நல்வரவு_()_


Thursday 9 March 2017

இதுக்கு என்ன சொல்வது???...


யாரைக் குறை சொல்வது? அடுத்தவரைக் குறை சொல்வது என்பது சுலபம், ஆனா   “தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் மட்டுமே புரியும்”.. என்பதுபோல யாரையும்குறை கூறுவதை நிறுத்திவிட்டு,
நாம் ஒவ்வொருவரும் இந்த விசயத்தில் விழிப்புணர்வை அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள்தான் அனைவருக்கும் நல்ல குணங்களைக் கொடுத்து, கொடிய எண்ணம் எழவிடாமல் தடுக்கோணும்.

உணவில், உடுப்பில், அலங்காரத்தில் விழிப்புணர்வு குறைவாக இருந்தால்கூட கெடுதல் இல்லை, ஆனால் இதில் குழந்தைகள், பெண்குழந்தைகள் வைத்திருப்போர் மட்டும் இல்லை, நாம் அனைவருமே, அனைத்துக் குழந்தைகளையும் நம் குழந்தைகளாக எண்ண வேண்டும்.

 “நிலவுக்குப் பயந்து பரதேசம் போக முடியுமோ”?, பிரச்சனை எங்கும் வரலாம், யார் ரூபத்திலும் வரலாம்.

அதுக்காக நம் பயத்தை, பிள்ளைகள்மேல் திணித்து, அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கவும்கூடாது. அவர்கள் விரும்பும் இடங்களுக்குப் போய் வர , சுகந்திரமாக சுற்ற விடத்தான் வேண்டும், நாம் தானே இந்த உலகுக்கு அவர்களை கொண்டு வந்தோம், அப்போ அவர்களுக்காக நாம் கஸ்டப்படுவதில் ஒன்றும் தப்பில்லை, நம்முடைய உடல், மனச் சோர்வுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, அவர்கள் விருப்பத்துக்கு கூட்டிப் போய்க், கூட்டி வரத்தான் வேண்டும், தடுக்கவும் கூடாது.. தனியே அனுப்பவும் கூடாது எனத்தான் நாம் நினைக்கிறோம்.[வாழ்க்கை முழுவதுமா இப்படி பண்ணப்போகிறோம்.. ஒரு குறிப்பிட்ட வயதுவரை தானே.. அதுவரை கஸ்டப்படுவோமே..].


இது ஏற்கனவே எல்லோரும் கதைத்துப் பேசிவிட்ட விசயம்தான் ஆனாலும் இவ்விசயத்தில் நாம் ஓய்ந்து போய்விடக்கூடாது, ஏனெனில் நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமாகுதே தவிர குறைவதாக இல்லை. இந்த 08/03/17 வீடியோ(சொல்வதெல்லாம் உண்மை) முழுவதும் எனக்கு இங்கு கிடைக்கவில்லை ஆனா நான் முழுவதும் பார்த்தேன், இப்போ கிடைக்குதில்லை, தேடிப் பாருங்கோ, விரைவில் யூ ரியூப்பில் வரும், வீடியோவை முழுவதும் பாருங்கள், இதில் பேசியுள்ளவற்றில் நமக்கு பிடிக்காத + ஒத்துவராத விசயங்கள் இருப்பின் அதை விட்டு விடலாம், ஆனா குழந்தைகள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டிய விசயங்கள் இங்கு பேசப்பட்டிருக்கு.

பெற்றோரின் கவலையீனம்தான் அதிக காரணம் என்கிறார்கள், அதிலயும் உண்மை இருக்கு, பெண்களோ ஆண்களோ அந்நியர்கள் யாரையும் நம்பிடக்கூடாது. ஸ்கூலுக்குப் போகும் குழந்தைகளை 24 மணி நேரமும் கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்க முடியாதுதானே, ஆனா அவர்களுக்கு நிறையப் புத்திமதிகள் சொல்லிக் கொடுக்கவேண்டியது பெற்றோரின் கடமையே.

[இந்த வீடியோவை 3 நிமிடம் ஓட விட்டுப் பாருங்கோ, பழசும் கலக்கப்பட்டிருக்கு]

நானும் சின்னனாக இருந்தபோது, எங்கள் அம்மா என்னை யாரோடும் போக விடமாட்டா, அப்பா, அம்மா, அண்ணன், மாமா இவர்களோடு மட்டுமே வெளியே எங்கேயும் போகலாம். 6 மணிக்கு வீட்டுக்குள் வந்திடோணும் இப்படி பல கட்டுப்பாடுகள் ஆனாலும் நல்ல சுகந்திரமாகவே வளர்ந்தேன்... இதில் அப்பாவின் அட்வைஸ் அதிகம் கை கொடுத்தது எனலாம்.. நேரம் இருப்பின் படிச்சுப் பாருங்கோ..

அப்பாவின் அட்வைஸ்..

 ஆனா அப்போ அது படு எரிச்சலாக இருந்தது, இப்போ நினைக்க அதுதான் சரியாகப் படுகிறது. முக்கியமாகப் பொம்பிளைப் பிள்ளைகள் ஒரு 16 வயசு வரும்வரையாவது கைக்குள்ளேயே வைத்து வளர்ப்பது நல்லதென்றே படுகிறது.

இங்கே வீடியோவில் இன்னொரு விசயம் அலசப்படுகிறது, அதுவும் எனக்கு முற்றிலும் உண்மை என்றே படுகிறது. அதாவது முன்பு எங்கட கண்ணதாசனின் கதை ஒன்று படித்தபோது எனக்கு ஒரு வசனம் நன்கு பிடித்திருந்தது, அதாவது அவர் சொன்னார்...”நம் தமிழ்ப் பெண்களிடம் உள்ள ஒரு கெட்டித்தனம் என்னவெனில், ஒரு அந்நிய ஆணுடன் பழகும்போது, நம் பெண்கள், தன் பிள்ளைகளிடம் அறிமுகம் செய்யும்போது, எடுத்த எடுப்பிலேயே .. இதோ இந்த “மாமா” வுக்கு ஹலோ சொல்லு, மாமாவுக்கு டாட்டா காட்டு” என, அந்நிய ஆணை தன் குழந்தைக்கு மாமா எனச் சொல்லுவதன் மூலம், அந்த ஆணை தனக்கு சகோதரனாக்கி விடுகிறார்கள்.. இது நம் தமிழ்ப் பெண்களின் புத்தி சாதுர்யமான ஒரு செயல்.. ஏனெனில் சகோதரராக எண்ணிப் பழகும்போது தப்பு எண்ணம் வர அங்கு இடமில்லை எனச் சொன்னார்.. அதைப் படிச்சு எனக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது, ஆனா...

நேற்று இந்த வீடியோவில் லக்ஸ்மி அவர்கள் சொல்லும்போது, அதிலும் ஒரு உண்மை தெரியுது... அதாவது நமக்கே தெரியாத அந்நியரை, குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும்போது, இவர் நம் அயலவர்... இவர் இன்னார் எனச் சொல்லாமல்.. நேரடியாக.. மாமா, அண்ணா, தாத்தா எனச் சொல்லு, என முறை சொல்லிக் கொடுத்து விடுகிறோம், இதனால குழந்தை என்ன பண்ணுகிறது, இம்முறையில் இருப்போரை நெருங்கிய சொந்தமாகவே எண்ணி, நெருங்கத் தயங்குவதில்லை. இதுவும் ஒரு விதத்தில் தப்புத்தானே.

இப்போ வெளிநாட்டவர்(வெள்ளையர்கள்), தம் நெருங்கிய ரத்த உறவை மட்டுமே, உறவு முறை சொல்வார்கள், ஏனையோரை எல்லாம்.. மிஸ்டர்.. மிஸிஸ் என பெயர் சொல்லியே அழைக்க குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பார்கள்... அப்போ ஓட்டமெட்டிக்காக தெரிந்துவிடுகிறது, பெயர் சொல்லி அழைப்போர் எல்லாம் நம் உறவினர் அல்ல.. அந்நியர்கள் அதனால கவனமாக இருக்கோணும் என்பது. ஆனா உறவுக்குள்ளும் தப்பு நடக்கிறதே.. அதை என்ன பண்ணுவது? எனும் கேள்வியும் வருது. நாம் நல்ல கவனமாக இருந்தும், தப்பு ஏற்படின் அதை விதி எனத்தான் சொல்லோணும், ஆனா முடிந்தவரை அலுப்பு பஞ்சி பார்க்காமல் நம் குழந்தைகளை நம் கைக்குள்ளேயே வைத்து வளர்ப்பதுதான் சிறந்தது. ஒரு குறிப்பிட்ட வயது வரையாவது.

இது ஒரு உண்மைக் கதை, வெளி நாட்டிலே ஒரு தமிழ்த் தம்பதிக்கு, ஒரு பெண் குழந்தை, அக்குழந்தைக்கு 3, 4 வயதாக இருந்தபோது, அவ் வீட்டுக்கு ஒரு 20 வயது தம்பி வாடகைக்கு இருக்க வந்திருக்கிறார். அப்போ அத்தம்பியை தன் சொந்த தம்பியாகவே அக்குழந்தையின் தாய் நம்பி, வீட்டிலே அனைத்து உரிமைகளும் கொடுத்து பழகி வந்திருக்கின்றனர். பின்னாளில் குழந்தைக்கு 7,8 வயதாகி பள்ளி செல்லும் நேரம், தாயும் தந்தையும் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கின்றனர்.

அப்போ இக்குழந்தை ஸ்கூல் விட்டு  3 மணிபோல வீடு வரும்போது, வீட்டில் தாய் தந்தை இருப்பதில்லை, இந்த வாடகைக்கு இருக்கும் மாமா என அழைக்கும் அத்தம்பிதான் இருப்பாராம். தாய் 5 மணிபோல வீட்டுக்கு வருவாவாம்.. அந்த இடைப்பட்ட 2 மணிநேரமும் இந்த மாமாவோடு குழந்தை விளையாடுவது வழக்கமாம். சின்ன வயதிலிருந்தே ஒன்றாக வளர்கிறதே.

அப்போ ஒருநாள், தாய் வீட்டுக்கு வருகிறாவாம், குழந்தை கதிரையில் முடங்கிப் படுத்திருக்கிறதாம், வாய் திறந்து எதுவும் பேசவில்லையாம், ஒரு பேயறைந்ததுபோல இருக்கிறதாம், இந்த தம்பி எங்கே என தேடினால்... 4,5 வருடமாக இருந்தவர் திடீரென தன் உடைமைகளோடு எஸ்கேப் ஆகியிருந்தாராம்... உடனே குழந்தையை ஹொஸ்பிட்டல் கொண்டு போய் செக் பண்ணினால், குழந்தையைப் பலாத்காரம் செய்திருக்கிறார்.. அந்த அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்ததாம் குழந்தை, ஏதோ அவர்கள் செய்த புண்ணியம் உயிர் போகவில்லை... அத்தோடு அத்தாய் வேலையை விட்டுவிட்டாவாம்.. வந்தபின் யோசிப்பதை விட, வருமுன் யோசிக்க வேண்டும்... தவிர்க்கவே முடியாது வேலைக்குப் போனால்தான் குடும்பத்தை ஓட்டலாம் எனும்போது வேலைக்குப் போகத்தான் வேண்டும், ஆனா நம்மவர்கள் பலர் ஆசை அதிகமாக இருப்பதனாலேயே வேலைக்கு போகின்றனர்.  "Prevention is better than cure".

மனதில் சஞ்சலம் என்பது யாருக்கும் எப்பவும் வரலாம், ஒரு ஆணையோ பெண்ணையோ... சில விசயங்களில்.. இவர் நல்லவர் , இவருக்கு தப்பான எண்ணம் வராது என்றெல்லாம் யாரையும் நாம் எடைபோட்டிடக்கூடாது, அதே நேரம் எல்லோரையும் சந்தேகக் கண்ணோடும் பார்க்கக்கூடாது...  “நம்ப நட, நம்பி நடவாதே”... இதுதான் நான் நினைக்கும் வசனம்.

இன்னுமொன்று இப்படி தவறு செய்வோரை, பெயிலில் விடவே கூடாது, கடும் தண்டனை கொடுத்தே ஆகவேண்டும் என்பதே என் கருத்தும்.

நாம் எப்பவுமே நம் பிள்ளையைக் காட்டிலும் அடுத்தவர் பிள்ளையை அதிகமாகக் கவனிக்க பழகவேணும், நம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கோணும். சின்ன வயதில், அப்பா எங்களுக்கு சொல்லுவார்.. உங்கள் நண்பர்களிடம் ஒரு பென்சிலோ, புத்தகமோ இரவல் வாங்கினால், திரும்பக் கொடுக்கும்போது மிக மிக பத்திரமாக கொடுக்கோணும், உங்களுடையதைவிட அடுத்தவரின் பொருளுக்கு அதிகம் மதிப்பு + பாதுகாப்பு கொடுக்கோணும் என..

அது அடி மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்தமையாலோ என்னவோ, நான் ஒரு ஸ்ரோறி புக் வாங்கி படித்தாலும், திரும்பகொடுக்கும்போது அதுக்கு அழகா கவர் எல்லாம் போட்டு, கிழிந்திருந்தால் ஒட்டி புதிதுபோல கொடுப்பேன்.. இது எனக்கு மிகவும் பிடித்துத்தான் விரும்பியே செய்வேன்...

இதேபோல், எங்கள் வீட்டுக்கு என்னை நம்பி ஒரு குழந்தையை விட்டால்ல், என் குழந்தையைக் காட்டிலும் அதையே அதிகம் கவனிப்பேன், அன்றைய சமையல் மெனுவைக்கூட, முதலில், வந்திருக்கும் அக் குழந்தையிடமே கேட்பேன், பின்புதான் நம் வீட்டவர்களிடம் கேட்பேன், அக் குழந்தையின் உடையில் தையல் ஏதும் கழண்டிருப்பின்கூட அதை தைத்துப் போட்டு விடுவேன், அதன் பெற்றோருக்கு தெரியாவிட்டாலும் கடவுளுக்கு தெரியும் என நினைப்பேன். நம் பிள்ளைகளுக்கும் இதை சொல்லுவேன்.. நம்மைப் பார்த்தே[பெற்றோரை] நம் குழந்தைகளும் வளர்வார்கள் என்பது உண்மைதானே.

இன்னொன்று பல வீடுகளில், அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்க்க குழந்தைகளை பெற்றோர் அனுமதிப்பதில்லை.. நான் சொல்வது அடல்ட்ஸ் நிகழ்ச்சிகளல்ல.. பொதுவான சில நிகழ்ச்சிகள்... உதாரணத்துக்கு சொல்வதெல்லாம் உண்மைபார்க்ககூட சில வீடுகளில் தடை போடுகிறார்கள் என அறிந்தேன், எனக்கு அது தப்பாகவே தோணும். நான் நினைப்பது பிள்ளைகளோடு கூடவே இருந்து, அவர்களையும் உலகில் என்ன பிரச்சனைகள் எல்லாம் நடக்குது என பார்க்க வைக்கோணும். “அன்னம்போல் வாழ கற்றுக் கொடுக்கோணும்”... நல்லவற்றைப் பொறுக்கவும் தீயவற்றை ஒதுக்கவும் சொல்லிக் கொடுக்கோணும். பிரச்சனைகளைப் பார்த்தால்தானே.. எது தப்பு, எதனால் பிரச்சனை வருகிறது, எதை நாம் செய்யக்கூடாது என்பது தெரியவரும். மொத்தத்தில்.. பார்க்காதே அது கூடாது என ஒதுக்கிட்டால், ஒரு பிரச்சனை என வரும்போது அதை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் முழிக்கும் எல்லோ குழந்தை.

பிள்ளைகள் விரும்பமாட்டார்கள், ஆனாலும் அவர்களுக்கு போறிங் வந்திடாத விதமாக அப்பப்ப விளையாட்டுப்போல நிறைய அட்வைஸ் சொல்லிடோணும்... அந்நேரம் அது கசப்பாக இருப்பினும் மனதில் பதிப்பார்கள் என்பது, நான் என் வாழ்நாளில் கண்ட உண்மை. இப்பகூட எங்கள் அப்பாவின் அட்வைஸ்களை மனதில் நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் சொல்லும்போது, சின்ன வயதில் கோபத்தோடும் எரிச்சலோடுமே கேட்டிருக்கிறேன், ஆனா என் வாழ்க்கையை நல்ல வழியில் வழி நடத்த அவை மிகவும் உதவியாக இருந்தது/இருக்கிறதென்பது உண்மையே.

ஊசிக்குறிப்பு:-
நமக்கு நம்பிக்கையான ஒருவரிடம் திடீரென ஏற்படும் அவமானமும், துரோகமும், அடுத்த நபர் மீது நம்பிக்கை வைக்கும்போது, ஆயிரம் முறை யோசிக்க சொல்லுது ..
இப்படிக்கு, உங்கள் அன்பிற்கும் பண்புக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய..  “புலாலியூர்ப் பூஸானந்தா”
==================================================================================================

52 comments :

  1. எனக்கு கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வருது .யாராவது ஒரு கோலி சோடா உடைச்சி குடுங்க ப்ளீஸ் ..
    இந்த போஸ்டை அதிராவா எழுதினர் !!!

    அதிரா செம அட்டகாசமா எழுதியிருக்கீங்க ..நானா ஒவ்வொரு வரியா ஹைலைட் செய்து பதில் தர விரும்புகிறேன் ,,
    தற்சமயம் ரெவரியின் ரெசிப்பி paella ரைஸ் செஞ்சுகொண்டிருக்கேன் முடிச்சதும் வருவேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மிஸிஸ் ஏஞ்சல் வாங்கோ... அச்சச்சோஒ என் போஸ்ட் படிச்சு எனக்கே என்னமோ ஆச்சே... ஹா ஹா ஹா வாங்கோ அஞ்சு...

      எனக்கே டவுட்டாவே வருது.. நைட் இந்த வீடியோ முழுவதும் பார்த்தனா.. என்னால தாங்கவே முடியல்ல அப்படியே கொதிச்சுப் போயிட்டேன்ன்.. உடனேயே போஸ்ட் போட நினைத்து, நெட் பிரச்சனை தீரட்டும் என இருந்தேன், இன்றுதான் சோல்வ் ஆச்சு.

      சரி சரி பிலா ரைஸ் சமைச்சிட்டு வாங்கோ, எங்களுக்கும் இன்று பேரண்ட்ஸ் ஈவினிங் இருக்கு, முடிச்சிட்டு வந்திடுறேன்.

      ஆமா நம்ம ரெவெரி என்ன ஆனார்ர்?.. ஆளைக் காணம் ஊருக்குப் போனதோடு இப்பக்கம் வருவதில்லைப்போலும்.

      Delete
    2. பைலாவை இங்கேயும் பார்ஷல் அனுப்புங்க)))

      Delete
    3. நேசன்..... பைலா, ஆடத்தான் முடியும், பார்சலில் எல்லாம் அனுப்ப முடியாதாக்கும் ஹா ஹா ஹா:)

      Delete
  2. நான் மனதில் நினைத்த அத்தனை விஷயங்களையும் எழுதியிருக்கீங்க அதிரா சூப்பர் ...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அஞ்சு.. இன்னும் நிறைய வந்துது மனதில், ஆனா போஸ்ட் நீண்டிடும் இன்னொருதடவை பார்க்கலாம் என விட்டிட்டேன்.

      Delete
  3. நல்லதொரு கட்டுரை வேலைக்கு செல்லும் நேராமாகிவிட்டதால் வந்து மீண்டும் கருத்துகள் இடுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ.. மீண்டும் வாங்கோ நன்றி.

      Delete
  4. சொன்ன கருத்துக்கள் எல்லாம் சரி தான்... முத்தான ஆலோசனைகள் தான்... பாராட்டுக்கள்... ஆனால்...

    இதெல்லாம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி... இதைப் பார்த்து தான் உங்களுக்கு பல ஞானங்கள் வருகிறதோ...? கொடுமை சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ..

      //இதெல்லாம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி... இதைப் பார்த்து தான் உங்களுக்கு பல ஞானங்கள் வருகிறதோ...///
      அச்சச்சோ என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க.. அது குருவி இருக்கப் பனம் பழம் விழுந்த கதைபோல நினையுங்கோ... உள்ளே இருந்ததை வெளியே கொண்டுவர, இந்த நிகழ்ச்சி ஒரு உந்துதலாக இருந்துது அவ்வளவே.

      எங்கட “சுகிசிவம்” அங்கிள் சொல்லியிருக்கிறார்... சொன்னதைக் கவனிக்கக்கூடாது:) சொல்ல வந்ததைத்தான் கவனிக்கோணும் என:) ஹா ஹா ஹா.. நிகழ்ச்சியை விடுங்கோ நான் என்ன சொல்ல்லுறேன் என்பதை மட்டும் கவனியுங்கோ..:).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா எப்ப பார்த்தாலும் ஒரு சுவீட் 16:) ஐ மிரட்டுறார்:)[நான் என்னைச் சொன்னேன்:)].

      Delete
  5. (உங்களுக்கு பிடித்த, பாழாய் போன திரட்டி) இந்தப்பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்... +1 சந்தோசம் தானே...? நன்றிங்க...

    ReplyDelete
    Replies
    1. ///(உங்களுக்கு பிடித்த, பாழாய் போன திரட்டி)///
      ஹா ஹா ஹா என்னைத் திட்டுறீங்களோ?:) தமிழ்மணத்தை திட்டுறீங்களோ?:), ஒவ்வொரு தடவையும் திட்டிப்போட்டும் வோட் போடுறீங்க:) ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  6. //நிலவுக்குப் பயந்து பரதேசம் போக முடியுமோ”?, பிரச்சனை எங்கும் வரலாம், யார் ரூபத்திலும் வரலாம்.//

    மிக சரியா சொன்னிங்க பிரச்சினைகள் எங்கும் வரலாம் நிலவில் என்ன நிலையோ ? ..பேய்க்கு பயந்து பிசாசுகிட்ட மாட்டின கதையாகிடும் ..எல்லாருமே குட் டச் பேட் டச் சொல்லிக்கொடுத்த மட்டும் போதாது பிள்ளைகளுடன் ஒளிவுமறைவின்றி பேசவேண்டும் ..நம்ம பிள்ளையை கண்காணிப்பது என்பதைவிட அவர்களோடு பழகுபவர்கள் நம் அண்டைஅயலார் நம் சுற்றத்தையும் நன்கு கவனித்தே பழக விட வேண்டும் .எதையும் மறக்கக்கூடாது அம்மாஅப்பாவிடம் என்பதை வலியுறுத்த வேண்டும் .குறிப்பா பிள்ளை முன் சிறு வாக்குவாதமும் செய்ய கூடாது .
    என் நண்பி ஒருத்தி இப்படி பெற்றோர் எந்நேரமும் சண்டை போட்டதாலேயே வழி தவறிப்போனாள் ..வீட்டில் நிம்மதி இல்லை என்று நிம்மதியை தேடி படுகுழியில் வீழ்ந்தாள் :(
    குறிப்பா அவங்கம்மா சொல்வார்களாம் //வயிற்றில் நெருப்பை கட்டிட்டிருக்கேன் இவளை வெளியே அனுப்பும்போது..இப்படி முட்டாள்தனமா பேசியே அவங்கம்மா அந்த பொண்ணை வழிதவறிப்போக வச்சிட்டாங்க

    ReplyDelete
    Replies
    1. உண்மையே அஞ்சு, பிள்ளைகளின் முன்னால் பெற்றோர் நன்கு சிரித்துப் பேசி இருந்தாலே, பிள்ளைகள் தானாக எல்லாம் சொல்லுவார்கள். ஆனா இக்காலம் அதிகம் ஸ்ரெஸ் நிறைஞ்சுபோய் இருப்பதால் பல வீடுகளில் பெற்றோர் நேரமின்றி தவிக்கின்றனர்... இதனாலேயே குழந்தைப் பருவத்தில் கோட்டை விட்டுப்போட்டு அவர்கள் வளர்ந்தபின்பு இழுத்துப் பிடிக்க நினைக்கிறார்கள் அது மிகவும் கஸ்டமே. நமக்கு இருக்கும் எந்த பிரச்சனையையும் குழந்தைகளுக்கு காட்டாமல் அன்பா அணைச்சு சொல்லிக் கொடுக்கோணும்.. அதுக்கு பெற்றோருக்கு நிறைய பொறுமை தேவை.

      Delete
  7. //ஆனா நம்மவர்கள் பலர் ஆசை அதிகமாக இருப்பதனாலேயே வேலைக்கு போகின்றனர். "Prevention is better than cure"//

    அதேதான் அதிரா ..எனக்கு தெரிந்த பலர் மொர்ட்கேஜ் சீக்கிரம் முடிக்கணும்னு கணவனும் மனைவியா இரவு பகல் பாராம வேலை செய்றாங்க ,,அவங்க பிள்ளைங்க தனியே துணையின்றி திசை மாறிப்போறாங்க ..

    //இவருக்கு தப்பான எண்ணம் வராது என்றெல்லாம் யாரையும் நாம் எடைபோட்டிடக்கூடாது//

    மனித மனதுக்குள் இரண்டு மிருகம் ஒளிந்திருக்கு நல்ல மிருகத்துக்கு தீனி போட்டு வளர்க்கும்போது அவன் நல்லவனாயிருப்பான் /ள் ..துஷ்ட மிருகத்துக்கு தீனிபோட்டு வளர்க்கும்போது துஷ்டனா இருப்பான் /ள் .

    ஒவ்வொரு மனுஷனிடமும் எந்த மிருகம் இருக்குனு கண்டுபிடிக்க கஷ்டம் :( தப்பு செய்ய சந்தர்ப்பம் அமையும்வரை எல்லோரும் ஜெம் தான் ..6கழுதை வயசாற நமக்கே இன்னும் நல்லது கெட்டது கண்டுபுடிக்க கஷ்டமாயிருக்கு சின்ன பிள்ளைங்க என்ன செய்வாங்க ..அதிகமா ஜாக்கிரதைன்னு சொன்னாலும் எதை பார்த்தாலும் சந்தேகம் வரும் பிள்ளைங்களுக்கு ..உண்மையிலேயே நாம் வளர்ந்த சூழல் எவ்ளோ நல்லது ..
    இந்த கால பிள்ளைங்க உண்மையில் பரிதாபத்துக்குரிய ஜீவன்க

    ReplyDelete
    Replies
    1. one donkey = 3 year so 6 donkeys = ??????

      Delete
    2. ஹா ஹா ஹா அதேதான்.. தூங்கிக்கொண்டிருக்கும் மிருகத்தை எழுப்பக்கூடாது:) பிறகு அது என்ன பண்ணும் என நமக்கே புரியாது:).

      கரெக்ட் அஞ்சு, இந்த வயசிலும் இப்பவும் நாங்க ஏமாந்து கொண்டிருக்கிறோம்... அப்போ குழந்தைகளை ஏமாத்துவது சுலபம்தானே.

      Delete
    3. /@anju//one donkey = 3 year so 6 donkeys//

      This calculation suits you:)..

      but mine is.. 6 donkeys minus 2 years= sweet 16:) haa haa haa...

      Delete
  8. //அது அடி மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்தமையாலோ என்னவோ, நான் ஒரு ஸ்ரோறி புக் வாங்கி படித்தாலும், திரும்பகொடுக்கும்போது அதுக்கு அழகா கவர் எல்லாம் போட்டு, கிழிந்திருந்தால் ஒட்டி புதிதுபோல கொடுப்பேன்//

    ஹையோ ...ஹையோ நானும் இந்த வேலையை செய்வேன் ..போன வருஷம் லைப்ரரி புக் ஒன்னு கிழிஞ்சிருந்ததா அதை ஒட்டி குடுத்தா லைப்ரரி அக்கா கேக்குது உங்க வீட்டு குழந்தை கிழிச்சிட்டுன்னு ஒட்டினியான்னு ..கர்ர்ர்ர் ..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இதுக்குத்தான் சொல்வாங்க.. நல்லதுக்கு காலமில்லை என.

      Delete
  9. நான் எங்க வீட்டுக்கு வர பிள்ளைங்களை தான் நல்லா கவனிப்பேன் மகளோட ப்ரண்ட்ஸ் எல்லாரும் சொல்லுவாங்கலாம் இவகிட்ட உங்கம்மா ஸோ ஸ்வீட் வெரி கைன்ட் என்று :)
    இதைப்பற்றி ஒரு போஸ்ட் ஒன்னு நினைவுக்கு வருதே :)

    ReplyDelete
    Replies
    1. போடுங்கோ போடுங்கோ... அப்பப்ப நிறைய போஸ்ட் நினைவுக்கு வரும், உடனே போட்டால்தான் உண்டு, இல்லையெனில் ஆற விட்டிடுவோம்.

      Delete
  10. //எதை நாம் செய்யக்கூடாது என்பது தெரியவரும். மொத்தத்தில்.. பார்க்காதே அது கூடாது என ஒதுக்கிட்டால், ஒரு பிரச்சனை என வரும்போது அதை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் முழிக்கும் எல்லோ குழந்தை.//

    மிக மிக சரி ...எல்லாவற்றையும் தெரிந்து கற்றுக்கொடுத்து வளர்ப்பது தான் நல்லது ..வெளிநாட்டு வாழ்க்கையில் பேரண்ட்சும் பிள்ளைகளும் நட்பு போல பழகணும் .என் மகள் எல்லாவற்றையும் எங்களிடம் சொல்வா ..இங்குள்ள LGBT விஷயங்களை கூட தயங்காமல் விவாதிப்போம் இதெல்லாம் நம்மூரில் சாத்தியப்பட்டிருக்காது .
    இவள் டைரக்டா //மாம் வாட்ஸ் யூவர் ஒபினியன் என்றே கேப்பா !! எதையும் வெளிப்படையா விவாதிக்கும்போது தன்னம்பிக்கை வரும் பிள்ளைகளுக்கு

    ReplyDelete
    Replies
    1. பிள்ளைகள் எதுபற்றிக் கேள்வி கேட்டாலும், நாம் கூச்சப்படாமல் பதிலை தெளிவா சொல்ல முதலில் கற்றுக் கொள்ளோனும்... இக்காலத்துப் பிள்ளைகள் ஸ்மாட்.. அதுக்கேற்ப நம்மை நாம் ரெடி ஆக்கோணும்.

      Delete
  11. விளக்கம் அருமை நிச்சயம் சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நம் மழலைகள் நிலை! வீடியோ இனித்தான் பார்க்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ.. நலம்தானே?.. உண்மைதான்.. எதைப் பார்த்தாலும் படிச்சாலும் பயம்மாத்தான் இருக்கு மிக்க நன்றி நேசன்.

      Delete
  12. அப்புறம் இந்த ஆன்ட்டி அப்படின்னு இது வரைக்கும் யாரும் என்னை கூப்பிடலை :) பேரே நல்லது லூயிஸ் கூட என்னை ஜோய் னு தானே கூப்பிடறான் :) அப்டியே மெயின்டைன் பண்ணிப்போம்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உலகம் எதுக்கோ கவலைப்படுது.. இதில பிஸ் ஆன்ரியின் கவலையைக் கொஞ்சம் கேளுங்களேன்ன் எல்லோரும்:)).. நீங்க ஆன்ரி இல்லை அம்மம்மா:))..

      Delete
  13. இது பெற்றோர்கலுக்கு நல்ல அறிவுரையாக இருக்கும் நன்றி

    ReplyDelete
  14. எனக்கு இதுமாதிரி தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் இஷ்டம் இல்லை. என் பாஸ் அவ்வப்போது பார்ப்பார். எனக்கு எரிச்சல் வரும். இந்த மாதிரி ஊர்வம்பு நிகழ்ச்சிகள் இப்போது எல்லா மொழியிலும் வந்து விட்டது. ஊர்த்வசி, குஷ்பூ என்று ஏகப்பட்ட நீதிபதிகள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ....

      ஹையோ முருகா, பழனி ஆண்டவா.. திருச்செந்தூர்ப் பெருமானே.... you toooooo bro Sriram?????? என்னால முடியேல்ல வைரவா:)... பிடிக்காத தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கே இங்கு முக்கியத்துவம் கொடுத்து, அதைப் பற்றியே பேசிட்டுப் போயிட்டீங்களே, என் பதிவு அதுவல்லவே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ... நான் இங்கு சொல்ல வந்தது அந் நிகழ்ச்சியைப் பற்றி அல்லவே.. ஓ மை கடவுளே....

      விடுங்கோ விடுங்கோ என்னை ஆரும் தடுக்க வாணாம்ம்ம்.. ரிக்கெட் கிடைக்காட்டிலும் பறவால்ல:) நான் நடந்தே போயிடுறேன் காசிக்கு... நோஓஓஓஓஓஓஓ பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஒப்ப்ப்ப் மைன்ன்ன்ன்ன்ண்ட்ட்ட்ட்ட்:)).. அஞ்சூஊஊஉ வெளில வாங்கோ.. தனியா போக போறிங்கா இருக்கு..:)

      ஹா ஹா ஹா மிக்க நன்றி ஸ்ரீராம் வருகைக்கு. இந் நிகழ்ச்சி எப்பவோ தொடக்கமே அமெரிக்காவில் பிரித்தானியாவில்... அன்று தொட்டு இன்றுவரை நடந்திட்டே இருக்குது.. Trisha, The Jeramy Kyle show என்றெல்லாம்.. சரி சரி அதை விடுங்கோ.. வரவுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  15. சகோ அதிரா/அதிரா நாங்கள் இருவருமே இது போன்ற நிகழ்ச்சிகள் பார்ப்பதே இல்லை!!!! ஆனால் உங்கள் கருத்துகள் அனைத்தும் உண்மை! மிகவும் சரியே! கீதாவின் வீட்டில் டிவி யே இல்லை!!!

    பூஸானந்தாவின் மொழி அருமை!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன், கீதா வாங்கோ.. நீண்ட நாளாகக் காணாமல் போய் வந்திருக்கிறீங்க.. இருங்கோ சுடச்சுட கடலை வடையும் நல்ல ஸ்ரோங் ரீயும் ஊத்துறேன் குடிச்சிட்டுப் போகலாம்...:).

      ///சகோ அதிரா/அதிரா நாங்கள் இருவருமே இது போன்ற நிகழ்ச்சிகள் பார்ப்பதே இல்லை!!///
      ஹையோ ஆண்டவா.. திருச்செந்தூரில் வலது மூலையில் இருக்கும் பழனி முருகா... நான் அந்நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க இல்லயே... வீடியோவை இணைத்துவிட்டதுதான் என் தப்போ?..

      என்னாது கீதா வீட்டில் ரீவி இல்லயோ? அவ்வ்வ்வ்வ்...[அது நல்லதுதான் இப்போ ரீவியோடு மினக்கெட நேரம் கிடைப்பதில்லை]. எங்கள் வீட்டில் மேலே கீழே எல்லாம் இருக்கு... ஆனா தமிழ் சனல்கள் இல்லை, பிள்ளைகள் X Box game விளையாடுவார்கள்... இப்போ எல்லாமே வயலெஸ் இண்டநெட்மூலம்தானே இயங்குது அதனால்.. இதனூடாக[X Box] நாம் அனைத்து நிகழ்ச்சிகளும் பார்க்கலாம் விரும்பும்போது.. யூ ரியூப், கூகிள் அனைத்தும்.

      //பூஸானந்தாவின் மொழி அருமை!!! //
      ஹா ஹா ஹா மியாவும் நன்றி.

      Delete
  16. ஸ்ரீராம் சொன்னதே எனது கருத்தும்!

    ஊர்வம்பு மட்டுமல்ல நாலு சுவற்றுக்குள் இருக்க வேண்டியவை தீர்க்கப்பட வேண்டியவை முன்பெல்லாம் கிராமத்தில் பஞ்சாயத்து என்று ஊருக்குத் தெரியும் அருகில் இருக்கும் எட்டுப்பத்து ஊர்களுக்குத் தெரியும்...தண்டோரா போட்டது போல் ஊதி ஊதிப் பெரிசாகி என்று..பாசிங்க் ஆன் த சீக்ரெட் விளையாட்டு போல...இப்போது உலகம் பூரா தெரிகிறது...டி ஆர் பி ரேட்...அதிலும் அதில் பஞ்சாயத்து பண்ண வரும் குஷ்பு, ஊர்வசி, முன்பு லஷ்மி, எல்லோருமே அதற்குத் தகுதியானவர்களா என்ற கேள்வியும் எழுகிறது....அதுவும் நிறைய மூக்கு உறிஞ்சினால் ரேட் கூடும். என்னவோ போங்க அதிரா...சரி எனக்கு எதுக்கு ஊர் வம்புஸ்!!! விடுங்க..ஹிஹிஹிஹ்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ///ஸ்ரீராம் சொன்னதே எனது கருத்தும்!///

      ஹா ஹா ஹா அவரைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்:) இப்போ நீங்களுமோ?:).. கொஞ்சம் சகோ ஸ்ரீராம் ஐயும் கூட்டிக்கொண்டு தேம்ஸ் கரைக்கு ஒருக்கால் வர முடியுமோ கீதா?:).. ஹா ஹா ஹா.. பயப்பூடாதீங்க ச்ச்சும்மாதான்:).

      Delete
  17. சரி சரி ஸ்ரீராமுக்கு உங்க பதில் பார்த்தாச்சு...காசிக்குப் போனால் என்னையும் கூட்டிக்கோங்கோ...நானும் வாரென்...நடந்தே போயிடலாம்...ஊர் வம்பு கிடைக்குமே ஹிஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ////காசிக்குப் போனால் என்னையும் கூட்டிக்கோங்கோ///

      எனக்கொரு பயமொயி:) நினைவுக்கு வருது..:) “ஆடு கத்தியைக் கொடுத்தே.. என்னை வெட்டு வெட்டு எண்டதாம்”... ஹா ஹா ஹா.. மிக்க மிக்க நன்றிகள் துளசி அண்ணன்,கீதா...

      தாமதமானாலும் பழைய பதிவெல்லாம் தேடிப் படிச்சு கொமெண்ட்ஸ் கொடுத்திருக்கிறீங்க.. அனைத்துக்கும் பதில் போடுவேன்.. மிக்க நன்றி.

      Delete
  18. Replies
    1. வாங்கோ ஆசியா வாங்கோ, இப்போ எல்லாம் புளொக்கில் கால் வைக்கவே பயப்படுறீங்க.. இருப்பினும் மறக்காமல் வாறீங்க மிக்க நன்றி.

      Delete
  19. /நாம் அனைவருமே, அனைத்துக் குழந்தைகளையும் நம் குழந்தைகளாக எண்ண வேண்டும்.//

    அதேதான் அதிரா நானும் நினைப்பது ..எல்லாருமே நல்லவங்களா இருந்துட்டா கெட்டது என்ற வார்த்தையே இல்லாம போயிடணும்னு ஒரு ஆசை இல்லை பேராசைனு கூட சொல்லலாம் ..எதையும் பொறுத்துக்கொள்ளலாம் ஆனால் பாலர் மீது பாலியல் வன்முறை கொடுமையான செயல்..இதற்கு கடும் சட்டங்கள் தண்டனைகள் தரணும் ..அதெல்லாம் கனவுதான் ..நாம் கடும் தண்டனை என்று சொல்லுவிட்டிருக்கற நேரத்தில் ஏதாவது ஒரு பேனா தண்டனைகள் திருந்தவே ஆகவே வன்முறை வேண்டாம்னு எழுத துவங்கியிருக்கும் :( நம் நாட்டில் கிரிமினல்களை பேட்டி எடுத்து போடும் சானல்களை அவன் எப்படி செய்தான்னு விளக்கும் காணொளிகளை பரப்பும் கேவல ஊடகங்கள் இருக்கும்வரை ,இந்த கேடுகெட்ட மிருகங்களுக்கு வக்காலத்து வாங்கும் முட்டாள் கூட்டம் இருக்கும் வரை ..குற்றங்கள் குறையாது .:( பெற்றோர் ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளை கண்ணின்மணிபோல காப்பதுதான் நல்லது .
    யாரையும் எவ்விதத்திலும் பாதிக்காத நல்ல சமூகத்தை உருவாக்கணும் பெற்றோர்களும் ..

    ReplyDelete
    Replies
    1. உண்மை அஞ்சு, இப்போ பிரச்சனைகளுக்கு ஒரு வயது எல்லை போட முடியவில்லை... வயதானோரும் இவ்வன்முறையில் ஈடுபடுகின்றனர், சின்னப் பையனும் இதில் ஈடுபடுகிறார்.. அதேபோல.. படிக்காதவர் அறியாமையால் பிழை விட்டார் எனச் சொல்ல முடியாதளவுக்கு.. நன்கு படித்தோரும் தவறு இளைக்கின்றனர்... அப்போ நாம் தான் நம்/ அனைத்துக் குழந்தைகளைப் பாதுகாக்கோணும், மிகுதி இறைவன் கையில்...

      Delete
    2. மீ டூ உங்கள் இருவருடன்!!! எல்லா குழந்தைகளும் நம் குழந்தைகள் போல!!!! உங்கள் கருத்துகளுடன் ஹைஃபை!!

      சரி சரி அதிரா நான் தேம்ஸ் நதிக்கரைக்கு வர ரெடி...ஏஞ்சலும் வந்துடுவாங்கோ...ஓடத்தில் போவோமா ஊர்கோலம்...எல்லாம் சரி டிக்கெட்டும், விசாவும் அனுப்பிடுங்கோ..ஹிஹிஹிஹி விடுங்கள்...என் மகன் இருப்பது ஆரெகனில்-அமெரிக்கா. அதுக்குச் செல்ல பெரும்பாலும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்தான் அவன் புக் செய்யச் சொல்லுவான். அப்படிச் செய்தால் கண்டிப்பாக உங்கள் இருவரையும் சந்தித்துவிட்டுத்தான் செல்வேன்...ஆனால் உங்கள் ஊருக்குள் வர வேண்டுமானால் பல ரூல்ஸ் இருக்கே!! ஜஸ்ட் ட்ரான்சிட் வாங்கக் கூட...

      கீதா

      Delete
    3. மீள் வருகைக்கு நன்றி கீதா... மிக்க சந்தோசம், எதுக்கும் நான் ஒருக்கால் எங்கட குயின் அம்மம்மாவைப் போய்ப்பார்த்து இதுபற்றிப் பேசிப்போட்டு வாறேன்ன்...

      ஹையோ அஞ்சு இப்போ எதுக்கு பியூட்டி பாலருக்கு ஓடுறீங்க?:) ஹா ஹா ஹா கீதா நாளைக்கே வரமாட்டா.. அதுக்கு நாள் இருக்கு.. ஹா ஹா மிக்க நன்றி கீதா.

      Delete
    4. சீக்கரம் வாங்க கீதா ..குண்டு பூனையை ஆற்றில் தள்ளிவிட ஒரு கை குறையுது :)

      Delete
  20. இதில் 5-ம் நம்பர் வோட் என்னோடது. இது மிகவும் பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன் மிக்க மிக்க நன்றிகள்.

      Delete
  21. //ஒரு பிரச்சனை என வரும்போது அதை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் முழிக்கும் எல்லோ குழந்தை.//
    இவ்ளோ பிரச்சினைகளுக்கு காரணமே இந்த பெற்றோர் கண்டவரை நம்பி குழந்தைகளை விடுவதுதான் மேலும் அந்நியரை அவர் உள்மன விகாரம் தெரியாமல் குழந்தைகளுடன் பழக அனுமதிப்பதும் பெற்றோரே ..
    இன்னோர் விஷயம் இருக்கு அதிரா இந்த பாலியல் வன்முறையால் ஆண் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படறாங்களாம் ..

    ஒரு அருமையான பதிவு எழுதியிருக்கீங்க ஆனா எல்லார் பார்வைக்கும் அந்த லட்சுமி இராமச்சந்திரன் மட்டுமே கண்ணுக்கு தெரியறாங்க .அபியூஸால் .பாதிக்கப்பட்டோர் இன்னும் விடுதலை பெறாமல் :(
    சரி எல்லாருமே வன்முறை அபியூஸ் பற்றி சொல்றாங்க அந்த குழந்தைகள் மனநிலை :( நினைச்சு பார்க்கும்போதே கண்ல ரத்தக்கண்ணீர் வருது ..இப்போ சமீபத்தில் ஒரு படம் இதே சம்பவத்தை அடிப்படையா கொண்டு வந்திருக்காம் ..பெயர் நிசப்தம் .தவறு நடப்பதை பெற்றோர் தடுக்க முடியும் அப்படி நடந்தாலும் ..எதுவும் நடக்கும் இந்த காலத்தில் ..எனவே எதிர்பாரா விதமா தவறு நடந்தாலும் அதிலிருந்து பிள்ளைகளை மீட்கும் இயல்பு வாழ்க்கைக்கு திருப்ப பெற்றோர் முயலனும்

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.