவார்கள்.. அவர்களுக்கென்று பறங்கிப் பாஷையும் உண்டு..

      Delete
  44. அன்'ட்ரன் பாலசிங்கம் அவர்களது மனைவி, தமிழர்களோடு ஒன்றிப் பழகினாங்க, அவங்க தமிழ்ல பேசுவார்கள் என்று படித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இருக்கும்... நாம் ஒரு மொழியினரோடு நெருங்கிப் பழகினால் அவர்கள் மொழி பழகுவது ஈசிதானே.

      உங்களுக்கு தெரியுமோ.. இங்கும் ஸ்கொட்டிஸ் க்கு என ஒரு மொழி இருக்கு. ஸ்கூல்கூட இருக்கு.. ஹேலிக்[Gaelic] எனச் சொல்வார்கள்.. இப்போதையவர்களுக்கு இம்மொழி தெரியாது, ஆனா கொஞ்சம் வயதானோர் கதைப்பார்கள்.

      இங்கு போர்ட்டுகளில் கூட எங்கு பார்த்தாலும் ஆங்கிலத்திலும்.. ஹேலிக் இலும் தான் எழுதப்பட்டிருக்கும்.

      மிக்க நன்றி நெ.த.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.